Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

தமிழக சரித்திரத்தில் ஒரு வீர மங்கை




18 ஆண்டுகள் தென்னாட்டைக் கட்டி ஆண்ட வீர அரசி, ராணி மங்கம்மாள்!!
இராணி மங்கம்மாள், 18 ஆண்டுகள் மதுரையை ஆண்ட அரசியார். இவர் ஒரு திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர்.

எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர்.
18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட வீரமிகுந்த அரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது. 

மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார்.

ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், இஸ்லாமிய முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. மிகத்திறமையான இராஜ தந்திரியாகவும் தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் இப்பகைகளை மிகத் திறமையுடன் முறியடித்தார். 

இவர் ஆட்சிக் காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார்.

இந்துதர்ம நெறிபெற்ற ராணி மங்கம்மாள், மத நல்லிணக்கத்தில் ஆர்வம் காட்டியவர். கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களுக்கும் மங்கம்மாள் மானியம் அளிக்கத் தவறவில்லை. 
1701-ல் இசுலாமியர்களின் நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காகவும் திருச்சியிலுள்ள நிலங்களை மானியமாக வழங்கியது குறித்துக் கல்வெட்டு உள்ளது. கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்து வந்த பாதிரியார்களை, தஞ்சாவூரை ஆண்டு வந்த மராத்திய மன்னன் முகமது ஷாஜி வன்மையாக எச்சரித்தான். மேலும் அந்தப் பாதிரியார்களை நாடு கடத்த முகமது ஷாஜி உத்தரவிட்டான். 
அவனின் உத்தரவை மீறி கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்த பாதிரியார்கள் மீதும், இஸ்லாமல்லாத மற்ற மதத்தினர் மீதும் 'ஜிஸ்யா' எனப்படும் இஸ்லாமிய வரிகளை சுமத்தினான். 

முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினரிடம் கடுமையாக வசூலிக்கப்படும் வரிக்குப் பெயர் தான் ஜிஸ்யா ஆகும். இவ்வாறு கடுமையான வரிகளில் இருந்து தப்பிக்கவும் மக்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர். வல்லத்தில் ஒரு பாதிரியார் கொல்லப்பட்டுள்ளார். (ஆதாரம்:வீரமாமுனிவர், திருக்காவலூர் (ஏலாக்குறிச்சி) கோவில் வரலாறு- கையேடு).

அப்போது மங்கம்மாள் மதுரையை ஆண்டு வந்தார். இதனை இராணி மங்கம்மாள் கடுமையாக எதிர்த்தார். முகமதுக்கு பலமுறை கடிதம் அனுப்பிக் கண்டித்தார். இராணி மங்கம்மாள் மக்கள் நலம் பேணும் பல அறச் செயல்களைச் செய்தார். 

மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரம் அமைத்தார். அது 'மங்கம்மாள் சத்திரம்' என இன்றும் அழைக்கப்படுகிறது. புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை ' மங்கம்மாள் சாலை' என அழைக்கப்படுகிறது. 

குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஆணையிட்டார். பொது மக்களுக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச் செய்தார் . 

தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார்.
கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார். 

வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார். தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாகும்.

மிகத்திறமையாக ஆட்சி செய்த இராணி மங்கம்மாளால் தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவழிக்க இயலாமல் போனது. எனவே, தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர், இராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். எனவே தனது பேரனாலேயே அவர் சிறையிலிடப்பட்டார். 

இதுவே அவரது வாழ்நாளின் இறுதியாயிற்று இராணி மங்கம்மாள் 1706- ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.[ராணி மங்கம்மாள் வரலாறு நூலில் இருந்து]
இத்தகு பெரும்புகழ் மிக்க ஒரு ராணியாரை நாம் மறக்கலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக