Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

காற்று இல்லாத போதும் தூற்று !

Image result for காற்று இல்லாத போதும் தூற்று !


ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்ததும் மாணவர்கள் அனைவரும் அமைதியானார்கள் என்று பொதுவாக சொல்லி விட முடியாது. கடைசி வரிசையில் இருப்பவர்களில் சிலர் நூதனமான ஒலி எழுப்பி தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்வது மேல்நிலைப் பள்ளிகளில் சகஜம்தானே. அப்படித்தான் இருந்தது. ஆசிரியருக்குத் தெரியும், இந்தப் பருவத்தில் மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அதுவும் பதினொன்றாம் வகுப்பு, ஏனென்றால் இந்த வகுப்பிற்கு அரசு பொதுத்தேர்வு கிடையாது. பத்தாம் வகுப்பு என்கிற எர்த்துக்கும், பன்னிரெண்டாம் வகுப்பு என்கிற மின்சாரத்திற்கும் இடையில் பதினொன்றாம் வகுப்பு என்கிற நியூட்ரல். இரண்டு அரசுத் தேர்வுகளுக்கு இடையில் தங்களை ஆசுவாப்படுத்திக்கொண்டு ஓய்வு, எடுப்பதற்குத்தான் பதினொன்றாம் வகுப்பு போல. அரசே செய்து கொடுத்திருக்கிற சிறப்பு ஏற்பாடு.

ஆசிரியர் தான் கொண்டு வந்த பேக்கின் சிப்பைத் திறந்தார். முன் வரிசையில் இருந்த மாணவன் லேசாக தலையைத் தூக்கி பேக்கின் மீது பார்வையை வீசினான். எப்படியும் முன் வரிசையில் இருப்பவர்களில் இரண்டு பேராவது அலட்சியமாகப் பேக்கைப் பார்ப்பவர்கள் என தெரிந்து, முன் வரிசையை நோக்கினார்.

அவரது பார்வையைப் பார்த்ததும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்கள். பேக்கில் இருந்து திருத்திய விடைத்தாள் கட்டை வெளியே எடுத்தார். இப்போது வகுப்பறை பூரண அமைதியாயிருந்தது. சில மாணவர்கள் முகத்தில் மலர்ச்சி, சில மாணவர்கள் முகத்தில் தளர்ச்சி.

ஒவ்வொரு பேப்ராக எடுத்து பெயரை வாசித்து, மதிப்பெண்னைக் கூறி, மதிப்பெண்னுக்கேற்ப வசைபாடி, வீட்டில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரும்படி கூறினார்.

மாணிக்கம், நீ பெயருக்கேற்ப மாணிக்கம் தான். வேதியியல் நூற்றுக்கு நூறு வெரிகுட். இப்படிப் பிள்ளைகள் தான் நாட்டுக்கும், வீட்டுக்கும் தேவை. அடுத்து ராமமூர்த்தி ஜம்பதோரு மார்க். இந்த மார்க்க வச்சி நீ என்ன செய்யப் போறன்னு தான் தெரியல. அடுத்தப் பேப்பரை எடுத்து முப்பத்து நான்கு மார்க் என்று கூறிக் கொண்டே பேப்பரை திருப்பித் திருப்பிப் பார்த்தார். இதுல எங்கதான் மார்க்குப் போட, என்று ஆசிரியர் சுழற்றிய பார்வையை ராபின் முன் நிறுத்தினார். டேய் உன்னுடைய பேப்பர் தான் என்பது போல அருகிலிருந்த நண்பன் முத்து, ராபினின் தொடையை லேசாக கிள்ளினான். ராபினுக்கோ, இப்போ ஆசிரியர் என்னன்ன வார்தைகளையெல்லாம் சொல்லித் திட்டப் போகிறார் என்பதை யூகித்துக் கொண்டிருந்தான்.

நீ தான் எழுந்திரு என்று ஆசிரியர் ராபினைப் பார்த்து சொன்னதும் எழுந்து முன்னால் சென்றான். பேப்பரை வாங்க கடைசிப் பெஞ்சுக்கேற்ற உடல் வாகுடன் இருந்தான்.

நீயெல்லாம் எதுக்குடா பள்ளிக்கூடத்துக்கு வர்ற. எல்லாத்துக்கும் ஒரே மாதிரி தான் பாடம் நடத்தினேன். மாணிக்கம் நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கியிருக்கான். அவன் விளங்குவானா நீ விளங்குவாயா. நீயெல்லாம் எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு வரனும்.

எத்தனையோ வேலைக்கு ஆள் கிடைக்காம இருக்கு. எந்த வேலைக்காவது போயி பொழப்ப பார்க்க வேண்டியது தான. என் ஜீவன வாங்குறதுக்கா இங்க வர்ற. நீ எப்படினாலும் சித்தாள் வேலைக்கோ, கொத்தனார் வேலைக்கோ, செங்கமாலுக்கோ தான் வேலைக்குப் போகப் போற. அத இப்பவே செய்தா வீட்டுகாவது பிரயோஜனமாக இருக்கும்.

படிக்கிறவங்களாவது ஒழுங்கா படிப்பாங்க. மாணிக்கத்த மாதிரி மாணவர்களாலத்தான் பள்ளிக்கூடத்திற்கு பெருமை. உன்னால இந்த பள்ளிக்கு என்ன பிரயோஜனம், இல்ல உங்க வீட்டுக்குத்தான் பிரயோஜனமா? இந்தா பேப்பரப் படி என்று அலுத்துக் கொண்டார்.

பேப்பரைக் கையில் வாங்கிய பின் இடத்திற்கு திரும்பினான். முகம் லேசாக வாடியிருந்தது. இடத்தில் வந்து அமரவும், பள்ளிக்கூடத்தில இதெல்லாம் சகஜமப்பா என்று முத்து மெல்லிய குரலில் ராபினிடம் சொன்னான்.

பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் ஆர்வம், அவசரம் இதையெல்லாம் மாணவர்களின் ஓட்டத்திலும், நடையிலும், சைக்கிளை வேகமாக அழுத்துவதிலும் தெரிய முடிந்தது.

பள்ளியின் மெயின் பெரிய கேட்டிற்கு வெளியே வந்து சிலர் இடப்பக்கமாகவும், சிலர் வலப்பக்கமாகவும் குழுக்குழுவாக செல்வதும், சிறிது நேரம் அந்த சாலையில் செல்கிற வாகனங்கள் எல்லாம் மெதுவாக ஒலியெழுப்பிக் கொண்டே செல்வதுமாக இருந்தது. காலையில் இருந்து மாலை வரை மன இருக்கத்துடன் பள்ளியில் பாடம் படித்த மாணவர்கள் முகத்தில் புது தெம்பும், ஒளியும் படர, உற்சாகமாக வீட்டுக்கு நடக்க புதுத் தெம்பைக் கொடுத்தது அந்த மணியோசைதான். காலையில் இதே மணியோசை மாணவர்களுக்கு, காதில், காய்ச்சிய ஈயம் இறங்குவது போல் இருந்தது. ஆனால் பள்ளி விடுவதற்காக மாலையில் அடிக்கப்படும் அதே மணியோசை, அது மணியோசை அல்ல உலகில் எந்த இசை ஞானிகளாலும் இசைக்க முடியாத மணி இசை தேனாகப் பாய்ந்தது காதில். எந்த மருத்துவத்தாலும் நிகழ்த்த முடியாத அற்புதமாக சோம்பல் முறித்து ஆனந்த உற்சாகம் தருவதுதான் இந்த மணி இசை.

வாசல் வரை சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்து, வெளியே சாலையைத் தொட்டதும், லாவகமாக சைக்கிளில் அமர்ந்து ஓட்டத் தொடங்கினான் ராபின். அந்த வழியாக அவனைக் கடந்து சென்ற காரில் இருந்து, குடித்து முடித்த குளிர்பான புட்டி வெளியே அலட்சியமாக வந்து விழுந்தது. ராபின் சைக்கிளை நிறுத்தினான். அந்தக் காலிப் பிளாஸ்டிக் புட்டியை எடுத்து தனது சைக்கிளில் பின்னால் கேரியரில் உள்ள கிளிப்பில் வைத்துக் கொண்டான். வீட்டுக்குச் சென்றதும் முதல் வேலையாக அந்த குளிர்பானப் புட்டியில் அடிப்பாகத்தை வெட்டி எடுத்தான். குவளை போல் இருந்தது. சிறு கம்பியை அடுப்பில் வைத்து சூடு பண்ணி மூடியில் ஒரு துளை ஏற்படுத்தினான். துளையில் ஒரு நாலு அடி நீளமுள்ள பிளாஸ்டிக் குழாயை செறுகி, குளுக்கோஸ் ஏற்றும் புட்டியைப் போல் மாற்றினான்.

ராபினின் சிறிய வீட்டை சுற்றி இருந்த இடத்தில் அவன் நட்டு வைத்திருந்த மாங்கன்று, எலுமிச்சைக் கன்று, கொய்யாக் கன்று, சப்போட்டா போன்ற கன்றுகளுக்கு போதிய நீர் இல்லாமல் வாடிக் கொண்டிருந்தது. அந்தக் கன்றுகளுக்கு அருகில் ஜந்தடி நீளமுள்ள கம்புகளை ஊன்றி அந்தக் கம்பில் தலைகீழாக இந்தப் புட்டிகளை கட்டி வைத்தான். சொட்டு நீர் பாசனம் ரெடி. வராத்திற்கு இரண்டு முறை மட்டும் அந்தப் புட்டியில் நீர் நிரப்பினால் போதும், நாள் முழுவதும் மரக்கன்றுகளுக்கு தேவையான நீர் பிளாஸ்டிக் குழாய் வழியாக, நீர் சேதாரம் இன்றி போய்க் கொண்டிருக்கும். அவன் வீட்டிற்கு வருகிறவர்கள் ஒரு நிமிடம் அவற்றை பார்த்து விழிகளை உயர்த்துவதுண்டு.

மகனின் செயல்கள் பெற்றோருக்கு வெறுப்பைத் தந்தது. ராபின் அப்பா ஒரு போலீஸ்காரர். அம்மா குடும்பத் தலைவி. அவர்களுக்கு ஆசை. எப்படியாவது மகனை ஒரு டாக்டராக ஆக்க வேண்டும் அல்லது ஒரு இஞ்சினியராக ஆக்க வேண்டும். நடுத்தரக் குடும்பத்தின் கனவுகள் அத்தனையும் அவர்களுக்கும் இருந்தது. அதில் ஏதும் வியப்பில்லை. ராபின் படிப்பில் செலுத்தும் கவனத்தை விட வித்தியாசமாக சிந்தித்து, செயல்படுத்துவதில் அதிகமாக இருந்தது.

டூட்டி முடிந்து வீட்டுக்கு வந்ததும் போலீஸ் யூனிபார்ம்மை கழற்றி ஹேங்கரில் தொங்கவிட்டவர் குளியலறைக்குச் சென்று குளித்த பின்பு தான், அவன எங்கடி, ராபின என்று கேட்டார் மனைவி வைரத்திடம்.

அவனுக்கு படிக்கிற வேலையைத் தவிர மற்ற வேலைகள் தான் முக்கியமா படுது. படி படின்னு சொன்ன படிக்கவா செய்றான். அவன நெனச்சாதான் எனக்கு பயமா இருக்கு.

என் கூட வேலை பார்க்கிற ஏட்டையாவோட மகனுக்கு இஞ்சினியரிங் படிக்கும் போதே பெரிய கம்பெனியில வேலை கிடைச்சிறுக்கு. பையன் படிப்பில படு சுட்டி. ராபின் அப்பா தங்கத்துரை பேசிக்கிட்டு இருக்கும் போது ராபின் வீட்டுக்குள்ளே நுழைந்தான். ராபினை அவன் அப்பா ஏறஇறங்கப் பார்த்தார். அப்பா கோபத்தில இருக்கிறதப் பார்த்ததும் புத்தகப் பையை எடுத்து ஹாலில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான்.

ஏதோ நாடகம் பார்ப்பது போல அப்பா தங்கத்துரையும், அம்மா வைரமும் ராபினை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராபின் படிப்பதற்கு புத்தகத்தை எடுத்து விரிக்கும் போது அதில் வைத்திருந்த பரிட்சைப் பேப்பர் கீழே விழுந்தது. பேப்பரை எடுத்து மீண்டும் புத்தகத்தின் நடுவே செருகினான். பாhத்துக் கொண்டிருந்த தங்கத்துரை என்னடா அது பரிட்சைப் பேப்பரா இங்க கொடு என்று ராபின் அருகில் வந்து வாங்கினார். பேப்பரை திருப்பிப்திருப்பிப் பக்கம் பக்கமாக பார்த்தார். முப்பத்திநாலு மார்க்கு. இந்த மார்க்கு எடுக்கதான் இப்படி உட்கார்ந்து படிக்கிறியோ? படிக்கிறியா இல்ல படிக்கிற மாதிரி நடிக்கிறியா.

எதிர்த்த வீட்டு பிள்ளை, மதியழகியப் பாரு, எப்பவும் நூற்றுக்கு நூறுதான் மார்க்கு வாங்குறா. கவர்மென்ட்டு கோட்டாவிலே டாக்டர் படிப்பு படிக்கப் போயிடுவா. நீ என்ன செய்ய போற. அவ ஆஸ்பத்திரியில கம்ப்பௌண்டர் வேலைக்குக் கூட உன்னை சேர்க்க மாட்டா. ஏன்னா உன் படிப்பு அதுக்குக் கூட லாயக்கு இல்ல. நீ எடுத்திருக்கிற மார்க்கப் பாத்தா எனக்கு வயிறு எரியுதுடா. என் பையன் அது படிக்கிறான். என் பிள்ளை இவ்வளவு மார்க்கு வாங்கியிருக்கு என்று மத்தவங்கப் பேசும் போது எனக்கு உன்னைய நினைச்சி வெட்கமா இருக்குடா என்று அப்பா தங்கதுரை பொறிந்து தள்ளினார்.

உனக்கு எதாவது குறைவச்சிறுக்கோமா. வேளா வேளைக்கு சூடா ஆக்கிப் போடுறேன். எது கேட்டாலும் உங்க அப்பா தட்டாம வாங்கிக் கொடுக்கிறாரு. இதுக்கு மேல என்னடா வேணும். உன் கூடப் பிறந்த தங்கச்சி, வகுப்பிலே பர்ஸ்ட் ரேங். அவ திங்கிற சோத்தைத் தான நீயும் திங்கிற. உனக்கு மட்டும் ஏண்டா படிப்பு ஏற மாட்டேங்குது. எல்லாம் என் தலை எழுத்து. என்னைக் கேவலப் படுத்துறதுக்குன்னே பிறந்திருக்க. தலையில் அடித்துக் கொண்டாள் அம்மா.

வீட்டில் ஆளுக்கொரு பக்கமாக இருந்தார்கள். குடும்பத்தில் அமைதி இல்லை. மனக் குமுறல். மௌனமானார்கள்.

ராபின் ஏதோ படம் வரைந்து கொண்டிருந்தான். பென்சிலால் வரைவதும், அழிப்பதும், திருத்துவதுமாக இருந்தான். திடீரென மின்தடை ஏற்பட்டது. மின்தடை ஏற்பட்டால் குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து தான் மின் இணைப்பு திரும்ப வரும். அதனால் அப்படியே உறங்கிவிட்டான்.

நாட்டில் மின்சாரப் பிரச்சனை பெரும் பிரச்சனையாகிவிட்டது. எல்லாத் தொழிலும் முடங்கிவிட்டது. தொழில் இல்லாததுனால திருட்டுக் கும்பலும் பெருகி விட்டது. இது போலீஸ்காரர் கவலை.

மறுநாள் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கூடம் போனான் ராபின். எல்லா மாணவர்களும் பெற்றோரிடம் பரிட்சை பேப்பரில் கையெழுத்து வாங்கி வந்து ஆசிரியரிடம் கொடுத்தனர். ராபின் பேப்பரில் கையெழுத்திடவில்லை ஆசிரியர் கேட்டார். ஏன்டா பேப்பரில் கையெழுத்து வாங்கவில்லை, திட்டினார். அமைதியாக நின்றான் ராபின். ஏன்டா, எவ்வளவு திட்டினாலும் உனக்கு உணர்வே வராதா? உன் முகத்தில எந்த உணர்ச்சியையும் காட்ட மாட்டியா. விளங்குன மாதிரித்தான். போடா போயி உட்காரு. இடத்தில் வந்து அமர்ந்தான். அருகில் இருந்த முத்து கேட்டான், டேய் உனக்கு அறிவே இல்லியா. வாத்தியாரு இவ்வளவு திட்டுறாரு அப்படியே நிக்கிற. டேய் பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு வர்றதுக்கு என்னடா. என்னையெல்லாம் இப்படி திட்டினா நாக்கப் புடிங்கிட்டு செத்துறுவேண்டா.

டேய் முத்து இதுல வருத்தப்படுறதுக்கு என்ன இருக்கு!.. வாத்தியாருக்கு என் மேல அக்கறை இருக்கிறதுனால திட்டுறாரு. எப்படியாவது நானும் படிச்சி முன்னுக்கு வரனுங்கிறது அவரது ஆசை. அதுக்கு நான் சந்தோசப்படனும்டா. நானும் படிக்கத்தாண்டா செய்றேன். என்ன எனக்கு எதுவும் மனப்பாடமா மனசில தங்க மாட்டேங்குது. புத்தகத்தில இருக்கிற மாதிரி இருந்தாத்தான் மார்க்கு போடுறாங்க. நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது.

ஸ்கூல் அட்டெண்டர் வகுப்பிற்குள் வந்தார். கையில் வைத்திருந்த பேப்பரையும் நோட்டையும் ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு வாசலில் போய் நின்று கொண்டார். சர்குலர் நோட்டையும், பேப்பரையும் படித்துப் பார்த்தார். மாணவர்கள் அவரையே உற்று நோக்கினர். விடுமுறையாக இருக்குமோ? அல்லது டூர் ஏற்பாடாகியிருக்குமோ? ஆர்வமாக இருந்தார்கள்.

ஒரு முக்கியமான செய்தி. நம் பள்ளியில் அடுத்த மாதம் அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டுமாம். நமது கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் கலந்து கொள்ளப் பேகிறார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் சிறந்த படைப்புகளுக்கு தேசிய அளவில் போட்டி நடைபெறும். அவற்றில் வெற்றி பெறுகிற பள்ளிக்கும், மாணவனுக்கும் ஜனாதிபதி கையால் பரிசுகளும், பாராட்டுகளும்.

கண்காட்சிக்கான தலைப்புகளில் முதலில், தண்ணீர் சிக்கனம், மின் சிக்கனம் மின் சேமிப்பு, மாநகரங்களில் ஏற்படும் புழுதி படலமும் சுகாதாரக் கேடும். விஞ்ஞான படைப்புகள் போன்ற தலைப்புகளில் படைப்புகள் இருக்க வேண்டும். கலந்து கொள்ளக் கூடிய மாணவர்கள் கூட்டாகவோ தனித் தனியாகவோ இன்று மாலைக்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவும் எத்தனை தலைப்புகளில் வேண்டுமானாலும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சிக்கு தயார் செய்யலாம்.

மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து தங்கள் குழுவைப் பதிவு செய்து கொண்டார்கள். ராபின் முயன்றும் எந்தக் குழுவும் அவனை மனமுவந்து ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவன் தன்னுடைய பெயரைப் பதிவு செய்யவில்லை இதனை அறிந்த ஆசிரியர் ராபினை அழைத்து விளக்கம் கேட்டார். யாரும் தன்னை ஏற்கவில்லை என்பதை ஆசிரியரிடம் கூறினான்.

படிப்பு, மனப்பாடம் இவற்றில் ஆர்வம் இல்லாத நீ, விளையாட்டு, செயல் வழிக் கற்றல், ஆக்கச் சிந்தனை போன்றவற்றில் உனக்கு ஆர்வம் உண்டென்று அல்லவா நினைத்தேன். நீ சுத்த சோம்பேறியாக இருப்பாய் என்று நினைக்கவில்லை. தலை குனிந்தவாறு நின்றான் ராபின். சரி சரி இடத்தில போய் உட்கார் என்று ஆசிரியர் சொன்னார். சார் என்னுடைய பெயரையும் பதிவு செய்துகொள்ளுங்கள் என்றான் ராபின்.

அன்று இரவு ராபினுக்குத் தூக்கம் வரவேயில்லை. என்ன செய்வது, ஏதாவது தானும் செய்தாக வேண்டும். பெயரைக் கொடுத்தாகிவிட்டது. ஒன்றும் செய்யவில்லையென்றால் மாணவர்கள் கேலி செய்வார்கள். எல்லாக் குழுவிலேயும் நன்றாக படிக்கிறவர்களும், வசதி படைத்தவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடன் நான் எப்படி போட்டி போட முடியும்.

கண்காட்சிக்கு நான் என்ன செய்தாலும் கேலி பேசுவார்கள். ஒன்றும் செய்யாவிட்டாலும் கேலி பேசுவார்கள். புரண்டு புரண்டு படுத்தான். அநியாயத்துக்கு தூக்கம் சற்று விலகி நின்று ராபினை வேடிக்கைப் பார்த்தது.

என்னடா தூக்கம் வரவில்லையா? தண்ணிய தண்ணிய குடிச்சிட்டு வந்து படுக்கிற என்று தரையில் பாய் விரித்து படுத்திருந்த அம்மா கேட்க, என்னமோ இன்னைக்கு எனக்கு தூக்கமே வரமாட்டேங்குதும்மா என்றான். ஜன்னல் வழியே வெளியே பார்வையை செலுத்தினான். அவன் நட்டு வைத்திருந்த மரக்கன்றுகளுக்கு புட்டியில் இருந்து நீர் இறங்கி கொண்டிருந்தது. அதனால் சிறிது அளவே நீர் புட்டியில் இருந்தது. நாளைக் காலையில் புட்டியை நிரப்பி விட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். அடுத்த நொடியே மின்விசிறி, மின் விளக்குகளுக்கு கட்டாய ஒய்வு கொடுத்தது மின் வாரியம்.

போச்சா கரண்ட்டு போச்சா. இனிமே தூக்கம் வராது என்று புலம்பினார் ராபின் அம்மா வைரம். கரண்ட் பற்றாக்குறை நம்ம நாட்டுல ஒரு நாளும் தீராது அதுவும் வருசத்துல மூனு மாசம்தான். மற்ற எட்டு ஒன்பது மாசமும் காத்தாடி சுத்தமா சும்மா தான் கிடக்கும். அணுமின் நிலையம், அது கூரைவீட்டு வெளிச்சத்துக்காக தீப்பந்தம் செருகி வைத்த கதையா இருக்கு. நீர் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் பற்றாக்குறை. குடிக்கவே தண்ணியக் காணோம். கன்னத்தில பளார்ன்னு தன்னையே அடித்துக் கொண்டார், இதுல கொசு தொல்லை வேற.

அம்மாவின் புலம்பல் ராபினை மேலும் தூங்கவிடாமல் செய்தது. கரண்ட் பிரச்சனை அம்மாவுக்கு மட்டுமல்ல இதே புலம்பல் எல்லா வீட்லயும் இருக்கு. சின்ன தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் எல்லாமே மின்சாரத்தை நம்பித்தான் இயங்குகிறது. மின்சாரம் தடைபட்டால் வேலை தடைபடும். உற்பத்தி தடைபடும். வேலையாட்களுக்கு கூலி கிடைக்காது. கூலி கிடைக்கவில்லையென்றால் வீட்டில் அடுப்பு எரியாது. சிந்தித்துக் கொண்டே புரண்டு படுத்தான் ராபின். இந்த காற்றாலை ஆண்டு முழுவதும் தடை இல்லாமல் இயங்கினால் தடையில்லா மின்சாரம் கிடைக்குமே.

ஊரே அமைதியாக இருந்தது. ஆனால் ராபின் காதில் ஒரு ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. தூக்கம் இல்லாமல் வெறுமனே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தவனை தன்பால் ஈர்த்தது அந்த டிக் டிக் சீரான ஒலி. மின்சாரம் தடைபட்டதால் அனைத்து மின்சாதனங்களும் தூங்கிவிட்டன. ஆனாலும் டிக்..டிக்; என்ற ஒலியோடு ஊசல் கடிகாரம் இயங்கிக் கொண்டிருந்தது. பழைய காலத்துக் கடிகாரம். ராபின் அப்பா அம்மா திருமணத்திற்கு பரிசாக வந்தது. வீட்டின் பொருளாதார நிலையை விளம்பரப்படுத்தும் சாதனமாக விளங்கியது இந்த ஊசல் கடிகாரம். அந்த கடிகாரத்தின் ஓசையையும், அதன் ஊசல் இயக்கத்தையும் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். தூங்கமுடியாத வியாதி உள்ளவனை கூட ஊசல் கடிகாரத்தின் சீரான டிக்..டிக்..டிக்.. ஓசை தூங்கவைத்து விடும். இப்போது அந்த ஓசை தான் ராபினின் தூக்கத்தைக் கலைத்துவிட்டு சிந்திக்கத் தூண்டிவிட்டது.

மறுநாள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் மாணவியர் குழுகுழுவாக இணைந்து அறிவியல் கண்காட்சிக்கு பிராஜக்ட் தயார் செய்வதற்கு பேட்டரி, ஒயர், எல்.இ.டி.பல்ப், தெர்மாகோல் ஷீட் போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டு வந்திருந்தனர். தலைப்புகளுக்கு ஏற்றவாறு தயார் செய்வதில் மும்முரமாக இருந்தனர். ஒரு குழு நவதானிய வகைகளை சேகரித்து அதன் மருத்துவ குணம் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் போன்றவற்றை அட்டைகளில் எழுதி அமர்களப்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஆசிரியர் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். விழா கோலமாக இருந்தது. ஆனால் இதுதான் நிஜமானக் கல்வி.

ராபின் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் இருந்தான். மற்ற மாணவர்களும் அறிவியல் கண்காட்சிக்கு தயார் செய்வது இவனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. முத்து எல்லாக் குழுக்களையும் வேடிக்கைப் பார்ப்பதும், கமாண்ட் அடிப்பதும் ஒரே ஜாலியாக இருந்தான்.

டேய் ராபின் என்னடா நீயும் சிந்திக்க ஆரம்பிச்சிட்டியா. சும்மா கம்முன்னு உட்காந்திருக்க. அறிவியல் கண்காட்சிக்கு பேரை வேற கொடுத்திட்ட. சிந்தனையை கலைத்தான் முத்து. என்ன செய்ய போற எதும் உதவின்னா கேளு. நான் எல்லா குழுக்கும் அதைத்தான் செய்றேன். பார்டா, ரமேஷ் குரூப் கப்பல் மாதிரியே தெர்மாக்கோல் சீட்ல பெரிசா செய்றாங்கடா. எப்படி இருக்குத்; தெரியுமா? சூப்பரா இருக்கு. ஏரோப் பிளேனை நேர்ல பார்க்கிற மாதியே கேர்ள்ஸ் செஞ்சிருக்காங்கடா.

ஒரு பேப்பரில் பல விதமாக காற்றாலை படம் வரைந்து பார்த்துக் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்தான் ராபின். பலவிதமாக வரைந்து பார்ப்பதும், சரியில்லாமல் கசக்கி போடுவதும் அன்றைய நாள் முழுவதும் இப்படியே போய்விட்டது.

முத்து முதல்கொண்டு ராபினைக் கேலி பேச ஆரம்பித்துவிட்டார்கள். மற்றவர்கள் கேலி பேசுவதை கண்டு கொள்ளாமல் இருந்த ராபின் முத்துவைப் பார்த்துக் கேட்டான், நியூமாடா கேலி பண்ற? முத்துவுக்கு வருத்தமாக போய்விட்டது. சாரிடா ராபின். சும்மா ஜாலிக்காகத்தான் கேலி பேசினேன். வருத்தப்படாத. பாய் கடையில பேட்டரியில ஓடுத வின்ட் மில் காற்றாலை மாடல் செய்து வச்சிருக்கார். அத வாங்கிட்டு வந்து கண்காட்சியில வச்சிடுவோம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து காசு போட்டு வாங்குவோம் என்றதும் ராபின் முத்துவைப் பார்த்துப் புன்னகைத்தான்.

டேய் ஒரு வாரத்துக்கும் பிறகு இன்றைக்குத் தான்டா உன் முகத்தில சிரிப்பைப் பார்த்திருக்கேன். நான் இன்றைக்கே பாய் கடையில போய் அந்த வின்ட் மில் மாடல விலைகேட்டு அட்வான்ஸ் குடுத்திருறேன். இல்லைன்னா வேற குரூப் போய் அத வாங்கிட்டு வந்து சீன் போட்டுறுவானுக.

ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்குப் போகும் போது என்கூட வர்றியா முத்து, காய்லான் கடை வரை போய்விட்டு வீட்டுக்கும் போவோம். முத்துவுக்கு க்ளுக் கென்று சிரிப்பு வந்தது. கண்காட்சி முடிஞ்சப் பிறகுதானே செஞ்சி வச்ச பிராஜக்டை காய்லான் கடையில போடனும், மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

காய்லான் கடைக்குச் சென்றவர்கள் பழைய சைக்கிள், மற்றும் பைக்குகளில் உள்ள பேரிங், பல் சக்கரங்கள், சிறிய வகைச் செயின்கள், ஸ்டே கம்பிகள் போன்றவற்றை வாங்கிக் கொண்டனர் ராபின். அவன் எதிர்பார்த்தவாறு பழைய பொருட்கள் கிடைத்தன. கிடைத்தப் பொருட்களைக் கொண்டு ஏதேதோ செய்தான். இதுவும் தன்னை முழுமையாக ப்ராஜக்ட் செய்வதில் ஈடுபடுத்திக்கொண்டான்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றதுக் கொண்டிருந்தது. ஸ்டால் அமைப்பதும், அவற்றைப் பள்ளிகளுக்கு ஓதுக்கீடு செய்வதுமாக அனைத்துப் பணிகளும் ஆசிரியர்கள் பணியாட்களைக் கொண்டு சிறப்பாகச் செய்தனர்.

நாளை அறிவியல் கண்காட்சி என்ற நிலையில் இன்றே மாவட்டத்தின் மற்ற மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் தங்களுடைய படைப்புகளைக் கொண்டுவந்து நிறுவினர். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு வகுப்பறை ஒதுக்கப்பட்டிருந்தது. வகுப்பறை முழுவதும் படைப்புகளால் நிரப்பி, பரப்பி அழகுற அமைத்தனர். சில பள்ளிகள் தங்களுடன் தச்சுத் தொழிலாளர்கள், கட்டிடக் கலைஞர்களை வைத்து இயற்கைக் காட்சிகள், ஏழு உலக அதிசயங்கள், மலை வளம், அணைக்கட்டு போன்றவற்றை அழகுற வடிவமைத்து, தங்களுக்குத்தான் முதல் பரிசு என்று பேசிக்கொண்டார்கள்.

ராபினுக்கு ஒரு டேபிளில் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவுக்கும் அவர்கள் ப்ராஜெக்ட்டுக்கு ஏற்றபடி டேபிள் போட்டு அழகுற அமைப்பதும், அவற்றை விளக்கிக் கூறுவதற்கான பயிற்சியும் செய்து கொண்டார்கள். எல்லோருடைய டேபிளும் பளிச்சென இருந்தது. ராபின் டேபிளைப் பார்த்து மற்ற மாணவர்;கள் சிரிப்பதும், நகைப்பதுமாக இருந்தனர்.

ஆசிரியர்கள், பிற பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என்று பள்ளி விழாக் கோலம் பூண்டது. தலைமை ஆசிரியர் பரபரப்பாகக் காணப்பட்டார். மெயின் கேட்டிற்கு வந்து மாவட்ட ஆட்சித் தலைவருக்காக காத்திருந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சரியாகப் பத்து மணிக்கு கார்ல வந்து இறங்க பள்ளித் தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். அறிவியல் கண்டுபிடிப்புகள், அதன் வளர்ச்சி முக்கியத்துவம் பற்றி பேசிய பின்பு கண்காட்சியைத் துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர்.

மாணவர்களும், பொதுமக்களும் ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று பார்த்து மகிழ்ந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று பார்வையிட்டனர். மாணவர்கள் விளக்கம் தருவதைக் கவனமாகக் கேட்டனர். இதனால் மாணவர்கள் உற்சாகமாக தங்களின் படைப்புகள் பற்றிக் கூறினர். மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவர்களை ரசித்துப் பார்த்தார்.

ராபின் டேபிள் அருகே வந்ததும் அவன் படைப்புப் பற்றி விளக்க முற்பட்டான். தலைமை ஆசிரியர் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அடுத்த டேபிளுக்கு நகர்ந்து போனார். தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரியும் சென்றார். அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் செல்போன் ஒலிக்க, போனை எடுத்து பேசிக் கொண்டே ராபின் டேபிளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ராபினும் முத்துவும் ஆர்வமுடன் மாவட்ட ஆட்சித் தலைவரையே பார்த்துக் கொண்டிருக்காமல் பொதுமக்களுக்கு தங்கள் படைப்பு பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் செல்போனில் பேசியவாறே ராபின் டேபிளில் இருந்த படைப்பைப் பார்த்தார்.

அங்கே ஒரு பலகையில் இரண்டு அடி உயரமுள்ள இரண்டு கம்பிகளைப் பொருத்தி அதன் உச்சியில் ஒரு அச்சில் பேரிங் ஒன்றைப் பொருத்தி இருந்தது. அந்த அச்சில் ஒரு முனையில் பல்சக்கரம் ஒன்று பெருத்தப்பட்டிருந்தது. நடுவே ஒரு ஊசல் குண்டு தொங்கிக் கொண்டிருந்தது. பார்வையாளர்களாக வந்திருந்த மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ராபின் இயங்கும் விதம் பற்றி விளக்கிக்கொண்டிருந்தான். செல்போனில் பேசிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் போனை தனது பாக்கெட்டில் வைத்து விட்டு ராபினிடம் இது என்ன டிவைஸ் இதனுடைய இயக்கம், பயன் பற்றி சொல்லுங்க தம்பி என்றார். உற்சாகம் சிறிதும் குறையாமல் தனது படைப்பைப் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூற ஆரம்பித்தான்.

சார் நம்ம நாட்டில் மின்தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அணுமின் நிலையம், அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் போன்ற மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் போதிய அளவு உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆனால் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க தமிழ்நாட்டில் மட்டும் பன்னிரெண்டாயிரம் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனாhல் வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டும் தான் காற்று வீசுவதால் மீதம் ஒன்பது மாதங்கள் காற்றாலை இயங்காமல் இருக்கிறது. அது மட்டும்மல்ல அதன் பராமரிப்பு செலவு, வேலையாள் சம்பளம் போன்ற கூடுதல் செலவு பிடிக்கிறது. அதனால் நான் அமைத்திருக்கும் இந்த ஆலை காற்றாலை போன்றதுதான். ஆனால் இதற்கு காற்று தேவையில்லை. அதனால் ஆண்டு முழுவதும் மின்சாரம் தயாரிக்க முடியும். ஊசல் கடிகார ஊசல் போல் இந்த ஊசல் குண்டு ஒரு முறை மின் மோட்டாரால் இயங்கிக்கொண்டே இருக்கும்.

இங்கு நான் இரண்டு பேரிங்குகளுக்கு இடையில் ஒரு அச்சைப் பொருத்தி இருக்கிறேன். நடுவில் அச்சில் ஒரு கப்ளிங் மூலம் ஊசல் போன்ற அமைப்பை பொருத்தி இருக்கிறேன். இந்த ஊசல் குண்டை இயங்கச் செய்தால், அச்சில் ஒரு முனையில் பொருத்தப்பட்டுள்ள சைக்கிள் பெரிய பல்சக்கரம் சுழலும், அதில் இருந்து ஒரு செயின் மூலம் கீழே ஒரு பல்சக்கரம் வேகமாக சுழலும். அதில் இணைக்கப்பட்டுள்ள இந்த டைனமோ, வேகத்திற்கு ஏற்ப மின்சாரத்தை வெளியிடும் என்று கூறினான். அநாயசமாக சொல்லி முடித்த ராபினைப் பார்த்து முதுகிலே தட்டிக்கொடுத்தார். தம்பி நீ சாதாரண காரியம் செய்யவில்லை. நீ அற்புதம் செய்திருக்கிறாய், என்று பாரட்டிவிட்டு மற்ற அனைத்து ஸ்டால்களையும் பார்வையிட்டார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருடன் ராபினிடம் வந்தார் மாவட்ட ஆட்சித் தலைவர். ராபின் பிராஜெக்டை மீண்டும் ஒரு முறை விளக்கம் செய்து காட்டவும் சொல்ல அவற்றை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அன்றே மாவட்ட அளவில் முதல் பரிசும் பாராட்டும் பத்திரமும் வழங்கப்பட்டது.

நாட்டின் மின் தேவையை நிறைவு செய்யக்கூடிய அற்புதப் படைப்பு எனப் பாராட்டினார்.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக