Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

பொன்னியின் செல்வன்



பொன்னியின் செல்வன் உருவான வரலாறு...!


மரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புகழ்பெற்ற தமிழ் புதினமாகும். 1950-1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராகவும், தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. இக்காவியம் பண்டைய தமிழரின் பண்பாடும், அமரர் கல்கி அவர்களின் கற்பனை வளமும் ஒருங்கே இணைந்த அமுத கலவை போன்ற படைப்பு என்பதை நம்மால் உணர முடிகிறது.


தமிழரின் போர்குணங்களையும், இறையாண்மையையும் அறிந்துகொள்ள நினைக்கும் இன்றைய இளைஞர்களையும் முந்தைய காலத்திற்கே கொண்டுசெல்லும் வண்ணம் காப்பியங்களை படைத்த பேராசிரியர் அமரர் கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், போன்ற படைப்புகள் படிக்க படிக்க திகட்டாதவை. கல்கி அவர்கள் எழுதிய சரித்திரக் காப்பியங்களில் சரித்திரத்திற்கு எவ்வளவு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. கற்பனையின் பங்கு அதில் எவ்வளவு இருக்கிறது என்று பிரித்தறிய முடியாது என்பது அவரின் தனித்தன்மைக்கு சான்று.


பல நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் நடந்த சரித்திரச் சம்பவங்களின் துணைக் கொண்டு அவற்றின் அடிப்படை ஆதாரங்களிலிருந்து விலகிப் போகாமல் மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் ஒரு மாபெரும் சரித்திரக் காப்பியமாகப் பொன்னியின் செல்வனைப் படைத்திருக்கும் கல்கி அவர்கள் தமிழ் வாசகர்களுக்கும், தமிழுக்கும் கிடைத்த வரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த மாபெரும் சரித்திரக் காப்பியத்தில் உலாவரும் கதாபாத்திரங்களான சுந்தர சோழர், ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை, செம்பியன் மாதேவி, வந்தியத்தேவன், அம்பில் அநிருத்தர், வானதி, நந்தினி, மணிமேகலை, பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், கந்தமாறன், ஆழ்வார்க்கடியான், குடந்தை சோதிடர், ரவிதாஸன்... இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை நம்மால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

காலத்தைக் கடந்து நிற்கும் படைப்புகளாக மிகச் சிலருடையவையே இருக்கின்றன. கல்கியின் எழுத்துகளை அந்த வரிசையில் முதல் இடத்தில் வைத்துப் போற்றலாம். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவைகளைச் சுற்றித் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்க விட்டு, அந்தக் கற்பனையை அப்படியே தன் எழுத்தில் வடித்திருக்கும் கல்கி அவர்களின் இந்தக் காப்பியம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை இதைப் படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள். படித்தவர்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கதை இது. எத்தனை முறை படித்தாலும் புதிதாக அப்பொழுது தான் படிப்பதைப் போன்ற உணர்வைத் தரும்.

வரலாற்று காப்பியமான கல்கியின் பொன்னியின் செல்வன் இன்று முதல் உங்களைத் தேடி...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக