புதன், 20 ஏப்ரல், 2022

பக்கத்துலயே இருக்கும்... ஆனா எதிரிகளின் கண்ணுல மாட்டாது... நீர்மூழ்கி கப்பல்களில் கையாளப்படும் தந்திரம்!

புதன், ஏப்ரல் 20, 2022
நீர்மூழ்கி கப்பல்களில் கையாளப்படும் ஒரு தந்திரம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீர்மூழ்கி கப்பல்களை (Submarines) பார்த்துள்ளீர்களா? நம்மில் நிறைய பேருக்கு நீர்மூழ்கி கப்பல்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். இன்னும் சிலருக்கோ, நீர்மூழ்கி கப்பல்களை புகைப்படங்களில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர்கள் நீர்மூழ்கி கப்பல்களை நேரில் பார்த்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் நீர்மூழ்கி கப்பல்களை எந்த வகையில் பார்த்திருந்தாலும் சரி, ஒரு பொதுவான விஷயத்தை கவனித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீர்மூழ்கி கப்பல்கள் பெரும்பாலும் கருப்பு (Black) நிறத்தில் இருப்பதுதான் அந்த பொதுவான விஷயம். ஆம், பெரும்பாலும் அனைத்து நீர்மூழ்கி கப்பல்களும் கருப்பு நிறத்தில்தான் இருக்கும். வேறு வண்ணத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

நீர்மூழ்கி கப்பல்களுக்கு கருப்பு வண்ணம் பூசும் வழக்கம் எப்படி ஏற்பட்டது? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இதற்கும், நீர்மூழ்கி கப்பல்கள் எதிரிகளின் கண்களில் சிக்காமல் இருப்பதற்கும் முக்கிய தொடர்பு உள்ளது. அணு சக்தி கண்டறியப்படுவதற்கு முன்னதாக நீர்மூழ்கி கப்பல்கள் நீருக்கு அடியில் இருப்பதை காட்டிலும், பெரும்பாலும் நிலத்தில்தான் இருக்கும்.

எனவே எதிரிகளிடம் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை காப்பாற்றுவதற்கு உருமறைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. முதலாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில், தங்களது நீர்மூழ்கி கப்பல்கள் எதிரிகளின் கண்களுக்கு எளிதில் புலப்படாத வகையில் பாதுகாப்பதற்கு, எந்த நிறம் பொருத்தமானதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க அமெரிக்கா சோதனைகளை நடத்தியது.

அப்போது நீர்மூழ்கி கப்பல்களின் ஹல் (Hull) எனக்கூறப்படும் உடற்பகுதியை சாம்பல் நிறத்திலும், டெக்குகள் (Decks) எனப்படும் அடுக்குகளை கருப்பு நிறத்திலும் பெயிண்ட் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. நீர்மூழ்கி கப்பல்களை இந்த நிறங்களில் பெயிண்ட் செய்தால், எதிரிகளின் கண்களிடம் இருந்து மிகச்சிறப்பான பாதுகாப்பு கிடைக்கும் என தீர்மானிக்கப்பட்டது.

இதன்பின் நீர்மூழ்கி கப்பல்களின் உடற்பகுதி சாம்பல் நிறத்திலும், அடுக்குகள் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டன. ஆனால் 1930களின் மைய பகுதியில் ஒரு பிரச்னை தெரியவந்தது. இந்த வகையில் வர்ணம் பூசப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், நீருக்கு அடியில் ஆழமாக செல்லாவிட்டால், மேலே பறக்கும் விமானங்கள் மூலமாக எளிதில் கண்டுபிடிக்கப்படும் என்பதுதான் அந்த பிரச்னை.

எனவே இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிப்பதற்காக பேர்ல் துறைமுகத்தில் (Pearl Harbour) அமெரிக்கா மீண்டும் பல்வேறு சோதனைகளை அமெரிக்கா நடத்தியது. இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக, நீர்மூழ்கி கப்பல்கள் பல்வேறு வண்ணங்களில் பெயிண்ட் செய்யப்பட்டன. இறுதியில் அடர் நீல நிறம்தான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு பாதுகாப்பானது என முடிவு செய்யப்பட்டது.

நீர்மூழ்கி கப்பல்கள் நீருக்கு அடியில் மூழ்கியிருக்கும்போதும், இந்த நிறம் எதிரிகளின் கண்களுக்கு புலப்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இப்படி ஒரு முடிவு கிடைத்ததை தொடர்ந்து, கமாண்டர் தனது டிவிஷனில் உள்ள அனைத்து நீர்மூழ்கி கப்பல்களையும், அடர் நீல நிறத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில், அனைத்து நீர்மூழ்கி கப்பல்களும் அடர் நீல நிறத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் அதன்பின் புதிய பிரச்னை ஒன்று எழுந்தது. இந்த அடர் நீல நிறம் எளிதில் மங்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக நீரில் மூழ்கி இருக்கும்போது, நீர்மூழ்கி கப்பல்களை எதிரிகள் எளிதில் கண்டறியும் சூழல் உருவானது.

இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து இறுதியாகதான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஏற்ற நிறமாக கருப்பு முடிவு செய்யப்பட்டது. வேறு எந்த நிறத்தை காட்டிலும் கருப்பு நிறத்தை நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஏற்ற நிறமாக தேர்வு செய்ததற்கு பின்னால் இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. கருப்பு நிறத்தின் உருமறைப்பு திறன் முதல் காரணம்.

எதிரிகளின் கண்களுக்கு கருப்பு நிறம் எளிதில் சிக்காது. கருப்பு நிறம் நீடித்து உழைக்கும் என்பது இரண்டாவது காரணம். அடர் நீல நிறம் எளிதில் மங்கி, எதிரிகளின் கண்களுக்கு நீர்மூழ்கி கப்பல்களை எளிதில் புலப்பட செய்தது என ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா? ஆனால் கருப்பு நிறம் எளிதில் மங்காமல் நீடித்து உழைக்கும்

இதன் காரணமாகவே நீர்மூழ்கி கப்பல்களை பெரும்பாலும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யும் வழக்கத்தை அனைவரும் பின்பற்ற தொடங்கினர். நீர்மூழ்கி கப்பல்களின் கருப்பு நிறத்தை நீங்கள் இவ்வளவு நாட்களாக சாதாரணமாக கடந்து சென்றிருக்கலாம். ஆனால் எதிரிகளின் கண்களுக்கு புலப்படாமல் நீர்மூழ்கி கப்பல்களை பாதுகாப்பதில், கருப்பு நிறம் மிக முக்கிய பங்காற்றுகிறது.

வாடிக்கையாளர்களிடம் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெறப்போகும் ஒகினாவா நிறுவனம்.. எதற்காக தெரியுமா?

புதன், ஏப்ரல் 20, 2022

ஒகினாவா நிறுவனம், தான் விற்பனை செய்த 3,215 மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப்பெற்று, சரி செய்து தர உள்ளதாக அறிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் ஒகினாவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றியதில் தந்தை மற்றும் மகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இரவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜரில் போட்டு தந்தை, மகள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், பேட்டரி வெடித்து தீப்பற்றியதாகவும் அதில் இருந்து வந்த புகையால் மூச்சுத்திணறி இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அடுத்தடுத்து அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தீ விபத்து தொடர்பாக ஆய்வு நடத்திய ஒகினாவா ஆட்டோ டெக் நிறுவனம் 3,215 ப்ரைஸ் ப்ரோ (Praise Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெற்று சர்வீஸ் செய்து கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றிய விபத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றிய அச்சம் அதிகரிக்க ஆரம்பித்தது. எனவே வாடிக்கையாளர்களின் அச்சத்தை நீக்கும் வகையிலும், பாதுகாப்பு தொடர்பாக எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை உறுதி செய்யவும் ஒகினாவா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் படி தனது ப்ரைஸ் ப்ரோ (Praise Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஹெல்த் செக் அப் முகாமை ஒகினாவா ஆட்டோ டெக் நிறுவனம் நடத்த உள்ளது. 3,215 யூனிட் பிரைஸ் ப்ரோ ஸ்கூட்டர்களை திரும்பப் பெற்று, அதில் பேட்டரி தொடர்பாக ஏதாவது சிக்கல்கள் உள்ளதா என ஒகினாவா நிறுவனம் பரிசோதிக்க உள்ளது. அப்போது பேட்டரி அல்லது லூஸ் கனெக்டர்கள் போன்ற ஏதாவது பிரச்சனைகல் இருந்தால் இந்தியா முழுவதும் உள்ள ஒகினாவா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் இலவசமாக அதனை சரி செய்து கொடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதைச் செயல்படுத்த, ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம், தனது டீலர்களுடன் இணைந்து பிரத்யேகமாக நடத்த உள்ள இந்த பழுது நீக்கும் முகாமில் கட்டாயம் பங்கேற்கு படி ஒவ்வொரு ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களையும் தனித்தனியே தொடர்பு கொண்டு அறிவிக்க உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல், வாகனத்தில் பிரச்சனை இருந்தால் சரி செய்து தருவதற்காக, தனது டீலர் பார்ட்னர்களுடன், ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தற்போது தொடர்பில் உள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தருவது என்ற கொள்கையின் அடிப்படையில் ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றாலே மக்களுக்கு தீப்பிடித்து விடும் என்ற அச்சம் ஏற்படும் வகையில் சமீபகாலமாக விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன.

 கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஜிதேந்திரா நிறுவனம் போபாலில் உள்ள தனது தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் அனுப்பிய 20க்கும் மேற்பட்ட புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீக்கிரையாகின. 

அதேபோல் புனேவில் உள்ள லோஹேகான் பகுதியில் ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுபோன்ற சம்பவங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் வாடிக்கையாளார்கள் கவனத்திற்கு.. சில திட்டங்களில் திருத்தம்..!

புதன், ஏப்ரல் 20, 2022
தொலைத் தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஏர்டெல் நிறுவனம், அதன் 4 போஸ்ட் பெய்டு திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது. 

இந்த திருத்தத்தின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் முன்பை விட குறைவான நன்மைகளைப் பெறுவார்கள். 

ஏர்டெல்லின் இந்த மாற்றத்தினால் முன்பு கிடைத்த சலுகைகள் குறையுமா? வேறு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

எந்தெந்த திட்டங்களில் மாற்றம் ஏர்டெல்லின் போஸ்ட் பெய்டு திட்டமான 499 ரூபாய் திட்டம், 999 ரூபாய் திட்டம், 1199 ரூபாய் மற்றும் 1599 ரூபாய் திட்டங்களில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஏர்டெல் திட்டங்களில் கிடைத்த அமேசான் பிரைம் சந்தா காலத்தினை நிறுவனம் குறைத்துள்ளது. 

இது முன்னதாக 1 வருடம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மெம்பர்ஷிப்பினை 6 மாதமாக குறைத்துள்ளது. 

ரூ.499 திட்டம் 

ஏர்டெல்லின் 499 ரூபாய் திட்டத்தில் அன்லிமிடெட் கால் சேவையும், இதில் 75 ஜிபி டேட்டாவும், தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், அமேசான் பிரைம் சேவையானது 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, ஷா அகாடமி லைஃப்டைம் சந்தா, விங்க்பிரீமியம் உள்ளிட்ட பிற சேவைகளும் கிடைக்கும்.

ரூ.999 திட்டம்

ஏர்டெல்லின் 999 ரூபாய் திட்டத்தில் அன்லிமிடெட் கால் சேவையும் கிடைக்கும். இதில் மாதம் 100 ஜிபி டேட்டாவும், தினசரி 100 எஸ் எம் எஸ், 6 மாதத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவையும், ஷா அகாடாமி லைஃப்டைம் சந்தா மற்றும் விங்க் பிரீமியம் உள்ளிட்ட பல சேவைகளுடன் வருகின்றது. இது ரெகுலர் வாய்ஸ் சேவைகளுக்கு மத்தியில் 2 இலவச ஆட் ஆன் திட்டங்களையும் வழங்குகின்றது.

ரூ.1199 திட்டம் 

இதே 1199 ரூபாய் திட்டத்தில் அன்லிமிடெட் கால் சேவையும், இதில் மாதம் 150 ஜிபி டேட்டாவும், தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், ரோலோவர் டேட்டாவாக 200ஜிபியும், 6 மாத அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், 1 வருட டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் சந்தா, ஷா அகாடாமி லைஃப்டைம் சந்தா மற்றும் விங்க் பிரீமியம் உள்ளிட்ட பல சேவைகளுடன் வருகின்றது. இது ரெகுலர் வாய்ஸ் சேவைகளுக்கு மத்தியில் 2 இலவச ஆட் ஆன் திட்டங்களையும் வழங்குகின்றது.

ரூ.1599 திட்டம் 

1599 ரூபாய் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை, தினசரி 250ஜிபி டேட்டாவும், ரோல் ஓவர் டேட்டாவாக 200ஜிபியும், அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா 6 மாதத்திற்கும், 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும், தினசரி 100 எஸ் எம் எஸ்-ம் வழங்கப்படுகிறது. இது தவிர ஷா அகாடாமி லைஃப்டைம் சந்தா மற்றும் விங்க் பிரீமியம் உள்ளிட்ட பல சேவைகளுடன் வருகின்றது. இது ரெகுலர் வாய்ஸ் சேவைகளுக்கு மத்தியில் 2 இலவச ஆட் ஆன் திட்டங்களையும் வழங்குகின்றது.

ஏமாற்றம் 

இது அமேசான் பிரைம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது வந்துள்ளது. இதன் காரணமாக ஏர்டெல்லின் இந்த திருத்தமானது வந்துள்ளது. இது அமேசான் பிரைம் பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தினை கொடுக்கலாம்.

சிக்கியது இன்போசிஸ்.. சீனாவுக்கு பணம் அனுப்பியதில் டிடிஎஸ் பிரச்சனை..!

புதன், ஏப்ரல் 20, 2022
இன்போசிஸ் உருவாக்கிய வருமான வரித் தளத்தில் இருந்த கோளாறுகள் படிப்படியாகக் குறைந்து இத்தளம் சரியாக இயங்க துவங்கிய நிலையில், இன்போசிஸ் மீதான வருமான வரிப் புகாரில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

வருமான வரி துறையின், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT) இன்போசிஸ் முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது எனத் தீர்பளித்தி வரியைச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
இன்போசிஸ்

2011-12 மற்றும் 2012-13ஆம் நிதியாண்டில் 

இன்போசிஸ் இந்தியக் கிளை சில முக்கியப் பணிகளைத் தனது சீன கிளைக்குச் சப்காண்டிராக்ட் முறையில் அளித்தது. இந்தப் பணிகளுக்காக இன்போசிஸ் இந்தியா, சீனா கிளைக்குச் செலுத்திய 239 கோடி ரூபாய் பணத்திற்கு டிடிஎஸ் பிடிக்காமல் செலுத்தியது.

வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்

இது தொடர்பாக நடந்த வழக்கில் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT) இன்போசிஸ், இந்தியா - சீனா மத்தியிலான இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் இருக்கும் காரணத்தால் TDS பிடிக்கத் தேவையில்லை என்பதற்கான ஆய்வுகளை முன்வைத்தது. இதை வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பெங்களூரு பென்ச் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்தியக் கிளை, சீன கிளை

இதனால் இன்போசிஸ் இந்திய கிளை, சீன கிளைக்குச் செலுத்திய 239 கோடி ரூபாய் பணத்திற்கு டிடிஎஸ் தொகை செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் இந்தத் தொகையைத் தற்போது செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

வருமான வரி கமிஷனர் அறிக்கை

இன்போசிஸ் இந்திய சீன கிளை மத்தியில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்த போது வருமான வரி கமிஷனர் (சிஐடி) பிரிவு 9(1)(vii) இன் கீழ் பிரிவு 9FTS இல் வரையறுக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப சேவைகளுக்கான (FTS) கட்டணம் என்றும், பிரிவு 195 இன் கீழ் இத்தொகைக்கு TDS செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து தான் இன்போசிஸ் ITAT-வில் வழக்குத் தொடுத்தது.

ITAT விளக்கம்

மேலும் வாடிக்கையாளர் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் இது வெளிநாட்டு வர்த்தகமாக ஏற்றுக்கொள்ள முடியாது என ITAT இன்போசிஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளது. இதோடு 239 கோடி ரூபாய் பணத்திற்கு 20 சதவீத டிடிஎஸ் அல்லாமல் 10 சதவீதம் டிடிஎஸ் செலுத்தினால் போதும் எனவும் ITAT பெங்களூர் பென்ச் அறிவித்துள்ளது.

நாம ஒன்னு நினைச்சா... தெய்வம் ஒன்னு நினைக்குது... சிரிக்கலாம் வாங்க

புதன், ஏப்ரல் 20, 2022

--------------------------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்!!
--------------------------------------------------------------------
வங்கி அதிகாரி : ஹலோ நீங்க காருக்காக லோன் வாங்கியிருக்கீங்க. மாதத் தவணை கட்டாததால, நாங்க காரை எடுத்துக்கிட்டு போறோம்..
கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கி இருப்பனே!
வங்கி அதிகாரி : 😅😅
--------------------------------------------------------------------
மனைவி : பின்னாடி Figure இருந்தா கண்ணு தெரியாதான்னு லாரிகாரன் திட்டிட்டு போறான் நீங்க சிரிக்கிறீங்க?
கணவன் : உன்னை போய் Figure-ன்னு சொல்றான், அவனுக்கு தான் கண்ணு தெரியல அத நெனச்சித்தான் சிரிக்கிறேன்..
மனைவி : 😡😡
--------------------------------------------------------------------
பாபு : பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டுறீங்க?
கோபு : அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க அதான்?
பாபு : 😟😟
--------------------------------------------------------------------
நாம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைக்குது..!!
--------------------------------------------------------------------
💴 கோவிலில் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர் உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூபாய் எடுத்து உண்டியலில் போட்டார். அதை பலர் பார்க்க அது அவருக்கு பெருமிதமாக இருந்தது. ஆனால் அது சற்று கிழிந்து, வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டு... சரி விடு கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ? வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று வரிசை நகர நகர அவரும் சென்றார். சில வினாடிகளில் பின்னால் இருந்து அவரது தோளை தொட்டு ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார்.

💴 அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று அவரும் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு, எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தார். பின் பிள்ளையாரை வணங்கி விட்டு, வெளியே வந்த அவர், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை தந்தவரும் அருகே நடக்க அவரிடம் சார் நீங்கள் உண்மையிலேயே கிரேட் என்றார்.

💴 அவர் புரியாமல் எதுக்கு என்றார். கடவுளின் உண்டியலில் 2 ஆயிரம் ரூபாய் போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றார். அதற்கு அவர் இல்லங்க சார்... நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு விழுந்தது, அதைத்தான் நான் எடுத்து உங்களுக்கு கொடுத்தேன் அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான் உன்னதமான கிரேட் மேன் என்றார்.

💴 டமார்னு ஒரு சத்தம் (வேற என்ன நெஞ்சு தான்)

💴 இதுதான் கடவுளின் குசும்பு என்பதா?
--------------------------------------------------------------------
அறிவியல் ஆயிரம் - கொசுவை விரட்டும் புல்!!
--------------------------------------------------------------------
🍋 புல், செடி, கொடிகள் இருந்தால் கொசுக்கள் வரும். ஆனால் கொசுவை விரட்டும் புல்லாக 'லெமன் கிராஸ்" எனப்படும் 'எலுமிச்சைப் புல்" உள்ளது.

🍋 இதன் மணம் எலுமிச்சையைப் போன்றே இருக்கும். இந்தப் புல்லை வளர்த்தால், கொசுக்கள் வராது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், துணி துவைக்கும் பவுடர், புளோர் கிளீனர் போன்றவற்றுடன் சேர்க்கப்படுகிறது.

🍋 கேரளாவில் அதிகமாக விளைவிக்கப்படுவதால் கொச்சி வாசனை எண்ணெய் எனவும் அழைப்பர். லெமன் டீ தயாரிப்பில், எலுமிச்சைச் சாறுடன் நறுமணத்துக்காக சில இடங்களில் சேர்க்கப்படுகிறது.

அருள்மிகு புற்றுமாரியம்மன் திருக்கோயில் கிள்ளை கடலூர்

புதன், ஏப்ரல் 20, 2022
இந்த கோயில் எங்கு உள்ளது?

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிள்ளை என்னும் ஊரில் அருள்மிகு புற்றுமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கடலூரில் இருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் உள்ள கிள்ளை என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கடலூரில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

கோயில் உள்ளே 15 அடி உயரத்தின் ஸ்ரீ புற்றுமாரியம்மன் மனித உருவிலும், அருகில் மூலவர் கருங்கல் விக்ரகத்தில் அருள்பாலிக்கின்றார்.

இத்திருக்கோயில் அதிசயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

உள் பிரகாரத்தில் எட்டு கரங்களுடன் ரத்த காளியும், நான்கு கரங்களுடன் பேச்சியம்மனும் அருள்பாலிக்கின்றனர்.

இரு கரங்களுடன் மூன்றடியில் கிராம தேவதையாக பெரியாச்சி வடக்குப் பக்கம் பார்த்து அருள்பாலிக்கின்றாள்.

வேறென்ன சிறப்பு?

விமானம் சீமை ஓட்டினால் கட்டப்பட்டுள்ளது. விமானத்தில் ஒரு கலசம் மற்றும் நான்கு பக்கமும் பூத கணங்கள் அமைந்துள்ளன.

கோயில் நுழைவு வாயில் முன் இடப்பக்கம் விநாயகர், வலப்பக்கம் ஐந்தடியில் ஐம்பொன் வேலும் அமைக்கப்பட்டுள்ளது.

வெளி பிரகாரத்தில் வடக்குப் பக்கம் பார்த்து துர்க்கை அம்மன் அருள்பாலிக்கிறார். இச்சன்னதியில் சிறு கலசம் உள்ளது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, ஆடி மாதம் முதல் வெள்ளி பேச்சியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, நான்காம் வெள்ளி திருவிளக்குப் பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

தை மாதம் முதல் வெள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜையும், கடைசி வெள்ளி சுமங்கலி பூஜையும், வைகாசி மாதம் தீ மிதி உற்சவம் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும்.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம், கண்நோய் மற்றும் அம்மை உள்ளிட்ட நோய்களுக்கு இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றியும் மற்றும் தானியங்களை காணிக்கையாக அளித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

அயன் பீம் -ஏவுகணைகளை சத்தமில்லாமல் தாக்குமாம்.! உண்மையா? இஸ்ரேல் புதிய சாதனை.!

செவ்வாய், ஏப்ரல் 19, 2022
தொடர்ந்து பல நாடுகள் அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் நுழையும், ஏவுகணைகளைக் கண்ணுக்கு தெரியமால் சத்தமின்றி வானில் தாக்கும் லேசர் ஆயுத சோதனையை இஸ்ரேல் வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது இஸ்ரேல் அணு ஆயுதம் உள்பட பல்வேறு அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளில் ஒன்று. குறிப்பாக இந்த நாடுஅயன் டோம் எனப்படும் அதிநவீன வான்பாதுகாப்பு ஆயுத அமைப்பையும் கொண்டுள்ளது.

குறிப்பாக எதிரிநாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை நடுவானில் மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த அயன் டோம்
உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்ரேலுக்கும், காசா முனையில் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஆண்டு
நடந்த போரில் இந்த அயன் டோம் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் உலகளவில் பேசுபொருளானது.

இந்த நிலையில் இஸ்ரேல் தற்போது புதிய வகை ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. அதாவது தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் நுழையும் அளில்லா விமானம், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் போன்றவற்றை கண்ணுக்குகே தெரியாமல் சத்தமின்றி தாக்கும் லேசர் ஆயுத டெக்னாலஜியை, இஸ்ரேல் வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்து.

குறிப்பாக இஸ்ரேல் இந்த லேசர் அணு ஆயுதத்துக்கு அயர்ன் பீம் என்று பெயரிட்டுள்ளது. மேலும் இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட், இந்த புதிய அயர்ன் பீம் லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை, இஸ்ரேல் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. அதேபோல் இது அறிவியல் புனைகதைபோல் தோன்றலாம், ஆனால் இது உண்மை எனவும், இந்த அயர்ன் பீம் குறிக்கீடுகள், வான் எல்லைக்குள்நுழையும் ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டிரோன்கள் போன்றவற்றை சத்தமின்றி துல்லியமாக தாக்கக்கூடியவை எனவும் கூறியுள்ளார்.

எதிரிகளின் தாக்குல்களிலிருந்து நாட்டை முழுமையாக பாதுகாக்க, அடுத்த பத்தாண்டுகளில் இஸ்ரேலின் எல்லைகளைச் சுற்றி லேசர்அமைப்புகளை பயன்படுத்துவதே இலக்கு என நஃப்தாலி பென்னட் கூறியிருந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றைடிவிட்டர் பகத்தில் வெளியிட்டிருந்தார் பென்னட்.
WhatsApp, Messenger, Telegram டிரிக்ஸ்: எரிச்சலூட்டும் மெசேஜ்களை எப்படி மியூட் செய்வது? இனி பிளாக் வேண்டாம்..

செவ்வாய், ஏப்ரல் 19, 2022

மெசேஜிங் பயன்பாடுகளால் நாம் இப்போது 24 ,மணி நேரமும் நமக்குப் பிடித்தவர்களுடன் இணைப்பில் இருக்கிறோம். அதாவது, WhatsApp, Messenger மற்றும் Telegram போன்ற மெசேஜிங் பயன்பாடுகள் மூலம் ஒருவருக்கொருவர் மைல்களுக்கு அப்பால் அமர்ந்திருந்தாலும் கிட்டத்தட்ட நம்மை நெருக்கமாக்கியுள்ளன. எந்த பண்டிகையாக இருந்தாலும் சரி, அன்றாட உரையாடலாக இருந்தாலும் சரி, அரட்டை பயன்பாடுகள் சில சமயங்களில் ஒரு அறையில் நண்பர் அல்லது குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

எரிச்சலூட்டும் மெசேஜ்களை இனி பிளாக் செய்ய வேண்டாம்? இதை செய்தால் போதும்

தொடர்ந்து இணைந்திருப்பது ஒரு அழகான உணர்வு என்றாலும், சில சமயங்களில் அது சற்று அதிகமாக இருக்கலாம். தொடர்ச்சியான மெசேஜ்கள் எல்லா நேரத்திலும் சுகமான அனுபவத்தை வழங்காது, சில நேரங்களில் இது நமக்கு எரிச்சலூட்டும். குறிப்பாக நீங்கள் பல பங்கேற்பாளர்கள் இருக்கும் அரட்டை குழுக்களிலிருந்தால், நிச்சயம் இந்த தொல்லை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த எல்லா பயன்பாடுகளும் ஒரு குழு அரட்டை அல்லது குறிப்பிட்ட அரட்டையைச் சிறிது நேரம் அல்லது நிரந்தரமாக முடக்க அல்லது மியூட் செய்ய அனுமதிக்கும் முடக்கு அம்சத்துடன் வருகின்றன.

அமைதியான மெசஜ்ஜிங் அனுபவத்தை பெற இதைச் செய்யுங்கள்

மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் என்று இந்த மூன்று பயன்பாடுகளில் நீங்கள் எதை வைத்திருந்தாலும் சரி, இந்த பதிவு உங்களுக்கானது தான். தொடர்ச்சியான மெசேஜ்களால் தொல்லை அடையாமல், அமைதியான மெசஜ்ஜிங் அனுபவத்தைப் பெற இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்துங்கள். பிரபலமான மற்றும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அரட்டை பயன்பாடுகளில் அரட்டையை எவ்வாறு மியூட் அல்லது முடக்கம் செய்வது என்பதை நாங்கள் உங்களுக்குக் கற்றுத்தரப் போகிறோம்.

வாட்ஸ்அப்பில் அரட்டைகளை மியூட் செய்வது எப்படி?

உங்கள் தனிப்பட்ட மற்றும் குழு அரட்டைகளை 8 மணிநேரம் அல்லது 1 வாரம் அல்லது நிரந்தரமாக முடக்குவதற்கு WhatsApp உங்களை அனுமதிக்கிறது.

நீங்கள் முடக்க விரும்பும் WhatsApp இல் உள்ள அரட்டைக்குச் செல்லவும்.

அந்த அரட்டையின் சுயவிவர ஐகானில் நீண்ட நேரம் அழுத்தவும்.

நீங்கள் மேலே ஒரு முடக்கு ஐகானைக் காண்பீர்கள் அதைத் தட்டவும்.

அது உங்களுக்கு மூன்று விருப்பங்களைக் காண்பிக்கும்.
8 மணிநேரம், 1 வாரம் மற்றும் எப்போதும் என்று காண்பிக்கப்படும்.

விரும்பிய பெட்டியைத் தேர்ந்தெடுத்துச் சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

பேஸ்புக் மெசஞ்சரில் அரட்டைகளை முடக்குவது எப்படி?

Facebook Messenger ஆனது அறிவிப்புகளை முடக்கவும் உங்களை அனுமதிக்கிறது.

மெசஞ்சரைத் திறந்து, நீங்கள் முடக்க விரும்பும் தொடர்பை நீண்ட நேரம் அழுத்தவும்.

இது உங்களுக்கு மூன்று விருப்பங்களைக் காண்பிக்கும்.

செய்தி அறிவிப்புகளை முடக்கு, அழைப்பு அறிவிப்புகளை முடக்கு, செய்தியை முடக்கு மற்றும் அழைப்பு அறிவிப்புகள் ஆகியவற்றைக் காண்பிக்கும்.

நீங்கள் செல்ல விரும்பும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

கடைசி விருப்பம், அந்தத் தொடர்பிலிருந்து அழைப்பு மற்றும் செய்திகள் ஆகிய இரண்டிற்கும் அறிவிப்புகளை மறைக்கும்.

சரி என்பதைத் தட்டவும்.

டெலிகிராமில் அரட்டைகளை முடக்குவது எப்படி?

டெலிகிராம் மற்றொரு பிரபலமான அரட்டை பயன்பாடாகும். இது அரட்டைகளை முடக்கவும் உங்களை அனுமதிக்கிறது. இது வாட்ஸ்அப் போன்றது.

டெலிகிராமைத் திறந்து, நீங்கள் முடக்க விரும்பும் அரட்டையை நீண்ட நேரம் அழுத்தவும்.

உங்களுக்கு மேலே முடக்கு விருப்பம் காட்டப்படும்.

நீங்கள் 1 மணிநேரம், 8 மணிநேரம் அரட்டையை முடக்கலாம், 2 நாட்களுக்கு முடக்கலாம் மற்றும் முழுமையாக முடக்கலாம் என்று காண்பிக்கப்படும்.

விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து முடித்துவிடுங்கள்.

அவ்வளவு தான், இந்த முறையைப் பின்பற்றி நீங்கள் உங்களுக்கு எரிச்சலூட்டும் மெசேஜ்களை பிளாக் செய்யாமல் மியூட் செய்யலாம்.

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்