Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஏப்ரல், 2020

பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம்...!

பாண்டவர்கள், தங்களது பன்னிரண்டு காலம் வனவாசம் முடிவடையும் நிலை வந்ததால் அடுத்து அஞ்ஞாத வாசத்தை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றி கலந்து ஆலோசித்தனர். அப்பொழுது தர்மர், நாம் அனைவரும் அஞ்ஞாத வாசம் செல்ல உகந்த நாடு விராட நாடு ஆகும் என்றான்.

அர்ஜூனன், அண்ணா! தாங்கள் ராஜசூயயாகம் செய்து தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட மன்னர். தாங்கள் எவ்வாறு மற்றொரு அரசனிடம் அடிபணிந்து இருக்க முடியும் என்றான். தர்மர், அர்ஜூனா! இதை நினைத்து நீ கவலைக் கொள்ள வேண்டாம். 

நாம் நமது வனவாச பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். நான் துறவுக் கோலம் பூண்டு கங்கன் என்னும் பெயருடன் மன்னருக்கு ஆசி மற்றும் அறிவுரை கூறும் நிலையில் இருப்பேன் என்றான்.

அதன் பின் ஒவ்வொருவரும் தங்களுக்கான மாறுவேஷத்தை முடிவு செய்தனர். பீமன், நான் மடைப்பள்ளியைச் சேர்ந்த வல்லன் என்றும், சமையல் கலையில் வல்லவன் என்றும் வல்லபன் என்ற பெயரில் மன்னருக்கு விதவிதமாக உணவை பரிமாறும் பணியில் ஈடுபடுவேன் என்றான். 

அர்ஜூனன், நான் இந்திரலோகத்தில் அரவாணியாக மாறுவேன் என்னும் பெற்ற சாபத்தை அஞ்ஞாத வாசத்தில் நிறைவேற்றிக் கொள்வேன். அதனால் நான் பிருகன்னளை என்னும் பெயருடன் அரசகுமாரிக்கு இசை, நடனம் போன்றவற்றை கற்றுத் தரும் பணியில் ஈடுபடுவேன் என்றான். 

நகுலன், நான் குதிரை இலக்கணங்களை நன்றாக அறிந்து வைத்திருப்பதால், தாமக்கிரந்தி என்னும் பெயர் கொண்டு, குதிரைகளை பாதுகாப்பாக வளர்க்கும் பணியில் ஈடுபடுவதாக கூறினான்.

சகாதேவன், நான் மாடுகளை பார்த்துக் கொள்ளும் பணியில் தந்திரிபாலன் என்னும் பெயற்கொண்டு ஈடுபடுவதாக கூறினான். திரௌபதி, நான் அரசக்குமாரிக்கு ஒப்பனை செய்யும் பணியாளாக சைரந்தரி என்னும் பெயற்கொண்டு ஈடுபடுவேன் என்றாள். 

அதன் பிறகு பாண்டவர்கள், தங்களது ஆயுதங்களை ஒரு பத்திரமான இடத்தில் வைத்தனர். பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செல்லும் முன் துர்கா தேவிக்கு யாகம் செய்தனர். துர்கா தேவி அவர்கள் முன் தோன்றி, உங்களது அஞ்ஞாத வாசம் தடங்களின்றி நடைபெறும் என ஆசி கூறி மறைந்தாள். 

அதன் பிறகு பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாத வாசத்திற்கான வேஷத்தை பூண்டனர். தர்மர், துறவுக்கோலம் பூண்டு காவியும், கமண்டலமும் ஏந்தி துறவியாக காட்சியளித்தார்.

தர்மர், துறவுக்கோலத்துடன் கங்கன் என்னும் பெயருடன் விராட அரசனை சந்தித்தான். விராடனும், துறவியின் நட்பு தனக்கு தேவை என நினைத்து தன்னுடன் இருக்குமாறு கூறினான். 

அதன் பின் சிறிது நாட்கள் கழித்து பீமன், நான் வல்லன் என்றும், சமையல் கலையில் வல்லவன் என்றும், என்னை சமையல் பணியாளாக அமர்த்துமாறு கூறினான். தருமரும், பீமனுக்கு ஆதரவாக பேசியதால் விராடன், சமையல்காரர்களின் தலைவனாக இருக்குமாறு கட்டளையிட்டான்.

அடுத்து சில நாட்கள் கழித்து, அர்ஜூனன் திருநங்கை உருவில் வந்து தன்னை பிருகன்னளை என்று அறிமுகம் செய்துக் கொண்டான். தான் நடனம், இசை கற்றுக் கொடுப்பதில் வல்லவன் எனக் கூறினான். விடார அரசன், உடனே அரசகுமாரிக்கு நடனம் மற்றும் இசையை கற்றுக் கொடுக்குமாறு கூறினான்.

அதற்கு அடுத்து நகுலன், தான் தாமக்கிரந்தி என்றும், தனக்கு குதிரைகள் இலக்கணம் நன்றாக தெரியும் என்றும் யுதிஷ்டிரனின் குதிரைகளை அடக்கிய அனுபவம் உள்ளதாகவும் கூறினான். உடனே விராட அரசன் குதிரைகளை காக்கும் பொறுப்பை நகுலனிடம் ஒப்படைத்தான். 

அதன்பின் சகாதேவன் விராட அரசனை வந்து சந்தித்தான். தான் தந்திரிபாலன் என்றும், தனக்கு பாண்டவர்களின் பசுக்கூட்டத்தை கவனித்த அனுபவம் உள்ளது என்றும் கூறினான். விராட அரசனும், பசுக்களை காக்கும் பணியை சகாதேவனிடம் கொடுத்தான். திரௌபதி, சைரந்திரி என்னும் பெயருடன் அரசி சுதேட்சணையிடம் அறிமுகம் கொண்டாள். 

தான் ஒரு வேலைக்காரி என்றும், தனக்கு மொத்தம் ஐந்து கணவன்மார்கள் என்றும், ஒரு சாபத்தில் கணவரை ஒரு ஆண்டு காலம் பிரிந்திருக்க நேர்ந்திருப்பதாக கூறினாள்.

அரசி சுதேட்சணை, திரௌபதியின் அழகை கண்டு வியந்தாள். பெண்ணே! உன் அழகால் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வாய்? எனக் கேட்டாள். திரௌபதி, அரசியே! தாங்கள் இதை நினைத்து கவலைக் கொள்ள வேண்டாம். 

எனக்கு ஆபத்து நேர்ந்தால் எனது கணவன்மார்கள் என்னை பாதுகாப்பர் எனக் கூறினாள். பிறகு தனக்கு பாண்டவர்களின் துணைவி திரௌபதிக்கு ஒப்பனை செய்த பணி அனுபவம் இருப்பதாக கூறினாள்.

அரசக்குமாரியும், தன் பணிப்பெண்ணாக திரௌபதியை ஏற்றுக் கொண்டாள். பாண்டவர்கள் ஐவரும் மாறுவேடத்தில் பணி ஆட்களாக விராட நாட்டிற்கு வந்தடைந்தனர். தங்களின் பணிகளை செவ்வனே செய்தனர்.

விராட நாட்டில் பண்டிகை தினங்களில், நாடு திருவிழா போல் கோலாகலமாக காட்சி அளிக்கும். அச்சமயத்தில் பற்பல விளையாட்டு போட்டிகளும் நடைப்பெறும். இவ்வாறு விழா நடந்து கொண்டிருக்கும் போது ஜீமுதன் என்னும் மல்லன் வடக்கில் இருந்து வந்தான். 

அவன் விராட நாட்டிற்கு வந்திருந்த பல மன்னர்களுடன் மற்போர் புரிந்து எளிதாக வென்றான். போக போக அவனிடம் மற்போரில் டுபட எவரும் வரவில்லை.

உடனே ஜீமுதனுக்கு தற்பெருமை தலைக்கேறியது. என்னுடன் மற்போரில் ஈடுபட விராட நாட்டில் எவரும் இல்லையா? என ஆணவத்துடன் கூறினான். அவனுடன் மற்போர் புரிய எவரும் முன் வரவில்லை. 

இதைக் கண்டு விராட மன்னன் மனம் வருந்தினான். இதை கவனித்த தருமர், மன்னரிடம் சென்று, அரசே! சமையல்கார தலைவனாக இருப்பவர் சிறந்த மற்போர் வீரர் என நினைக்கின்றேன். அன்று தங்களிடம் அறிமுகம் செய்துக் கொண்ட போது தன்னை மல்லன் என்று கூறினான் என்றான்.

உடனே அரசர், பீமனை அழைத்து ஜீமுதனிடம் மற்போர் புரியுமாறு கூறினான். பீமனும், ஜீமுதனும் போட்டியில் ஈடுப்பட்டனர். பீமனின் தாக்குதலை தாக்கு பிடிக்காமல் ஜீமுதன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அங்கிருந்து சென்றான். 

விராட நாட்டு மன்னனும் மகிழ்ச்சி அடைந்தான். இவ்வாறு பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம் சில மாதங்கள் கடந்துச் சென்றது.

தொடரும்...!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக