திங்கள், 9 டிசம்பர், 2019

ஆசைக்கும் எல்லை உண்டு... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

ஆசைக்கும் எல்லை உண்டு !!

ஒரு வன அதிகாரிக்கு, அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டில் ஓடியபோது, அவளை ஒரு சிங்கம் பார்த்தது. அதற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய்விட்டது. அது உடனே வன அதிகாரியிடம் சென்று, தனக்கு அவர் மகளை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டது.

அதிகாரிக்கு சிங்கத்திடம் பயம். அதனால், 'நோ" சொல்ல முடியவில்லை. 'என்ன செய்யலாம்?" என்று யோசித்தார். அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது.

அவர் சிங்கத்தைப் பார்த்து, 'காட்டு ராஜா... காட்டு ராஜா.... என் மகள் ரொம்ப பயந்தவள். உன்னுடைய பற்களையும், நகங்களையும் எடுத்துவிட்டால் அவளுக்கு பயம் தெளிந்துவிடும். அப்புறம், நான் அவளை உனக்கு திருமணம் செய்து தருகிறேன்!" என்று சொன்னார்.

அந்தப் பெண்மீது கொண்ட ஆசையால் சிங்கம் அதற்கு சம்மதித்தது. வன அதிகாரி, முதலில் அதன் பற்களைப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.

பற்களையும், நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஒரு ஆட்டுக் குட்டிபோல் ஆயிற்று! உடனே வன அதிகாரி ஒரு தடியை எடுத்து, அதை 'அடி, அடி" என்று அடித்து விரட்டினார்.

நடக்க முடியாததற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, 'தப்பித்தோம்... பிழைத்தோம்" என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!
-------------------------------------------------------------------------------------------------------------
இளமை - முதுமை..!
இனியும் வேண்டும் என்பது இளமை.
இனியும் வேண்டாம் என்பது முதுமை.

இனி எப்போ விடியும் என்பது இளமை.
இனி ஏன் விடிகிறது? என்பது முதுமை.

மறக்க வேண்டாததை மறந்து விடுவது இளமை.
மறக்க வேண்டியதை மறக்காமல் இருப்பது முதுமை.

இனிதான் இனிமையான வாழ்வு என்பது இளமை.
இனிதான் கசப்பான வாழ்வு என்பது முதுமை.

மறைக்க வேண்டியதை மறைக்காதது இளமை.
மறைக்க வேண்டியதை மறைப்பது முதுமை.

வாழும் காலம் இனிமை என்பது இளமை.
வாழ்ந்த காலம் இனிமை என்பது முதுமை.

சில்லறை தேடி அலைய நினைப்பது இளமை.
கல்லறை தேடி அலைய நினைப்பது முதுமை.

ஆண்டுகள் கடக்கின்றன, அனுபவங்கள் கிடைக்கின்றன, வாழ்வில் இறப்பு வருவது உறுதி. இருக்கும் வரை முதுமை என்ற நினைவு வராமல், இறைவனை நினைத்து, அவனுக்கு நன்றி செலுத்தி, தொழுது உயிர்போகும் வரை இளமை நினைவோடு இருந்தால் எக்காலமும் மகிழ்வுதான்.
-------------------------------------------------------------------------------------------------------------

பொன்மொழிகள்..!
👉 கற்றவர்களும், அறிஞர்களும், வீரர்களும் ஒரு நாளும் பணத்தை வாழ்வின் லட்சியமாக கொள்ள மாட்டார்கள்.

👉 கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக்கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்.

👉 நுண்ணறிவுடன் அன்பும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது எதுவுமே உலகில் இல்லை.

👉 உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.
-------------------------------------------------------------------------------------------------------------
 குறளும்... பொருளும்...!!

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பொருள் :

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்