வெள்ளி, 29 மே, 2020

அங்கதன் தூது செல்லுதல்...!

அன்றைய பொழுது கழிந்து, சூரியன் தன் ஒளிகளை வீசிக் கொண்டிருந்தது. வடக்கு வாயிலுக்கு வெளியே இராமர் தனது பதினேழு வெள்ளம் படையுடன் போருக்கு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தார். இராமர், இராவணனுக்காக தன் கோதண்டத்தை ஏந்தி போருக்குத் தயார் நிலையில் இருந்தார். 

இராவணன் வடக்கு வாயில் வழியாக போருக்கு வருவான் என வெகுநேரம் எதிர்பார்த்து இராமர் காத்து கொண்டிருந்தார். வெகுநேரம் ஆகியும் இராவணன் போருக்கு வருவதுபோல் தெரியவில்லை. இதற்கு மேல் காத்திருப்பதில் ஒரு பயனும் இல்லை என்று நினைத்த இராமர், விபீஷணனை அழைத்து, இதற்கு மேல் நாம் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை தொடங்கினார். 

இராமர், சிறை வைத்திருக்கும் சீதையை விடுவிக்குமாறும், அப்படி இல்லையென்றால் போருக்கு வருவமாறும் நாம் ஒரு தூதுவனை அனுப்பலாம் என்றார்.

இராமரின் ஆலோசனையை கேட்ட விபீஷணன், இது தான் சரியான செயல் என்றான். சுக்ரீவன், நாம் மிகவும் வலிமை வாய்ந்த வீரனை அனுப்பவது தான் சிறந்தது என்றான். இதைக் கேட்ட இலட்சுமணன், அண்ணா! இராவணனின் மேல் இரக்கம் காட்டி தூது அனுப்புவது சரிதானா? நாம் இப்பொழுது இராவணனை அழிப்பதை விட்டுவிட்டு அவனுக்கு தூது அனுப்புவதா? அந்த இராவணன், தேவர்கள் முதற்கொண்டு அனைவரையும் துன்புறுத்தியவன். அன்னை சீதையையும் கவர்ந்துச் சென்று சிறையில் வைத்தவன். 

அவன் நம் தந்தை போன்ற ஜடாயுவை கொன்றவன். இவ்வளவு செய்த இராவணனின் மீது கருணை காட்டி அவனுக்கு தூது அனுப்புவது சரி தானா? எனக் கேட்டான். இராமர் இலட்சுமணனிடம், தம்பி. இலட்சுமணா! நீ சொல்வது முற்றிலும் உண்மை தான். அரக்கர்கள் அழிவது நிச்சயம். ஆனால் நம் தர்ம நெறிப்படி தூது அனுப்புவது தான் பெருந்தன்மையைக் குறிக்கும் என்றார்.

பிறகு இலட்சுமணன் தூது அனுப்புவதற்கு சம்மதித்தான். பிறகு அனைவரிடமும் யாரை தூது அனுப்புவது என ஆலோசித்தார். இராமர், நாம் மறுபடியும் அனுமனை அனுப்பினால் நம்மிடம் சிறந்த வீரர்கள் எவரும் இல்லை என அவன் நினைத்துக் கொள்வான். 

அனுமனை தவிர சிறந்த வலிமைமிக்க வீரர் உள்ளார்களா? என யோசித்தார். உடனே இராமனின் நினைவுக்கு வந்தது வாலியின் மைந்தன் அங்கதன் தான். இராமர் அனைவரிடமும் நாம் அங்கதனை தூது அனுப்பலாம் என்றார். அனைவரும் இதற்கு சம்மதித்தனர். 

அங்கதனை வரச் சொல்லி செய்தி அனுப்பினர். அங்கதனும் உடனே அங்கு வந்துச் சேர்ந்தான். அங்கதன் இராமரை நோக்கி பணிந்து வணங்கினான். பிறகு இராமர் அங்கதனிடம், அங்கதா! நீ தூதுவனாக இராவணனிடம் சென்று நான் சொல்லும் இரண்டு விஷயங்களை கூறி அதற்கு அவன் கூறும் பதிலை எனக்கு வந்து சொல்வாயாக என்றார். இராமர் சொன்னதை கேட்ட அங்கதன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

அங்கதன் இராமரிடம், ஐயனே! தாங்கள் என்னை தூதுவனாக தேர்வு செய்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் இராவணனிடம் என்ன செய்தியை சொல்ல வேண்டும்? என்பதை என்னிடம் கூறுங்கள் என்றான். இராமர், அங்கதா! நீ இராவணனின் இருப்பிடத்திற்குச் சென்று சீதையை என்னிடம் ஒப்படைத்துவிட்டால் நான் அவனை விட்டுவிடுகிறேன். 

அப்படி இல்லையென்றால் போரில் அவனின் பத்து தலைகளையும் சிதைத்துவிடுவேன். இவற்றில் சரியான வழியை தேர்ந்தெடுக்கும்படி கூறுவாயாக. இதற்கு அவன் கூறும் பதிலை என்னிடம் வந்து கூறுவாயாக எனக் கூறி அங்கதனுக்கு விடை கொடுத்தார். அங்கதன், இராமர் தன்னை தூதுவனாக தேர்ந்தெடுத்ததை நினைத்து மிகவும் பெருமைப்பட்டு அங்கிருந்து விரைந்துச் சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்