பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தார். அவருக்கு மூன்று குமாரர்கள் இருக்கின்றனர். அந்த அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது. அவரை குணப்படுத்த சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து அவரது கண்களில் பிழிந்தால் தான் சரியாகும் என்று வைத்தியர் கூறினார்.
அந்த சஞ்சீவிமலைக்கு செல்வதற்கும், மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் அங்கு சென்று மூலிகைகளை பறிக்க முடியும் என்று வைத்தியர் கூறிவிட்டார்.
அதைக் கேட்ட அரசனின் மூன்று குமாரர்களில், முதல் மகன் நான் கொண்டுவருகிறேன் என்று கூறிவிட்டு கிளம்புகிறான். சஞ்சீவிமலை அடிவாரத்திற்கு சென்றதும் அங்குள்ள தேவதை வழிகாட்ட ஓர் நிபந்தனை விதித்தது.
நான் உன்பின்னால் வருவேன். நான் இடதுபக்கம் திரும்பு என்றால், நீ இடதுபக்கம் திரும்ப வேண்டும். வலதுபக்கம் திரும்ப வேண்டும் என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நீ நடப்பதை நிறுத்தக்கூடாது. நடந்து கொண்டே இருக்கவேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பி பார்க்கக்கூடாது! என்று கூறியது.
முதல் மகன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி அவனுக்கு கேட்கவில்லை. என்னாயிற்று.! என தன்னையறியாமல் அவர் திரும்பி பார்க்கிறார். நிபந்தனையை மீறிவிட்டார் என்பதால் அரசனின் முதல் மகன் கற்சிலையாகிவிடுகிறார்.
முதல் மகன் இன்னும் திரும்பி வரவில்லை என்பதால் அடுத்து இரண்டாவது மகன் மலைக்கு கிளம்புகிறார். அவருக்கும் அதே நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாதி தூரம் வந்துவிடுகிறார். திடீரென அவருக்கு சிரிப்பு ஒலி கேட்கிறது. ஆர்வம் மிகுதியால் திரும்பி பார்க்கிறார். விதியை மீறியதால் அவரும் கற்சிலையாகி விடுகிறார்.
இப்போது மூன்றாவது மகன் செல்கிறார். இவருக்கும் அதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. இவருக்கு பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறார். பின்னால் அலறல் சத்தம், சிரிப்பொலி சத்தம் என்று எது நடந்தாலும், திரும்பி பார்க்காமல் முன்னே செல்கிறார். அதனால் அவரால் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையை பறித்துக் கொண்டு வர முடிந்தது. அதனால் அரசரின் கண்கள் குணமாகியது.
தத்துவம் :
பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா விதமான முயற்சியையும் நம்முடைய மனசு செய்யும். ஆனால், அவற்றையெல்லாம் புறக்கணித்து நம் மனதை ஒருமுகப்படுத்தி நம் குறிக்கோளை நோக்கி சென்றால் நமக்கு வெற்றி நிச்சயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக