Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 மே, 2019

இந்தியாவில் ராணுவ சர்வாதிகாரம் ஏற்படாமல், ஜனநாயகம் நிலைபெற நேரு என்ன செய்தார்? தேர்தல் வரலாறு - 3


Image result for அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியும் நேருவும்
அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியும் நேருவும்.

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்



(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து முடிவுகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் . இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் மூன்றாம் பாகம் இதோ...)



காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியா, தமது உடன் பிறந்த பாகிஸ்தான் போல ராணுவ ஆட்சியாகவோ, சர்வாதிகாரமாகவோ சறுக்கி விழாமல், ஜனநாயகக் குடியரசாக உறுதிப்படுவதற்கான சில பங்களிப்புகளை நேருவின் காலம் செய்தது.

நாடாளுமன்ற நடைமுறைகள்:பம்பாய் மாகாண சட்டமன்றம், பிரிட்டிஷ் இந்தியாவின் 6-வது மற்றும் கடைசி மத்திய சட்டமன்றம், அரசமைப்புச் சட்ட அவை ஆகியவற்றின் அவைத் தலைவராக இருந்து அனுபவம் பெற்றவரான ஜி.வி.மவலங்கர் சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்ற மக்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இன்று நிறுவப்பட்ட நாடாளுமன்ற மரபுகள், நடைமுறைகள், நெறிகள் ஆகியவை பலவற்றை வகுத்து நிலைபெறச் செய்தவர் மவலங்கர்தான். கேள்வி நேரம், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவது ஆகியவை மவலங்கர் உருவாக்கி நிலைபெறச் செய்த நாடாளுமன்ற நடைமுறைகள்தான். முழு நாடாளுமன்றமுமே ஆழமாக விவாதித்து முடிவுக்கு வர முடியாத பிரச்சனைகளை ஆராய நாடாளுமன்றக் குழுக்களை அமைக்கும் நடைமுறையையும் மவலங்கர் கொண்டுவந்தார்.

நீதித்துறை சுதந்திரம்:ஜனநாயகக் குடியரசுகள் நிலைபெற்று விளங்க தேவையான நிபந்தனைகளில் முக்கியமானது சுதந்திரமான நீதித்துறை. இந்தியாவில் நீதி, நிர்வாகம், சட்டமியற்றும் அவை ஆகியவற்றின் அதிகாரங்கள், எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆனால், விடுதலை பெற்ற காலத்தில் நீதித்துறையின் எல்லையில் தலையிடவோ, அதன் சுயேச்சைத் தன்மையை உதாசீனப்படுத்தவோ முடியும் அளவுக்கு தேசியத் தலைவர்கள் செல்வாக்கு பெற்று விளங்கினர். பிரிட்டிஷ் இந்தியாவின் நாடாளுமன்றத்திலேயே பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, சுதந்திரத்துக்குப் பிறகு அவர் உயிருடன் இருந்தவரை நடந்த மூன்று தேர்தல்களிலும் தமது கட்சியை வெற்றிபெறவைத்து தொடர்ந்து மூன்று முறையும் பிரதமரானார். ஆனால், இந்த அபரிமிதமான செல்வாக்கை அவர், நீதித்துறையில் தலையிடுவதற்குப் பயன்படுத்தாமல் தவிர்த்து, நல்லதொரு முன்னுதாரணத்தை அமைத்தார்.
Image result for சீன அச்சுறுத்தலின் பின்னணியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ரேடியோ உரையாற்றும் பிரதமர் நேரு.
சீன அச்சுறுத்தலின் பின்னணியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ரேடியோ உரையாற்றும் பிரதமர் நேரு.

ஹாரோவிலும், கேம்பிரிட்ஜிலும் கல்வி பயின்று ஆங்கிலச் சூழலில் வளர்ந்த நேருவுக்கு, சுதந்திரமான நீதித்துறை என்பதை பெருமிதமாகக் கொண்டிருந்த ஆங்கிலச் சமூகத்தின் விழுமியங்களின் பேரில் மரியாதை இருந்தது. நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்துடன் நீதித்துறையை உருவாக்கியதில் நேருவின் பங்கு உண்டு. அத்துடன், அரசாங்கம் நினைத்தால் நினைத்தவுடன் பதவி நீக்க முடியாதவர்களாக நீதிபதிகளின் பதவியை உருவாக்கியதும் நீதித்துறை சுயேச்சையாக இருக்கவேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்துதான்.

அடிப்படை உரிமைகளின் காவலர்களாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை உருவாக்கியதில்கூட நேருவின் பங்களிப்பு உண்டு. "பண்பட்ட வாழ்வின் மறுபெயர் சட்டத்தின் ஆட்சி. சட்டத்தின் ஆட்சி நிலவ வேண்டுமென்றால் சட்டத்தை செயல்படுத்த சுதந்திரமான நீதிபதிகள் வேண்டும்" என்று டெல்லியில் 1959ல் நடந்த சர்வதேச நீதிபதிகள் மாநாட்டின் பிளீனரி கூட்டத்தில் பேசிய நேரு தெரிவித்தார்.

முந்த்ரா ஊழல்: நீதிபதியை விமர்சித்ததற்கு மன்னிப்பு கோரிய நேரு

1957-ம் ஆண்டு ஹரிதாஸ் முந்த்ரா என்பவருக்கு சொந்தமான நிறுவனங்களில் சுமார் ரூ.1.26 கோடி முதலீடு செய்தது அரசு நிறுவனமான எல்.ஐ.சி. அன்றைய பண மதிப்பில் இது மிகப்பெரிய தொகை. அந்த நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் இருந்த மதிப்பைவிட அதிக விலை கொடுத்து பங்குகள் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைப்பற்றி விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சக்லா அளித்த அறிக்கையை அடுத்து நேருவின் அரசில் நிதி அமைச்சராக இருந்து, இந்த பங்கு வர்த்தகத்துக்கு அனுமதி தந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

Image result for டி.டி.கிருஷ்ணமாச்சாரி
டி.டி.கிருஷ்ணமாச்சாரி

இந்த விவகாரம் பற்றி மேலும் விசாரிக்க அப்போது பதவி நீட்டிப்பு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த விவியன் போஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச காங்கிரசுக்கு ரூ.1.5 லட்சமும், மத்திய காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1 லட்சமும் ஹரிதாஸ் முந்த்ரா நன்கொடை அளித்ததற்கு கைமாறாகவே அவரது நிறுவனத்தின் பங்குகளை எல்.ஐ.சி. அதிக விலைகொடுத்து வாங்கியதாக நீதிபதி விவியன் போஸ் கண்டறிந்தார்.

1959 ஜுன் 10-ம் தேதி டில்லியில் நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, இந்தக் குற்றச்சாட்டு கற்பனை என்றும், நீதிபதி விவியன் போசுக்கு அறிவு குறைவு என்றும் நேரு விமர்சித்துவிட்டார்.

உடனடியாக கல்கத்தா வழக்கறிஞர்கள் நேருவின் பேச்சை கடுமையாக கண்டித்து தீர்மானம் இயற்றியதுடன், அவரது பேச்சு நீதிமன்ற அவமதிப்பு என்றும் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் பிரதமரான நேரு, விவியன் போசுக்கும், அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஆர்.தாசுக்கும் மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார். ஜூன் 26 அன்று விவியன் போசுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தில் தமது கருத்துகள் முறையற்றவை என்பதை உணர்வதாகவும், தாம் அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்றும், திடீரென கேள்வி கேட்ட நிலையில் தாம் திணறிவிட்டதாகவும் நேரு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் "நான் இழைத்த முறையற்ற செயலை மன்னிக்கும் அளவு நீங்கள் நல்லெண்ணத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்றும் நேரு குறிப்பிட்டார் (ஆதாரம்: அபினவ் சந்திரசூட் எழுதிய 'ரீபப்ளிக் ஆஃப் ரெட்டோரிக்' நூல்).

நேருவின் இந்த செயல் நீதித்துறையின் கண்ணியத்தை காப்பதில் அதிகாரம் மிக்க அரசுத் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் கடைபிடிக்கவேண்டிய சுயகட்டுப்பாட்டுக்கும், பேண வேண்டிய எல்லைக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. இந்த முன்னுதாரணங்களே நீதித்துறை - நிர்வாகத்துறை இடையிலான உறவை வடிவமைக்க உதவியாக இருந்தன.

ராணுவத்தின் முக்கியத்துவம் குறைப்பு

பிரிட்டிஷ் ஆட்சியில் வைஸ்ராய்க்கு அடுத்தபடியாக அதிகாரம் மிக்க பதவியாக ராணுவத் தளபதியின் பதவி இருந்தது. சுதந்திரக் குடியரசாக இந்தியா உருவான நிலையில், குடிமை நிர்வாகத்தை முன்னிலைக்கு கொண்டு சென்று, ராணுவத்தை குடிமை நிர்வாகத்துக்கு பதில் சொல்லும் அமைப்பாக மாற்றும் முக்கியப் பணியை கவனமாக மேற்கொண்டார் நேரு.
Image result for தீன் மூர்த்தி இல்லம்
தீன் மூர்த்தி இல்லம்.

டெல்லியில் ராணுவத் தளபதி குடியிருந்த தீன்மூர்த்தி பவன் வளாகத்தை, தமக்கான பிரதமர் குடியிருப்பாக அவர் ஆக்கினார், இது சாதாரண நடவடிக்கையாக தோன்றினாலும், வைஸ்ராய் மாளிகைக்கு (தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை) அடுத்தபடியாக முக்கிய அதிகார பீடமாக விளங்கிய ஒரு கட்டடத்தை ராணுவ நிர்வாகத்தின் கையில் இருந்து எடுத்து குடிமை நிர்வாகத்தின் தலைமைக்கு அளித்தது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்கிறார் எழுத்தாளர் பூ.கொ.சரவணன்.

அத்துடன், ஒற்றைத் தலைமயின் கீழ் இருந்த பாதுகாப்புப் படையை, ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்றாகப் பிரித்து மூன்று தளபதிகளின் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார் நேரு. உள்நாட்டு சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் ராணுவத்தை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து, அதற்கென துணை ராணுவப் படைகளையும் அவர் உருவாக்கினார். பாகிஸ்தானைப் போல இந்தியாவில் அரசியலில் ராணுவத் தலையீடும், ராணுவ சர்வாதிகாரமும் ஏற்பட முடியாமல் போனதற்கு இந்த செயல்களே காரணம் இதுவே என்பது பூ.கொ.சரவணனின் பார்வை.

விரும்பாத பகுதிகளை பலவந்தமாக சேர்க்க எதிர்ப்பு தெரிவித்த கிரிப்ஸ்

இந்தியா ஒரு ஜனநாயக நாடாக உறுதிப்படுவதற்கு நேரு காலத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக இருந்ததைப் போல, இந்தியா இன்று சந்தித்துவருகிற சில ஜனநாயக சிக்கல்களுக்கும் நேரு காலத்தில் எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படாத நடவடிக்கைகளே காரணமாக இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போர்ச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தமது அரசியல் உரிமைகளை வெல்ல இந்திய மக்களும், தலைவர்களும் ஆர்வம் காட்டினர். இரண்டாம் உலகப் போரை எதிர்கொள்ள பிரிட்டனுக்கு இந்தியா தேவைப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் அரசியல் அபிலாஷைகளுக்கு தீர்வு தரும் வகையில் 1942-ம் ஆண்டு பிரிட்டன் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது பிரிட்டன். போர் முடிந்த பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கான பிரிட்டனின் விருப்பத்தை வெளியிட்ட அந்தக் குழு அதற்கு ஒரு நிபந்தனை விதித்தது.

பிரிட்டிஷ் இந்தியாவில் பல ராஜ்ஜியங்கள் இருந்தன. இந்தியா முழுமைக்கும் சுதந்திரம் வழங்கும்போது, இந்தியாவில் சேர விரும்பாத ராஜ்ஜியங்களை பலவந்தப்படுத்தி சேர்க்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. இதனை காங்கிரஸ் ஏற்கவில்லை.

அத்துடன், பல்வேறு வகையிலும் காங்கிரஸ் எதிர்பார்ப்புகளுக்கு இந்த கிரிப்ஸ் தூதுக்குழுவின் திட்டம் போதுமானதாக இல்லை. கடைசியில் கிரிப்ஸ் முயற்சி தோற்றது.

இதனிடையே, இந்தியா என்ற பரந்த ஒன்றுபட்ட நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருப்பார்கள். எனவே, அவர்களது அபிலாஷைகளை இந்து பெரும்பான்மை இந்தியா பிரதிபலிக்காது என்ற எண்ணம் முஸ்லிம் லீக் கட்சிக்கு வளரத் தொடங்கியது.
Image result for முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையைத் தீவிரமாக முன்னெடுத்தார்.
முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையைத் தீவிரமாக முன்னெடுத்தார்.

எனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாகாணங்களைக் கொண்ட பாகிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் உலகப் போர் முடிந்த நேரத்தில் வலுத்திருந்தது.

1946-ல் பிரிட்டன் அமைச்சரவைக் குழு ஒன்று சுதந்திரம் தருவதற்கான வழிவகைகளை விவாதிக்க இந்தியா வந்தது. அது ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் முஸ்லிம் லீக்கின் அரசியல் அபிலாஷைகளுக்கும் இடம் தரும் வகையில் ஒரு புதிய தீர்வை முன்மொழிந்தது. அதன்படி ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவில் மூன்றடுக்கு ஆட்சி இருக்கும். மேலே மத்திய அரசுக்கு பாதுகாப்பு, வெளியுறவு, தொலைத் தொடர்பு போன்ற சில துறைகளில் மட்டுமே அதிகாரம் இருக்கும். கீழே மாகாண அரசுகள் இருக்கும்.

இரண்டுக்கும் நடுவில், மாகாணங்களின் பிரதேசக் கூட்டமைப்பு மூன்று உருவாக்கப்படும். அவற்றில் இரண்டு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாகாணங்களைக் கொண்டவையாகும். மூன்றாவது மாகாணக் கூட்டமைப்பு இந்தியாவின் மத்திய மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கியிருக்கும். இந்த தீர்வை முஸ்லிம் லீக் ஏற்றுக்கொண்டது.

ஆனால், காங்கிரஸ் இதனை நிராகரித்தது. "காங்கிரசும், இந்திய முதலாளிகளால் உருவாக்கப்பட்ட 'பம்பாய் திட்டமும்' உறுதியான, மத்திய அரசு இருக்கவேண்டும் என்று விரும்பின. பிரிட்டிஷ் ராஜ்-ஜின் வாரிசாக உருவெடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது" என்கிறது பார்பரா டி. மெட்காஃப், தாமஸ் ஆர்.மெட்காஃப் எழுதிய நவீன இந்தியாவின் சுருக்க வரலாறு (A Concise History of Modern India) என்ற புத்தகம்.

மகாணங்களின் கூட்டமைப்புகளை உள்ளடக்கிய, பலவீனமான மத்திய அரசைக் கொண்ட இந்த தீர்வுக்கு காங்கிரஸ் உடன்படாத நிலையில், முஸ்லிம் லீக் கட்சியின் முஸ்லிம்களுக்கான தனி பாகிஸ்தான் என்ற கோரிக்கை வலுவடைந்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கு சுதந்திரம் தருவதற்காக அனுப்பப்பட்ட கடைசி வைசிராயான மவுண்ட்பேட்டர்ன் இந்தியா-வை இரண்டு நாடுகளாகப் பிரித்து விடுதலை வழங்கும் தீர்வை முன்வைத்தார். அதையே செயல்படுத்தவும் செய்தார். மத மோதல்களுக்கும், ரத்தக் களரிகளுக்கும் இந்தப் பிரிவினை இட்டுச் சென்றது.
Image result for அண்ணாவும் பெரியாரும்
அண்ணாவும் பெரியாரும்

திராவிட நாடு கோரிக்கையை விரைவிலேயே திராவிட இயக்கம் கைவிட்டது. ஆனாலும், அதிக அதிகாரம் பொருந்திய மாநிலங்களைக் கொண்ட கூட்டமைப்பாக இந்தியாவை பார்த்த அந்த இயக்கத்தின் மாநில சுயாட்சிப் பார்வையும் இந்திய அரசியலில் செல்வாக்கு எதையும் பெற முடியவில்லை.

தெலங்கானா, காஷ்மீர், பஞ்சாப், அஸாம் போன்ற தனிநாடு கோரிக்கைகளும், ஆயுதம் தாங்கிய தீவிரவாதமும் சுதந்திர இந்தியாவை வெவ்வேறு காலங்களில் அலைக்கழித்து வந்ததற்கும், குறைவான உரிமைகளோடு உருவாக்கப்பட்ட மாநில அரசுகளில் கூட காங்கிரஸ் அல்லாத கம்யூனிஸ்ட், திமுக போன்ற கட்சிகள் ஆட்சியைப் பிடித்தபோது அவற்றைக் கலைத்து இங்கே ஒரு ஒற்றை ஆட்சியை நோக்கி இந்தியா செல்லும் போக்கை உருவாக்கியதிலும், இந்தியாவை ஒரு கூட்டாட்சியாகப் பார்ப்பதற்கு நேரு தலைமையிலான காங்கிரஸ் தொடக்கம் முதலே பிடிவாதமாக மறுத்ததும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

பேச்சுரிமைக்கு 4 விதி விலக்குகள்

ஒரு நாடு ஜனநாயகக் குடியரசாக இருக்கவேண்டுமென்றால் அந்த நாட்டின் மக்களுக்கு இருக்கவேண்டிய உரிமைகளில் முதன்மையானது பேச்சுரிமை, எழுத்துரிமை. ஆனால், இந்த பேச்சுரிமை, எழுத்துரிமை எவ்வளவு பெரிய சட்டபூர்வ, சட்டபூர்வமற்ற தாக்குதல்களை இன்று சந்தித்து வருகிறது என்பது கண்கூடு.

சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமையை உறுதி செய்வதாக கூறினாலும், அதற்கு நான்கு விதிவிலக்குகளையும் நிர்ணயித்துள்ளது. அதாவது இந்த விதிவிலக்குகள் உங்கள் பேச்சுரிமை, எழுத்துரிமையை மட்டுப்படுத்துகின்றன. வரையறை செய்கின்றன.

தேச விரோதம், ஆபாசம், நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு ஆகியவையே இந்த நான்கு விலக்குகள்.

சுதந்திர இந்தியாவில் சென்னை மாகாணத்தில் ரொமேஷ் தாப்பர் என்பவர் நடத்திய 'கிராஸ் ரோட்ஸ்' என்ற இடதுசாரிப் பத்திரிகை நேருவின் கொள்கைகளை விமர்சித்து எழுதிக்கொண்டிருந்தது. இதனை சென்னை மாகாண அரசு 1950-ம் ஆண்டு தடை செய்தது. இதை எதிர்த்து ரொமேஷ் தாப்பர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற பெஞ்ச் அவரது பேச்சுரிமையை ஏற்று புகழ்பெற்ற தீர்ப்பு ஒன்றை அளித்தது.
Image result for உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஆனால், உடனடியாக இந்த தீர்ப்பை செல்லாமல் ஆக்கும் வகையில் நேரு ஒரு அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். சுதந்திர இந்தியாவின் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்று அழைக்கப்படும் இந்த திருத்தத்தில்தான் பேச்சுரிமைக்கு வரையறைகள் விதிக்கப்பட்டன.

இந்த முதல் திருத்தத்தில் சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் வழிவகை செய்யப்பட்டது என்றபோதும், பின்னாளில் பேச்சுரிமை, எழுத்துரிமைகள் 'தேசவிரோதம், ஆபாசம், நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு' ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் பெருமளவில் நசுக்குப்படுவதற்கான முதல் விதையை பெரிய தாராளவாதியாக அறியப்பட்ட நேருவின் காலமே ஊன்றிவிட்டது.

காலனி ஆதிக்கக் காலத்தை ஒப்பிடும்போது, சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் பேச்சுரிமையில் முக்கிய முன்னேற்றம் எதையும் சட்டப்படியாக கொண்டுவந்துவிடவில்லை. கொண்டுந்ததெல்லாம் வெறும் முழக்கம்தான் என்று தமது "ரீபப்ளிக் ஆஃப் ரெட்டோரிக்" நூலில் குறிப்பிடுகிறார் பம்பாய் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அபிநவ் சந்திரசூட்.

Image result for அபிநவ் சந்திரசூட்.
1963-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு அரசமைப்புச் சட்டத்திருத்தம் அமைதியான முறையில் பிரிவினைக் கோரிக்கையை வலியுறுத்தும் உரிமையையும் பறித்துக்கொண்டதாகவும், திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்த அரசியல் கட்சியான திமுக-வை குறிவைத்தே இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும் கூறுகிறார் சந்திரசூட். இந்த திருத்தத்தையே சந்திரசூட் 'திமுக-எதிர்ப்புத் திருத்தம்' என்றே அழைக்கிறார்.

ஆக, சுதந்திர இந்தியாவின் பேச்சுரிமை பலவீனமாக இருக்கிறது எனில் முதல் கோணல் தொடங்கியது நேருவின் காலத்திலேயே.

அதைப் போல ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 356-ஐ பயன்படுத்தி கலைக்கும் வழக்கத்தையும் நேருவின் காலமே தொடங்கி வைத்தது. கேரள மாநிலத்தில் 1957-ல் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் அரசு 1959-ல் கலைக்கப்பட்டது.

வெளியுறவு - பொருளாதாரக் கொள்கைகள்

மிக கவனமாக வடிவமைக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கை, நேரு யுகத்தின் கொடை. பலவீனமான பொருளாதார, ராணுவ பலத்தைக் கொண்டிருந்த சுதந்திர இந்தியா மிக கவனமாக தமது வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டிய நெருக்கடி இருந்தது. கம்யூனிஸ்ட் சோவியத் யூனியன், முதலாளித்துவ அமெரிக்கா என்ற இரண்டு பெரும் சக்திகளில் ஒன்றின் ஆளுகைக்குள் சென்றுவிடாமல், அதே நேரத்தில் ஒரு பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு நேரு, இந்தியாவை 'பிரிட்டிஷ் காமன்வெல்த்தில்' சேர்க்க சம்மதித்தார்.

அணி சேராக் கொள்கையையும், சமாதான சகவாழ்வுக்கான பஞ்சசீலக் கொள்கையையும் நேரு கவனமாக செதுக்கினார். இந்தியாவின் சுதந்திரத்தையும், ஜனநாயகக் கட்டமைப்பையும் இன்றும் பாதுகாத்து வருவதில், உள்நாட்டு வளர்ச்சிக்கான அடித்தளத்தை இட்டதில் நேருவின் தீர்க்கமான வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஆனால், இந்தக் கொள்கை தாம் உருவாக்கியவை இல்லை என்று தன்னடக்கத்துடன் கூறினார் நேரு.

"இந்திய வெளியுறவுக் கொள்கையின் வேர்கள் இந்தியாவின் நாகரிகத்தில், மரபில், சுதந்திரத்துக்காக நடத்திய போராட்டத்தில், புவியியல் அமைப்பில், அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான அதன் முனைப்பில் இருப்பதாக நேரு கூறினார்" என்று 'சுதந்திரத்துக்குப் பிந்திய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை' என்ற நூலில் குறிப்பிடுகிறார் வெளியுறவுக் கொள்கை வல்லுநரான வி.பி.தத்.

இந்திய வெளியுறவுக் கொள்கையின் வேர்கள் இந்திய மரபில் இருப்பதாக நேரு மிகவும் வலியுறுத்தியுள்ளார். இது ஒருவகையில் உண்மைதான். ஆனால், இந்திய சிந்தனை மரபு இந்தக் குறிப்புகளில் தோன்றுவதைப் போல ஒற்றைத் தன்மையானது அல்ல.
Image result for ட்வைட் எய்சன்ஹோவர்
 ட்வைட் எய்சன்ஹோவர்

பல்வேறு சிந்தனை மரபுகள் இந்தியாவில் உண்டென்றாலும், வைதீக மரபும், அதற்கு எதிரான பௌத்த மரபும் இன்று வரை எதிரும் புதிருமாகத் தொடர்கின்றன. பௌத்தம் 'மஜ்ஜிம பதிபாதா' என்று கூறப்படும் இடைநிலைப் பாதையை வலியுறுத்துகிறது.

முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற இரண்டு தீவிர துருவங்களுக்கு இடையில் அணி சேராமல் செல்கின்ற ஒரு இடைநிலைப் பாதையை வெளியுறவுக் கொள்கையாகத் தேர்ந்தெடுத்த நேரு அது இந்திய சிந்தனை மரபில் இருந்து வருவது என்று கூறியிருப்பது பிழையில்லை. ஆனால், மிகச் சரியாக சொல்லவேண்டுமென்றால் அது இந்தியாவின் பௌத்த சிந்தனை மரபில் இருந்து தோன்றியது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த இடைநிலைப் பாதை நேருவின் வெளிநாட்டுக் கொள்கையில் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரக் கொள்கையிலும் பிரதிபலித்தது.

சோஷியலிசத்தையும் முழுமையாக ஏற்காமல், முதலாளித்துவத்துக்கும் முழுமையாக செல்லாமல் இரண்டின் பலன்களையும் பெறும் வகையில் கலப்புப் பொருளாதாரத்தை வடிவமைத்ததிலும் புத்தரின் இடைநிலைப் பாதை மரபே பிரதிபலித்தது.

மாற்று வழிகள்

சுதந்திர இந்தியாவில் உருவான ஜனநாயக அமைப்பு குறைகளும், விமர்சனங்களும் அற்ற ஒன்றல்ல. இதுவரை அமைந்த எந்த அரசும், 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று அமையவில்லை. அதைப் போல, சமூகத்தில் ஜனநாயகம் நிலவாத நாட்டில் அரசியல் ஜனநாயகம் எந்த அளவுக்குப் பலன் அளிக்கும் என்ற அம்பேத்கரின் கேள்விக்கும் பொருள் இல்லாமல் போய்விடவில்லை.
Image result for பீம்ராவ் அம்பேத்கர்
பீம்ராவ் அம்பேத்கர்

தேர்ந்தெடுக்கிற பிரதிநிதிகள் சரியில்லை என்றால் திருப்பி அழைக்கும் உரிமைகள் சில மேற்கத்திய நாடுகளைப் போல இந்தியாவில் இல்லை என்ற குரல்களும் அவ்வப்போது எழுகின்றன.

அமெரிக்காவைப் போன்ற ஜனாதிபதி முறை, விகிதாச்சார தேர்தல் முறை என்று பல மாற்றுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், இந்த எவையும் விமர்சனத்துக்கோ, குறைகளுக்கோ அப்பாற்பட்டவையல்ல.
இத்தொடரின் முந்தைய இரண்டு பாகங்களைப் படிக்க:

தேர்தல் வரலாறு: இந்தியாவின் முதல் தேர்தல் எப்படி நடந்தது தெரியுமா?
மொரார்ஜி தேசாய்க்கு பதில் இந்திரா காந்தி பிரதமரானது எப்படி?

குறைகளற்ற உன்னத ஜனநாயகம் எங்கேதான் இருக்கிறது? அத்தகைய உன்னத ஜனநாயகம் உருவாகும் வரையில், "சோரம் செய்திடாமே தருமத்து உறுதி கொன்றிடாமே ஊரையாளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை" என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டே கையிலிருக்கும் ஜனநாயகத்தை கவனத்தோடு பரிசீலிக்கவேண்டியிருக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக