Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 மே, 2019

காமராஜர் இந்திரா காந்தியை பிரதமாராக்கியது ஏன்? மொரார்ஜி தேசாய் தேர்வு செய்யப்படாதது ஏன்? - தேர்தல் வரலாறு-2


Image result for இந்திரா காந்தி.
 இந்திரா காந்தி. 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது இதன் இரண்டாம் பாகம் இதோ...)


இரண்டாவது தேர்தல் - அதிகரித்தன வாக்குப் பதிவு நாள்கள்,குறைந்தன தேசியக் கட்சிகள்

முதல் மக்களவையின் ஆயுள் காலம் முடிந்து இரண்டாவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் முக்கியப் பகுதி 1957-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதியில் இருந்து மார்ச் 15-ம் தேதி வரையிலான காலத்தில் 20 நாள்கள் நடந்தது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 5-ம் தேதியே இரண்டாவது மக்களவை அமைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அப்போது தேர்தல் நடத்த முடியாத பஞ்சாப் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் வாக்குப் பதிவு ஜூலை 15 வரை பல கட்டங்களில் நடந்தது.

முதல் தேர்தலில் 53 கட்சிகள் போட்டியிட்டன அல்லவா. இரண்டாவது தேர்தலில் இந்த எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. 4 தேசியக் கட்சிகள் உட்பட மொத்தம் 15 கட்சிகள் மட்டுமே இரண்டாவது தேர்தலில் களத்தில் இருந்தன.

முதல் தேர்தலில் போட்டியிட்ட 14 தேசியக் கட்சிகளில் 8 கட்சிகள் ஏதோ ஒருவகையில் இடதுசாரிக் கட்சிகளாக இருந்தன. இது தவிர, அம்பேத்கரின் பட்டியலினத்தார் கூட்டமைப்பும் அடிப்படை மக்களின் உரிமைகளையே நோக்கமாக கொண்டதாக இருந்தது. பாரதீய ஜனசங்கம், ஹிந்து மஹா சபா, ராமராஜ்ய பரிஷத் ஆகிய மூன்று வலதுசாரி கட்சிகள் இருந்தன. இடது மையவாதப் போக்கை கடைபிடித்த காங்கிரஸ் முக்கியக் கட்சியாக இருந்தது.
Image result for இந்திய நாடாளுமன்றம்.

இந்திய நாடாளுமன்றம்.

ஆனால், இரண்டாவது தேர்தலில் நான்கு தேசியக் கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன. ஒன்று இடது மையவாத காங்கிரஸ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிரஜா சோஷியலிஸ்ட் (கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி மற்றும் சோஷியலிஸ்ட் கட்சி இணைப்பில் உருவானது) ஆகிய இரண்டு இடதுசாரிகள், வலதுசாரியான பாரதீய ஜன சங்கம் ஆகியவையே அந்த நான்கு கட்சிகள். முந்தைய தேர்தலில் தேசியக் கட்சிகளாக இருந்த சில கட்சிகள் இந்த தேர்தலில் மாநிலக் கட்சிகளாக வகைப்படுத்தப்பட்டன.

இத்தேர்தலில் 490 இடங்களில் போட்டியிட்டு 47.78 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 371 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 27 இடங்களிலும், பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி 19 இடங்களிலும், பாரதீய ஜன சங்கம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. 31 இடங்களில் பிற மாநிலக் கட்சிகளும், 42 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். திமுக இந்த தேர்தலில் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை. எனவே, திமுக வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர். நேரு மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

மூன்றாவது தேர்தல் - சுதந்திரா கட்சியின் உதயம்

1962ல் நடந்த மூன்றாவது தேர்தலில் ஆறு தேசியக் கட்சிகள் போட்டியிட்டன. பிரஜா சோஷியலிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்துவந்து ராம் மனோகர் லோஹியா மீண்டும் சோஷியலிஸ்ட் கட்சியை உருவாக்கி போட்டியிட்டார். 1959-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த ராஜகோபாலாச்சாரி உருவாக்கிய வலதுசாரிப் பார்வை கொண்ட சுதந்திரா கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டது.

"கம்யூனிஸ்ட்டுகள் முன்னேறுவதை தடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தில், கம்யூனிஸ்டுகளின் வழிகளையும், லட்சியங்களையும் தழுவும் காங்கிரஸ் கட்சியின் போக்கை புதிய (சுதந்திரா கட்சி) கட்சி எதிர்க்கும். எதிரியின் வழிமுறையை நாடிச் செல்வது தற்காப்பல்ல மாறாக அது சரணடைவதாகும் என்று சுதந்திரா கட்சி நம்புகிறது" என்று எழுதிய ராஜகோபாலாச்சாரி, "தனி மனித நலனையும், தனிமனித முயற்சிகளையும் எல்லா துறையிலும் ஊக்குவிப்பதன் மூலம்தான் சமூக நீதியையும், சமூக நலனையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையின் மீது தமது கட்சி கட்டப்பட்டிருப்பதாக" எழுதினார். அரசின் அதிகரிக்கும் தலையீட்டுக்கு எதிராக தனி நபர்களைப் பாதுகாக்க தம் கட்சி பாடுபடுவதாக அவர் கூறினார்.

Image result for ராஜகோபாலாச்சாரி
ராஜகோபாலாச்சாரி

ஆனால், இதே ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தபோது 1953-ம் ஆண்டு கொண்டுவர முயன்ற "மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தில்" பள்ளிக் கல்வி நேரத்தை ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமாக குறைக்கவும், மீதமுள்ள நேரத்தில் மாணவர்கள் தங்கள் பெற்றோரின் தொழிலைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ஒரு திட்டம் வகுத்தார். இதை குலக்கல்வித் திட்டம் என்று கூறி விமர்சித்த திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவை போராட்டம் நடத்தின.

காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ராஜாஜியும் பதவி விலகினார். அவரது திட்டமும் கைவிடப்பட்டது.

இது காங்கிரஸ் கட்சிக்குள் ராஜாஜிக்கு ஏற்பட்டு வந்த நெருக்கடியையும், அவரே மேற்கொள்ள விரும்பிய அரசின் தலையீடுகள் எத்தகையவாக இருந்தன என்பதையும் இந்த நிகழ்வு காட்டுகிறது.

ஆக, வலதுசாரிப் பார்வையில் ஒரு கட்சியும், இடது சாரிப் பார்வையில் ஒரு கட்சியும் இந்த தேர்தலில் புதிதாகத் தோன்றி போட்டியிட்டன.

வலுதுசாரிப் பார்வை கொண்ட கட்சிகளும், இடதுசாரிப் பார்வை கொண்ட கட்சிகளும் பிரிந்து நின்றே போட்டியிட்டன. அவற்றின் வாக்கு சதவீதம் மொத்தத்தில் அதிகம் இருந்தாலும் அவற்றால் ஆளுங்கட்சிக்கு சவால் விடும் அளவுக்கு வெற்றியைப் பெற முடியவில்லை. இரண்டின் போக்குகளையும் சுவீகரித்துக்கொண்டு மையவாதப் பார்வை கொண்ட காங்கிரஸ்தான் தொடர்ந்து பரவலான ஏற்பைப் பெற்றது.

அகாலி தளம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற வலுவான மாநிலக் கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன. அம்பேத்கரின் ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃபெடரேஷன், குடியரசு கட்சியாகி இந்த தேர்தலில் போட்டியிட்டது. இது தவிர 10 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலில் களத்தில் குதித்தன. சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சியும், திமுக-வில் இருந்து பிரிந்து வந்த ஈ.வெ.கி.சம்பத் தலைமையில் உருவான தமிழ் தேசியக் கட்சியும் இதில் அடக்கம். ஆனால், இந்த இரண்டு கட்சியும் பெரிய தாக்கம் எதையும் செலுத்தவில்லை.

மூன்றாவது முறையாக நேரு

இந்த தேர்தலில் 44.72 சதவீத வாக்குகளுடன், 361 எம்.பி.க்களை பெற்று காங்கிரஸ் மீண்டும் பெரும்பான்மை பெற்றது. ஜவஹர்லால் நேரு மீண்டும் பிரதமரானார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 29 எம்.பி.க்களை பெற்றது. ஜன சங்கம் தமது வலுவை அதிகரித்துக்கொண்டது. 196 இடங்களில் போட்டியிட்டு அந்தக் கட்சி 14 எம்.பி.க்களை பெற்றது.
Image result for நேரு - இந்திரா
நேரு - இந்திரா

சோஷியலிஸ்ட் கட்சி 107 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களிலும், சுதந்திரா கட்சி 173 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும், பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி 168 இடங்களில் போட்டியிட்டு 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 28 இடங்களிலும், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 6 இடங்களிலும், சுயேச்சைகள் 20 இடங்களிலும் வெற்றி பெற்றனர். திமுக 7 இடங்களில் வெற்றி பெற்றது.

நேருவின் மரணமும் - இந்திராவின் எழுச்சியும்

1962ல் சுதந்திர இந்தியாவின் மூன்றாவது பிரதமராகப் பொறுப்பேற்ற நேரு, 1964-ல் உயிரிழந்தார். மே 27-ம் தேதி தற்காலிகப் பிரதமராக குல்சாரிலால் நந்தா பொறுப்பேற்றார். பிறகு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூடி லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. அவரது அமைச்சரவையில் நேருவின் மகளான இந்திரா காந்தி தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

சோஷியலிஸ்ட் கட்சித் தலைவரான ராம் மனோகர் லோஹியா அப்போது இந்திராவை 'குங்கி குடியா' (ஊமைப் பதுமை என்று பொருள்) என்று வருணித்தார்.

அவர் ஜூன் 9-ம் தேதி பதவியேற்றார். இவரது காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டது. 1966ம் ஆண்டு ஜனவரியில் சோவியத் யூனியனில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்துவதற்கான தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் சாஸ்திரி கையெழுத்திட்டார். மறு நாள் ஜனவரி 11-ம் தேதி அங்கேயே மாரடைப்பால் உயிரிழந்தார் சாஸ்திரி. அவரது மரணம் தொடர்பான பல சர்ச்சைகள் எழுந்தன. மீண்டும் சில நாள்கள் குல்சாரிலால் நந்தா பிரதமராகப் பொறுப்பேற்றார்.

காமராஜர், எஸ்.நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டீல், அதுல்ய கோஷ் உள்ளிட்ட பழந்தலைவர்கள் மூத்த தலைவரான மொர்ரார்ஜி தேசாய்-க்கு பதிலாக நேருவின் மகளான இந்திரா காந்தியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தினர்.

காங்கிரஸ் மக்களவைக் குழு இந்திராவைப் பிரதமராக ஏற்றது. 1966 ஜனவரி 24-ம் தேதி இந்திரா பிரதமராகப் பொறுப்பேற்றார். 'ஊமைப் பதுமை' என்ற அந்த பிம்பமே இந்த நான்கு தலைவர்களும் அவரை பிரதமராக முன்னிறுத்தக் காரணம் என்கிறார் 'இந்தியன் டெமாக்ரசி இன் அப்ளிகேஷன்' என்ற நூலின் ஆசிரியர் கே.வி.நரேந்திரா.

ஆனால், இந்த பிம்பம் வெகு விரைவிலேயே மாறியது. எமர்ஜென்சியை கொண்டுவந்து எதிர்க்கட்சிகளை சிறையிலடைத்தது, மறுபுறத்தில் வங்கிகளை தேசியமயமாக்கியது என - விமர்சிக்கப்பட்டதும், பாராட்டப்பட்டதுமான - பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்தது இப்படி ஊமைப் பதுமையாக வருணிக்கப்பட்ட இந்திராதான்.

புதிதாகத் தோன்றிய சுதந்திர நாடான இந்தியா, ஜனநாயகமாக உறுதிப்பட்டது எப்படி? இன்றும் தொடரும் சில சிக்கல்களின் விதைகள் அந்தக் காலத்திலே எப்படி ஊன்றப்பட்டன என்பது மூன்றாவது பாகத்தில்...

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக