ஒரு காட்டில் யானை ஒன்று நண்பர்கள்
இல்லாமல் வாழ்ந்து வந்தது. அதற்கு ஒரு நண்பனாவது வேண்டும் என்ற ஆசையில் நண்பர்கள்
யாராவது கிடைப்பார்களா? என்று அந்த காட்டில் தேடிச் சென்றது. அப்போது யானை முதலில்
மரத்தில் உள்ள ஒரு குரங்கை பார்த்தது. அந்த குரங்கிடம் சென்று நீ என்னை நண்பனாக
ஏற்றுக் கொள்வாயா? என்று கேட்டது. அதற்கு அந்த குரங்கு நீ பெரிய உடம்பினைக்
கொண்டுள்ளாய் அதனால் என்னை போல் உன்னால் மரத்திற்கு மரம் தாவ முடியாது. அதனால்
நான் உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றது.
அடுத்ததாக
யானை, முயல் ஒன்றை பார்த்தது. அந்த முயலிடம் சென்று யானை என்னை உன் நண்பனாக
ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த முயல் நீ என்னைவிட பெரிய உடம்பினை
கொண்டிருக்கிறாய். அதனால் என்னை போல் உன்னால் வேகமாக ஓடமுடியாது. அதனால் உன்னை என்
நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றது.
அடுத்ததாக
செல்லும் வழியில் யானை தவளை ஒன்றை பார்த்தது. அந்த தவளையிடமும் சென்று என்னை உன்
நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த தவளை என்னை போல் உன்னால் தாவ
முடியாது. அதனால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.
கடைசியாக
யானை நரி ஒன்றை பார்த்தது. அதனிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா
என்று கேட்டது. நரியும் என்னைவிட உடம்பளவில் பெரியவனாக இருக்கிறாய். அதனால் உன்னை
என் நண்பனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றது. இப்படியே ஒவ்வொரு விலங்கும்
தன்னை நண்பனாக ஏற்றுக் கொள்ளாததை எண்ணி மிகுந்த கவலையுடன் யானை தனது இடத்திற்கு
திரும்பிச் சென்றது.
அடுத்தநாள்
காட்டில் இருந்த விலங்குகள் அனைத்தும் அலறி அடித்துக் கொண்டு வேகமாக ஓடி
கொண்டிருந்தன. அந்த விலங்குகளுள் ஒன்றாக ஓடிக் கொண்டிருந்த கரடியிடம் ஏன்
ஓடுகிறீர்கள்? என்று யானை கேட்டது. அதற்கு கரடி, இங்கு உள்ள விலங்குகளை ஒவ்வொன்றாக
இந்த காட்டில் உள்ள ஒரு புலி கொன்று சாப்பிட்டு வருகிறது.
அதனால்
தான் நாங்கள் ஓடுகிறோம் என்று சொல்லி கொண்டே ஓடியது. கரடி கூறியதைக் கேட்ட யானை
நேராக புலியிடம் சென்றது. புலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று
கேட்டது. அதற்கு அந்த புலி இது உனக்கு தேவையில்லாத விஷயம். நான் அப்படித்தான்
அனைவரையும் கொன்று சாப்பிடுவேன். இங்கிருந்து பேசாமல் சென்றுவிடு என்றது.
உடனே
யானைக்கு கோபம் வந்து புலியை தனது காலால் உதைத்து தள்ளியது. காயம் ஏற்பட்ட புலி
காயத்துடன் அந்த காட்டை விட்டு ஓடிச் சென்றது. யானை, புலியை அடித்து துரத்தியதைப்
பார்த்த விலங்குகள் அனைத்தும் எங்களின் உயிரைக் காப்பாற்றிய நீ உடம்பில் பெரியவனாக
இருந்தாலும், இனி நீ எங்கள் நண்பன் என்று சொல்லி யானையை நண்பனாக ஏற்றுக்கொண்டன.
தத்துவம் :
துன்பம்
வரும் வேளையில் காப்பாற்றுபவனே சிறந்த நண்பன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக