முருகன் என்ற ஒரு தொழிலாளி, ஒரு மாமிச நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள், தன் வேலை முடிந்ததும், மேற்பார்வையிட மாமிசம் வைக்கும் குளிர் அறைக்குச் சென்றார். துரதிர்ஷ்டவசமாக அறைக் கதவு மூடிக்கொண்டது.
அவர் உள்ளே மாட்டிக் கொண்டுத் தவித்தார். உதவுவதற்கு யாரும் அங்கு இல்லை. அவர் கூச்சலிட்டு, கதவைத் தட்டியும் சத்தம் வெளியே கேட்காததால் யாரும் உதவிக்கு வரவில்லை. மேலும், பல தொழிலாளிகள் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பி சென்று விட்டனர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, முருகனுக்கு மரண பயம் வந்து விட்டது. அந்த நேரத்தில் தொழிற்சாலையின் பாதுகாவலர் கதவைத் திறந்து அவரைக் காப்பாற்றினார். முருகன், காவலருக்கு நன்றி கூறி விட்டு, அவரின் வருகையைப் பற்றி விசாரித்தார். அந்த வேளையில், காவலருக்கு அங்கு வர அவசியம் இல்லாததால் ஆச்சரியப்பட்டார்.
அதற்கு பாதுகாவலர், நான் இந்த தொழிற்சாலையில் கடந்த 35 வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் தினமும் இங்கு வந்து செல்கிறார்கள்.
ஆனால் ஒரு சிலர் மட்டுமே காலையிலும், மாலையிலும் எனக்கு வணக்கம் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். பலர் கண்டும் காணாமல் செல்கிறார்கள். நீங்கள் வழக்கமாகச் சொல்லும் காலை வணக்கத்தைக் கூறிவிட்டு உங்கள் வேலையைச் செய்யச் சென்றீர்கள்.
ஆனால் வேலை முடிந்ததும் நீங்கள் எனக்கு வணக்கம் சொல்லாததை உணர்ந்தேன். ஆதலால் தொழிற்சாலையை ஒரு முறை சுற்றிப் பார்த்துச் செல்லலாம் என வந்தேன். நீங்கள் சொல்லும் காலை வணக்கத்தை தினமும் நான் எதிர்ப்பார்ப்பேன், ஏனென்றால் நீங்கள் என்னையும் ஒரு மனிதனாகக் கருதுகிறீர்கள் என்ற பேரின்பம்.
மாலை உங்கள் வணக்கத்தை கேட்காததால், ஏதேனும் நடந்திருக்குமோ எனத் தோன்றியது. அதனால் தான் தேடி வந்தேன். நீங்கள் ஆபத்தில் உள்ள போது உங்களை காப்பாற்ற முடிந்தது.
தத்துவம் :
நாம் எப்போதும் பணிவாக இருந்து, நம்மைச் சுற்றி உள்ளவரிடம் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இதனால் மற்றவர்களுக்கு நம்மீது ஒரு நல்ல மதிப்பு ஏற்படும். முக்கியமாக தினமும் நாம் சந்திக்கும் மனிதர்களை ஒரு புன்சிரிப்போடு வரவேற்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக