வேடன் ஒருவன் ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டு இருந்தான். காலையில் இருந்து ஒரு விலங்கு கூட அவன் கண்ணில் படாததால் அதிகக் கவலையுடனும், பசியுடனும் வருந்தினான். அப்போது எதிர்பார்க்காமல் அவன் எதிரில் ஒரு பெரிய முள்ளம் பன்றி வந்தது. அது பார்ப்பதற்கு ஒரு பெரிய கருப்பான மலையைப் போல இருந்தது.
அதைப் பார்த்ததும் வேடன் மனம், மகிழ்ந்தான். தனது வில்லில் அம்பை ஏற்றி முள்ளம் பன்றி மீது ஏவினான். அடுத்த நிமிடம் அம்பு முள்ளம் பன்றியின் உடலை துளைத்தது. வலியால் பன்றி அலறியது. ஆனால் தனக்கு துன்பம் செய்த வேடனை நோக்கி பாய்ந்து, அவனுடைய வயிற்றைக் கிழித்து அவனைக் கொன்றது. முள்ளம் பன்றியும் அவனருகில் விழுந்து இறந்தது.
அந்த சமயம், அந்த வழியாக ஒரு குள்ள நரி வந்தது. இறந்து கிடந்த வேடனையும், பன்றியையும் கண்டதும் வேகமாக ஓடி வந்தது. கொழுத்த வேடனின் கறியும், பன்றியின் கறியும் கிடைத்துள்ளது, என நினைத்து மகிழ்ந்தது. குறைந்தது மூன்று நாட்களுக்காவது உட்கார்ந்து சாப்பிடக் கூடிய அளவிற்கு ஏராளமான உணவு நமக்கு கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் இருந்தது.
அப்போது வேடனுக்கும், பன்றிக்கும் அருகில் கிடந்த வேடனின் வில்லின் நாண் அதன் கண்ணில்பட்டது. அந்தக் காலத்தில் வில்லின் நாண் என்பதனை மிருகங்களின் நரம்பினால் தான் கட்டுவார்கள். அப்படிப்பட்ட வில்லின் நாணை நரி கண்டதும், உடனே, மகிழ்ச்சியில், இந்த நாணை முதலில் சாப்பிடுவோம். இல்லாவிட்டால் வேறு ஏதாவது மிருகம் வந்து இதை தின்றுவிடும் என்று நினைத்து, அங்கிருந்த வேடனையும், பன்றியையும் விட்டுவிட்டு, வில்லின் நாணைத் தனது வாயில் கவ்வி இழுத்தது.
நாணை இழுத்த வேகத்தில்! மறுகணமே வில்லின் கூரிய மேல் நுனி நரியின் தொண்டையில் பாய்ந்தது. தொண்டையைக் கிழித்துவிட்டு வெளியே வந்தது. நரியின் பேராசை பெரு நஷ்டத்தில் முடிந்தது. முதலிலேயே வேடனையும், பன்றியையும் இழுத்து சென்று ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து தின்று இருந்தால் நரிக்கு இந்த கதி வந்திருக்காது.
அதிகமாக ஆசைப்பட்டதால் நரி துன்பத்தை அனுபவித்து இறந்துவிட்டது. இதற்கு தான், போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து, என்று நம் பெரியோர்கள் கூறினர்.
தத்துவம் :
எதிலும் அளவோடு ஆசை வைத்து வாழும் வாழ்வே துன்பமற்ற நல்ல வாழ்விற்கு வழி வகுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக