ஒரு ஊரில் ராஜா என்ற விறகு வெட்டி இருந்தார். அவருக்கு வேலை வேண்டும் என்பதற்காக, அந்த ஊரில் உள்ள நாட்டாமை வீட்டுக்கு வேலை கேட்டுச் சென்றார். அங்கு விறகு வெட்டியை பார்த்த நாட்டாமை இவர் நல்ல வாட்ட சாட்டமாக இருந்ததால் அவருக்கு வேலையும் கொடுத்தார்.
அடுத்த நாள் விறகு வெட்டி, நாட்டாமை வீட்டிற்கு வேலைக்கு வந்தார். வந்ததும் நாட்டாமை அவரிடம், அவருடைய தோட்டத்திற்கு சென்று அங்குள்ள காய்ந்த மரங்களை எல்லாம் வெட்டி எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்.
அவரும் கோடாரியுடன் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள காய்ந்த மரங்களை எல்லாம் வெட்ட ஆரம்பித்தார். மாலை பொழுது சாயும் போது அவர் வெட்டிய 10 மரங்களை கொண்டு வந்து போட்டார்.
அடுத்த நாளும் தோட்டத்திற்கு சென்று காய்ந்த மரங்களை வெட்ட ஆரம்பித்தார். ஆனால் அவரால் 8 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது. மூன்றாவது நாள் அவரால் 6 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது.
நாட்டாமையிடம் சென்று, ஐயா! எனக்கு உடலில் பலம் குறைந்துவிட்டது போல் உள்ளது. அதனால் தான் முன்பு போல் என்னால் அதிகமாக மரத்தை வெட்ட முடியவில்லை என்றார்.
அதைக்கேட்ட நாட்டாமை, விறகு வெட்டியிடம், கடைசியாக எப்போது உன் கோடாரியை தீட்டினாய்...! என்று கேட்டார்.
அதற்கு விறகு வெட்டி, ஐயா! இருக்கிற வேலையில் கோடாரியை தீட்ட மறந்து விட்டேன் என்று கூறினார். அதன் பிறகு தான் அவரால் ஏன் அதிகமான மரங்களை வெட்ட முடியவில்லை என்ற காரணம் புரிந்தது. பிறகு அவர் செய்த தவறை உணர்ந்து கோடாரியை நன்கு தீட்டி, அதன்பிறகு அவருடைய மரத்தை வெட்டும் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
இதுபோல தான் நாமும் வேலை வேலை என்று நம்மில் பலர் வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம். நம்மை நம்பி இருக்கின்ற தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடமறந்து விடுகிறோம்.
கடினமாக வேலை செய்து சம்பாதிப்பதில் தவறில்லை, அதற்காக நிம்மதியாக வாழ வேண்டிய வாழ்க்கையை வாழாமல் வேலைதான் முக்கியம் என்று வேலையை மட்டும் பார்த்து சம்பாதிப்பதில் மட்டும் நம் கவனத்தை செலுத்தக்கூடாது. நம்மை சுற்றியுள்ள குடும்பத்துடனும் நேரம் செலவழித்தால் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.
தத்துவம் :
ஒருவருடைய உழைப்பு என்றும் வீணாவதில்லை. அதற்காக வேலையைக் காரணம்காட்டி நம் குடும்பத்தையும், முக்கியமான உறவுகளையும் தவிர்த்தால், மகிழ்ச்சியான தருணத்தை உங்களால் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்படும். மேலும், சொந்தபந்தங்களை இழக்கவேண்டிய சூழலும் உருவாகும். அதனால் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக