தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் மிகவும் புகழ் பெற்ற அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் 'மயான சயனி" என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரைந்துள்ள இடம் கோவை மாவட்டத்தில், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தல வரலாறு :
ஆனைமலை பகுதியை நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங்கரையில் இருந்த தன் அரசு தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தான்.
ஒரு நாள், விதி வசத்தால், ஆழியார் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெண்கள் குழுவிலிருந்த ஒரு பெண், பக்கத்தில் இருந்த நன்னனின் மாந்தோட்டத்து மரத்திலிருந்த ஒரு மாங்கனி அந்த ஆற்றில் விழுந்ததைக் கண்டு, அதன் கட்டுப்பாடு குறித்து மறந்து போனவளாக, அதனை உண்டுவிட்டாள்.
இதை அறிந்த நன்னன் அப்பெண்ணை உடனடியாக கொலை செய்துவிடும்படி உத்தரவிட்டான். அப்பெண்ணின் தந்தை அதற்குப் பிராயச்சித்தமாக, எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தோரு களிற்றையும், அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் கூறியும் இரக்கமற்ற அந்த மன்னன், நன்னன் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டான்.
பிற்காலங்களில் அந்தப் பெண்ணின் மிக நெருங்கியத் தோழியான இன்னொரு பெண் அரசனின் மீது கடுங்கோபம் கொண்டு அவனை பழி தீர்ப்பதற்காக, போரின் போது கொன்று விட்டாள் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தப் பெண் ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்த மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளாள். மக்கள் அவள் உருவ நடமாட்டம் இருப்பதைக் கண்டு, வழிபட ஆரம்பித்து உள்ளனர். அந்தப் பெண்ணைத்தான் மயான சயனி என்று வழங்கி, காலப்போகில் அது மருவி, மாசாணி என்றாகி உள்ளது.
தலச் சிறப்பு :
5 அடி உயரமான பொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி அளிப்பதை கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமான காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.
நான்கு கைகளில், இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு, மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்டையோடு தாங்கியிருக்கும்.
இந்தக் கோவிலில் ஒரு பிரத்யோகமான பழக்கம், பக்தர்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதனை அன்னையின் பாதத்தில் சமர்பித்தால் அந்த குறை தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலின் மிக சுவாரசியமான விசயமே, அன்னையின் உடனடி நீதி வழங்கும் சக்தி அம்சமான நீதிக்கல்! தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்படும் மக்கள் அல்லது தங்களுடைய பொருட்கள் தொலைந்து போனாலோ, வியாபாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டாலோ அன்னையின் உதவி நாடி வந்து அங்கிருக்கும் நீதிக்கல்லின் தெய்வத்திடம் முறையிட்டு அங்குள்ள ஆட்டுரலில் மிளாகாய் போட்டு அரைப்பார்கள். அரைத்த அந்த மிளகாய் விழுதை நீதிக்கல்லின் மீது ஆழந்த பக்தியுடன் பூசுவார்கள். இதனால் தங்களுடைய குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் நம்புகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக