ததீசி முனிவர் தான் தவம் செய்யாத காலத்தில் தனது நெருங்கிய நண்பனான சுபனின் அரண்மனைக்கு விஜயம் செய்வார். பின்பு சுபனும், ததீசி முனிவரும் பலவிதமான செயல்கள் மற்றும் விஷயங்களை குறித்து காலம் மறந்து உரையாடுவார்கள்.
ததீசி முனிவரும், மன்னரும் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டிருந்த போது அவர்களின் விவாதம் இந்த உலகில் யார் பெரியவன்? அதாவது நாட்டை ஆளும் மன்னனா? அல்லது தவத்தில் வல்லவர்களான முனிவர்களா? என்பதே இவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாதமாகும்.
தன்னுடைய ராஜ்ஜியத்தில் உள்ள மக்களை தன்னுடைய சத்திரிய பலத்தால் காத்து, எவரையும் தன்னுடைய படைப்பலத்தால் ஆட்டி படைக்கும் வல்லமை உடையவர்களும், யாசகம் கேட்டு வருவோர்களுக்கும், அந்தணர்களுக்கும் தேவையான உதவியை அளித்து பாதுகாத்து வருபவர்கள் மன்னர்கள்.
ஒரு அரசன் தங்களது கடமையை செய்யாவிட்டால் முனிவர்கள் மற்றும் அந்தணர்கள் வாழ்க்கை என்பது நெறிப்பட இருக்காது. எனவே, முனிவர்கள் அனைவரும் அரசனை நம்பியே வாழ வேண்டும் என்றும், அவர்கள் அரசனை பூஜித்து அவர்களை யாசித்தே வாழ வேண்டும் என்றும், முனிவர் வாழும் பகுதியை உள்ளடக்கியப் பகுதியின் வேந்தனான சுபன், முனிவரிடம் கூறினான்.
வேந்தனான சுபனின் இவ்விதமான பதிலை சற்றும் எதிர்பாராத முனிவர், சுபன் தன்னுடைய பார்வையில் முனிவர்களின் நிலையை பற்றி எண்ணிய விதத்தால் மிகுந்த கோபம் கொண்டார். இறைவனுக்கு விருப்பமான மந்திரங்கள் மற்றும் தவத்தை என்னைப்போன்ற முனிவர்களால் மட்டுமே செய்ய இயலும் என்றும், அந்தணர்களால் வளர்க்கப்படும் யாகத்தால் கிடைக்கும் இறை அருளைக் கொண்டே நாடுகள் வளம் அடைகின்றன. அதனாலேயே அரசர்களும் செல்வ வளம் பெறுகின்றார்கள் என்றார் ததீசி முனிவர்.
மேலும், அனைத்திற்கும் காரணமான வேதங்களை பயின்று அதை எந்நாளும் ஓதி இறைவன் திருவடிகளை எண்ணியே இருக்கும் எங்கள் முன்னால் உன்னைப் போன்ற வேந்தர்களின் படை பலமும், செல்வ பலமும் நிலையானது அல்ல? என்னைப் போன்ற முனிவர்கள் உன்னை போன்ற மன்னர்களை அண்டி வாழ்வதா? ஞானத்தில் முதிர்ச்சி பெற்ற முனிவர்களை பூஜித்து அவர்களின் அருளைப் பெற்றால் தான் உன்னை போன்ற அரசர்கள் ராஜ்ஜிய பரிபாலம் செய்ய இயலும் என்று சினத்துடன் உரைத்து தனது கரத்தினால் அரசனான சுபனின் தலையில் ஓங்கி அடித்தார்.
தன்னிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஒரு ஏழை முனிவர் இந்த பார் புகழ் போற்றும் வல்லமை கொண்ட வேந்தனை அடிப்பதா? என்று சினம் கொண்ட சுபன், தன்னுடைய வாழ்வை மற்றவர்களிடம் யாசகம் பெற்று நடத்தி வரும் உனக்கு இவ்வளவு அகந்தையா? இந்த நொடியில் உன்னை என்ன செய்கின்றேன் பார்.. என்று கூறி தனது வச்சிராயுதத்தை கொண்டு முனிவரை தாக்கினார்.
சுபனின் இந்தவித தாக்குதலை சற்றும் எதிர்பாராத ததீசி முனிவர் வச்சிராயுதத்தின் ஒளிப்பிழம்பானது முனிவரின் மார்பைத் தாக்கியதும் அதனால் ஏற்பட்ட வலியினை தாங்க இயலாமல் அவ்விடத்திலேயே இரத்தம் உமிழ்ந்து சுய நினைவின்றி மயக்கம் அடைந்தார். அதைக்கண்டதும் சிரமேறிய சினமானது தணிந்து அவ்விடத்தை விட்டு சென்றார் சுபன்.
சிறிதுநேரம் கழித்து சுயநினைவிற்கு வந்த ததீசி முனிவர் வச்சிராயுதத்தால் ஏற்பட்ட தாக்குதலால் பலத்த காயம் அடைந்திருந்தாலும், மன உறுதியுடன் எழுந்து மிகுந்த சினத்துடன் அரண்மனையை விட்டு வெளியேறி தவம் புரிவதற்காக வனத்திற்கு விரைந்து சென்றார்.
இந்த மதியிழந்த வேந்தனுக்கு சரியான பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என்று வைராக்கியம் கொண்டவராக வனத்தை அடைந்த ததீசி முனிவர், உடலில் இருந்த காயங்களோடு அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் உதவியை நாடி அவரை நோக்கி தவம் இருந்தார்.
ததீசி முனிவர் அசுர குருவான சுக்கிராச்சாரியாரை எண்ணி தவமிருப்பதை அறிந்த தேவர்கள் இச்செயலை அவர்களின் வேந்தனான இந்திரனிடம் தெரிவித்தனர். இந்திரனோ ததீசி முனிவர் மீது மிகுந்த கோபம் கொண்டார். தனக்கான காலம் வரும்போது இதற்கான பலன்களை அனுபவிப்பார்கள் என்று கூறினார்.
தன்னை எண்ணி முனிவர் தவம் புரிவதை அறிந்த சுக்கிராச்சாரியார் முனிவர் தவம் புரியும் இடத்தில் தோன்றினார். பின், தன்னை எண்ணி தவம் செய்ததற்கான காரணத்தை வினவினார். ததீசி முனிவரோ, சுபனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், அதனால் தான் அடைந்த மன வேதனைகளையும் விவரித்து, அந்த மூடனுக்கு சரியான பாடத்தை புகட்டியே ஆக வேண்டும். அதனால் தாங்கள் தேவேந்திரனின் ஆயுதமான வச்சிராயுதத்தால் தாக்கினாலும் எனக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படா வண்ணம் இருக்கக்கூடிய வலிமையை அளிக்க வேண்டினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக