அந்தகாசூரனை வதம் புரிவதற்காக சிவபெருமான் எடுத்த வைரவ மூர்த்தி அவதாரமானது அந்தக சூரசம்ஹார மூர்த்தி என்று அழைக்கப்படுகின்றது. அந்தகாசூரனின் குருதியை உண்ண உருவாக்கப்பட்ட பூதமானது எம்பெருமானிடம் தான் கொண்ட பசியை போக்கும்படியும், தான் விரும்பியதை உண்ணும் வரத்தினையும் வேண்டியது. பிறை சூடிய கைலாயநாதரான சிவபெருமான் பூதம் வேண்டிய வரத்தினை அளித்தார்.
யுத்தத்தின்போது கனியாக மாறிய சுக்கிராச்சாரியாரை விழுங்கி தன்னுடைய கண்டத்தில் வைத்திருந்த சுக்கிராச்சாரியாரை வெளியே கொண்டு வந்தார் சிவபெருமான். பின்பு, தாம் செய்த தவறை எண்ணி எம்பெருமானிடம் மன்னிப்பு வேண்டி நின்றார் சுக்கிராச்சாரியார்.
சுக்கிராச்சாரியாரிடம் சீடன் கூறுவதை தீர விசாரித்து சரியான வழிகாட்டுதலாக இருப்பதே சிறந்த குருவின் பணியாகும் என்று கூறி சுக்கிராச்சாரியாரை மன்னித்தருளினார். சுக்கிராச்சாரியாரும் எம்பெருமானிடம் இதுபோன்ற தவறுகள் இனி ஏற்படாத வண்ணம் எச்சரிக்கையுடன் இருப்பதாக கூறி சிவபெருமானை வணங்கி கைலாயத்தில் இருந்து அசுரலோகத்தை அடைந்தார்.
பூதமும் எம்பெருமானிடம் பெற்ற வரத்தால் தன்னுடைய பசியை போக்குவதற்காக கண்களில் தென்படுபவைகள் அனைத்தையும் உண்டது. இருப்பினும் அதன் பசியானது குறையவில்லை. இதே நிலை தொடர்ந்தால் பூதமானது தனது பசியை போக்குவதாக எண்ணி மூவுலகையும் உண்ண வேண்டியதாய் இருக்கும் என எண்ணினார்கள் தேவர்கள்.
பூதத்தின் இந்நிலை தொடரக்கூடாது என எண்ணிய தேவர்கள் பூதத்தை பூவுலகில் கிடத்தி அதன் மீது அனைவரும் அமர்ந்து அந்த பூதத்தை எழுந்திரிக்க முடியாமல் தடுத்தனர். இதனால் மென்மேலும் அதன் பசியானது அதிகரித்தது. இந்த சூழலில் இருந்து தன்னை காக்க வேண்டும் என பிரம்ம தேவரிடம் வேண்டி நின்றது. மேலும், தனக்கும் தேவர்களில் ஒருவராக இருக்கும் போது கிடைக்கும் மரியாதையும் இந்த பூவுலகிலும் வேண்டும் என்று வேண்டியது.
பிரம்ம தேவரும் பூதத்தின் வேண்டுதல்களை ஏற்று உன்னுடைய பசியைப் போக்க மானிடர்கள் இல்லங்கள் அமைக்கும்போது வளர்க்கும் ஹோமம் மற்றும் பூஜைகளில் அளிக்கும் பொருட்களை உண்டு உனது பசியை போக்கி கொள்வாயாக என்றும், மேலும் பூவுலகில் உள்ள மானிடர்கள் தங்களுடைய வாழ்விடங்களை புதிதாக அமைக்கும்போது உன்னை வழிபட்டு பின் தொடங்குவார்கள் என்றும் இன்று முதல் நீ 'வாஸ்து புருஷன்" என்று அழைக்கப்படுவாய் என்றும் கூறி அவ்விடம் விட்டு மறைந்தார்.
வேத காலங்களில் வாழ்ந்து வந்த முனிவர்களில் ததீசி முனிவரும் ஒருவர். இவர் அதர்வண வேதத்தை இயற்றிய அதர்வண முனிவருக்கும், சிட்டி தேவிக்கும் பிறந்த மகனாவார். இவர் நைமிசாரண்யத்தில் தனது துணைவியான சுவர்ச்சா தேவியுடன் இல்லறம் நடத்தி பிப்பலாத என்ற புத்திரனையும் ஈன்றார்.
ததீசி முனிவர் பிறந்தது முதலே சிவபெருமான் மீது பற்றும், மிகுந்த பக்தியையும் கொண்டிருந்தார். அவர் இல்லறத்தில் இருந்தாலும் காலம் தவறாது சிவபெருமானை பூஜித்து வந்தார்.
சத்தியலோகத்தில் நித்திரையில் இருந்த பிரம்ம தேவர் தும்மலில் இருந்து சுபன் என்னும் அரசன் தோன்றினான். சுபன் தான் தோன்றிய காரணம் ஏதும் அறியாமல் நிற்க அவ்வேளையில் நித்திரையில் இருந்து விழித்த பிரம்ம தேவர் அங்கிருந்த சுபனை கண்டார்.
நிகழ்ந்தவற்றையெல்லாம் படைப்பாளியான பிரம்ம தேவர் உணர்ந்து கொண்டார். பின் சுபன் கொண்ட ஐயத்தை நீக்கி தேவர்களின் வேந்தனான இந்திரனை நோக்கி தவம் புரிய வழிகாட்டினார். மேலும், தன்னை படைத்தவரின் வழிகாட்டுதலால் பூவுலகை அடைந்த சுபன், இந்திர தேவனை நோக்கி பல காலங்கள் தவமிருந்தார்.
சுபனின் தவத்தால் மகிழ்ந்த தேவர்களின் வேந்தனான தேவேந்திரன் அங்கு தோன்றினார். தேவேந்திரனான இந்திரன் சுபனை நோக்கி உன் தவத்தால் மிகவும் மகிழ்ந்தோம் சுபனே!!... வேண்டும் வரத்தினை கேட்பாயாக என்று கூறினார். இந்திர தேவனைக் கண்டதும் பணிந்து வணங்கினான் சுபன். பின்பு சுபன், இந்திர தேவனை நோக்கி தானும் இந்த உலகில் நன்னெறி முறையில் ஆட்சி செய்யவும், எவராலும் வெல்ல இயலாத ஆயுதமான வச்சிராயுதத்தை அளிக்க வேண்டும் என்றும் வேண்டினார்.
இந்திரனும் தனது ஆயுதமான வச்சிராயுதத்தை சுபனுக்கு வழங்கினார். அதைப்பெற்ற சுபன் தர்ம நெறிப்படி ஆட்சி புரிந்தும், வச்சிராயுதத்தை கொண்டு மக்களை காக்கும் நல்ல வேந்தனாக திகழ்ந்து வந்தார். இதனால் சுபனின் பெருமைகளும், கீர்த்திகளும் உலகெங்கும் பரவின.
சுபனின் ஆட்சி பகுதிக்குள் நைமிசாரண்ய பகுதியும் அடங்கும். தனது ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட வனத்தில் மிருகங்களை வேட்டையாடவும், தனது எல்லைக்கு உட்பட்ட மக்களின் வாழ்வு நிலையை அறியவும் ராஜ்ஜிய யாத்திரை மேற்கொண்ட போது வனத்தில் தவம் புரிந்து வாழ்ந்து வந்த ததீசி முனிவரை பற்றி அறிந்தார்.
ராஜ்ஜிய யாத்திரை முடித்து வனத்தில் வேட்டையாடும்போது ததீசி முனிவரை கண்டார். பின்பு, அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி அவரிடம் உரையாட தொடங்கினார். இவர்களின் உரையாடல் ஏதோ பூர்வ ஜென்ம நட்பை போன்று மிகவும் ஆழமாகவும், எழில் மிக்கதாகவும் இருந்தது. இந்த உரையாடல் இவர்களை மிகவும் நெருங்கிய நண்பர்களாக்கின.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக