சுக்கிராச்சாரியாரின் இந்த தந்திரத்தால் தேவர்களின் எண்ணிக்கையும் அவர்களின் வலிமையும் குறைந்து கொண்டே இருந்தது. இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என எண்ணிய தேவேந்திரன் தனது மாய வித்தைகளை பயன்படுத்த தொடங்கினார். அதாவது, அந்தகாசூரனை அவ்விடம் விட்டு அகற்றி சுக்கிராச்சாரியாரை மது அருந்தச் செய்வதே அவர்களின் எண்ணமாகும்.
அந்தகாசூரனின் சேனாதிபதியான விசுஸன் ஒரு பெரிய சேனையுடன் சென்று தேவியுடன் இருந்த தேவர்களையும், அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த சக்திகளையும் தாக்க தொடங்கினார். அவர்களின் தாக்குதல் எல்லை மீறவே விசுஸன் தனது சுய ரூபமான ஒரு பெரிய பாம்பாக அனைவரையும் தாக்க தொடங்கி அவர்களை விழுங்கவும் செய்தான்.
தேவியின் ஆபத்தை உணர்ந்த முனிவரான சிவபெருமான் தன்னிடம் கோப அனலுடன் கரங்களில் இருந்த அம்பினால் விசுஸனை கொன்றார். தேவேந்திரனுடன் வந்த சில தேவர்கள் அவர்களை தாக்க முற்படுவது போல் அந்தகாசூரனின் கவனத்தை திருப்பி அவ்விடம் விட்டு அகன்றார். மற்ற தேவர்கள் பெண் ரூபம் கொண்டு மது கிண்ணத்தை சுக்கிராச்சாரியாரிடம் அளித்தனர். மாதுகள் ரூபம் கொண்ட தேவர்கள் கொடுத்த மதுவை பருகியதும் சுக்கிராச்சாரியார் மயக்க முற்றார்.
மயக்கமடைந்த சுக்கிராச்சாரியாரை தனது திவ்ய பலத்தால் கனியாக மாற்றினார் தேவேந்திரன். அந்தகாசூரனை தாக்கி அவன் கவர்ந்ததை திசை திருப்பிய தேவர்கள் அவ்விடம் விட்டு அகன்றனர். நிகழ்வது யாது? என அறிவதற்குள் இது தேவர்களின் சதியே என்பதனை உணர்ந்த அந்தகாசூரன் தனது குருவை காணச் சென்றான். ஆனால் குரு அவ்விடம் இல்லாததை அறிந்து இனி என்ன செய்வேன்? என்று எண்ணத் தொடங்கினான்.
மயக்க நிலையில் இருந்த சுக்கிராச்சாரியாரை இந்த நிலையில் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்த தேவேந்திரன் கனியை முனிவர் உருவத்தில் இருந்த சிவபெருமான் அக்கனியை கொடுக்க, சர்வமும் உணர்ந்த சர்வேஸ்வரான அவரும் அக்கனியை விழுங்கினார்.
சுக்கிரச்சாரியார் இல்லாததால் அசுர சேனையும் பாதிக்கப்பட்டன. தனது சேனாதிபதியும் மாய்ந்துவிட்டான் என்பதை அறிந்த அந்தகாசூரன் போர்க்களத்தில் மதம் கொண்ட களிறு போல வெகுண்டு சத்தம் கொண்டான். பிரபஞ்சமே சிறு காலம் ஸ்தம்பித்தன. பின்பு தன்னுடைய மாயை மூலம் முனிவரின் உருவம் பூண்டு தேவர்கள் மத்தியில் தாக்க தொடங்கினான்.
தேவர்கள் என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்து நின்றனர். அந்தகாசூரனோ தனது மாயை சக்தியால் பலவிதமான உருவம் கொண்டு தேவர்களை தாக்கினான். இனியும் அந்தகாசூரன் திருந்தி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவனது முடிவை அவனாக தேடிக் கொண்டான் என்பதை பிரம்ம தேவர் அறிந்தார். அதாவது, அவன் பெற்ற வரத்தின் மூலமே அதாவது தாயாக இருக்கும் பெண்ணின் மீது மோகம் கொண்டும், காரணம் இல்லாமல் தன் மரணம் நிகழக்கூடாது என்ற வரமே அவனை அழிக்க போவதை உணர்ந்தார் பிரம்ம தேவர். (தாயான பார்வதி தேவி (முனிவரின் மனைவி) மீது மோகம் கொண்டு சர்வேஸ்வரனால் (முனிவரால்) தன் மனைவியை காக்கும் பொருட்டு என்னும் காரணத்தின் அடிப்படையில் அழிவை தேடிக் கொண்டான் அந்தகாசூரன்).
அந்தகாசூரனின் செயல்கள் யாவும் எல்லை மீறவே தன்னுடைய அம்சமான அகிலமே பயம் கொள்ளும் வடிவமான பைரவ வடிவத்தைத் தோற்றுவித்தார். வேகமும், நிதானமும் இல்லாத பைரவர் முன்னிலையில் அசுர சேனைகள் யாவும் தோற்க தொடங்கின.
சுக்கிராச்சாரியாரின் துணை இல்லாததால் பெரும் வாரியான அசுர வீரர்கள் மாண்டனர். அந்தகாசூரன் விரைவில் சிவபெருமானின் கோப வடிவமான பைரவர் முன்னிலையில் தனித்து போரிட வேண்டிய சூழல் உண்டானது. அந்தகாசூரனின் அனைத்து முயற்சிகளும் பைரவ ரூபரான சிவபெருமான் முன்னிலையில் செயல் இழந்தன.
அந்தகாசூரன் பைரவருக்கு எதிராக செய்த அனைத்து மாய வித்தைகளையும் தகர்த்து எறிந்தார். இனியும் நிதானம் காக்காத பைரவர் தனது கரங்களில் உள்ள சூலாயுதத்தால் அந்தகாசூரனை தாக்கி, அவனின் உடலில் குத்தி, தூக்கி ஆயிரம் வருடங்களாக உலகை வலம் வந்தார்.
அந்தகாசூரனின் உடலில் இருந்து வெளிப்பட்ட இரத்தத்தில் இருந்து அசுரர்கள் தோன்றக்கூடும் என்பதால் சூலாயுதத்தில் இருந்து வழிந்த அந்தகாசூரனின் இரத்தத்தை பருக ஒரு அகோர பசி கொண்ட பூதம் ஒன்றை தோற்றுவித்தார். அந்த பூதமானது அந்தகாசூரனின் உடலில் இருந்து வெளிப்பட்ட அனைத்து இரத்தத்தையும் உண்டது.
சூலாயுதத்தால் குத்தப்பட்ட அந்தகாசூரனின் உடலில் இருந்து இரத்தம் முழுவதும் வெளியேறியும் அவன் மரணமடையாமல் இருந்தான். அந்தகாசூரன் தான் செய்த தவறுகளையும், தான் பெற்ற வரத்தையும் தவறாக உபயோகித்ததையும் எண்ணி சிவபெருமானின் சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான். சிவநாமத்தால் காலணும் அவனை நெருங்கவில்லை.
அந்தகாசூரனின் உடலில் இருந்து குருதி மட்டும் வெளியேறாமல் அவன் கொண்ட ஆணவமும் அழிந்தது. எளியோரை வதைத்து அதன் மூலம் இன்பம் கண்ட அந்தகாசூரன் அந்த வலியை உணர்ந்து சிவபெருமானிடம் முக்தி வேண்டி சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான்.
கருணைக்கடலான எம்பெருமானான சிவபெருமான் அந்தகாசூரனின் கள்ளம் கபடமற்ற உண்மையான அன்பு மற்றும் பக்தியால் மனம் மகிழ்ந்தார். இறுதியாக பைரவர் அந்தகாசூரனின் உடலோடு கயிலாயத்தை அடைந்தார். கயிலாயம் வரையிலும் அந்தகாசூரனின் குறுதியை உண்டே பூதமும் பின் தொடர்ந்தது.
கயிலாய மலையில் சிவபெருமானை கண்ட அந்தகாசூரன் எம்பெருமானை கண்டதும் கண்ணீர் கொண்டு பரம்பொருளை வேண்டினார். பரம்பொருளான சிவபொருமானும் அந்தகாசூரனின் பக்தியால் மகிழ்ந்து வேண்டும் வரத்தினை கேட்பாயாக என்று கூறினார்.
அந்தகாசூரன் பரம்பொருளான சிவபெருமானிடம் தனக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று வேண்டி நின்றான். பரம்பொருளான சிவபெருமான் அந்தகாசூரன் வேண்டிய முக்தியை அளித்து மட்டுமல்லாமல் 'ப்ரிங்கிரீடன்" என்ற நாமத்தில் தன்னுடைய சிவகணங்களில் ஒருவராகவும் கயிலாய மலையில் இருக்குமாறு அருளினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக