பீமனிடம், மாளிகையை கட்டிய சிற்பி ஒருவன் வந்து, மன்னர் திருதிராஷ்டிரன் கட்டளையினால் இம்மாளிகை தங்கள் அனைவரையும் கொல்வதற்காக அரக்காலும், மெழுகாலும் செய்யப்பட்டிருப்பதை கூறினான். விதுரரின் உதவியோடு நான் தாங்கள் செல்ல சுரங்க பாதை ஒன்றை கட்டியுள்ளேன். அச்சுரங்கபாதை தூணின் பின் பகுதியில் அமைந்து உள்ளது. அத்தூணை தங்களால் மட்டுமே பெயர்க்க முடியும். அதனால் தான் தங்களிடம் வந்து இச்செய்தியை கூறினேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான். இதைக்கேட்டு பீமன் மிகவும் கோபங்கொண்டான். இச்செய்தியை மற்ற சகோதரர்களிடம் தெரிவித்தான். இவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் என பாண்டவர்கள் நினைத்தனர். புரோசனன் தன் திட்டத்தை செயல்படுத்தவதற்கு முன், பாண்டவர்கள் செயல்படுத்தினர்.
புரோசனன், தன் அறைக்கு சென்று உறங்கிய பிறகு பீமன், தன் சகோதரர்கள் மற்றும் தாய் குந்தியை அழைத்துக் கொண்டு சுரங்க பாதை இருக்கும் இடத்திற்கு வந்தான். சுரங்க பாதையை மறைத்திருக்கும் தூணை பெயர்த்து எடுத்து சுரங்க பாதை வழியாக தப்பிக்க வைத்தான். அவர்கள் சென்ற பிறகு பீமன், அம்மாளிகைக்கு தீ வைத்துவிட்டு சுரங்க பாதை வழியாக தப்பிச் சென்றான். இவர்கள் சென்ற பிறகு அரக்கு மாளிகை எரிந்து சாம்பலானது. இச்செய்தியை அறிந்து அஸ்தினாபுரத்தில் இருந்து அனைவரும் ஓடி வந்தனர். மாளிகை எரிந்து இருப்பதை பார்த்து நிச்சயம் இதில் பாண்டவர்களும் இறந்து இருப்பார்கள் என நினைத்தனர்.
பாண்டவர்கள் இறந்து விட்டனர் என்னும் செய்தியை அறிந்து மக்கள் கதறி அழுதனர். மற்ற நாட்டு மன்னர்களும் வீரமிக்கவர்களை இழந்துவிட்டோமே என பெரிதும் வருந்தினர். ஆனால் துரியோதனன் மட்டும் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தான். தன் எதிரிகள் அழிந்துவிட்டதாக நினைத்து உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தது. ஆனால் அனைவர் மத்தியிலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், பாண்டவர்களை நினைத்து வருந்துவது போல் பாசாங்கு செய்தான். திருதிராஷ்டிரனும் பாண்டவர்களை நினைத்து வருந்துவது போல் பாசாங்கு செய்தான். பீஷ்மர், பாண்டவர்கள் இறந்துவிட்டார்கள் என நினைத்து அளவற்ற துன்பம் அடைந்தார். அதன் பிறகு, பாண்டவர்களுக்கு ஈமச்சடங்களை செய்துமுடித்தனர்.
பாண்டவர்கள் தப்பிச் சென்ற சுரங்க பாதை காட்டில் சென்று முடிந்தது. பாண்டவர்கள் அனைவரும் காட்டில் அலைந்து திரிந்தனர். குந்தி மிகவும் சோர்வடைந்து காணப்பட்டாள். பீமன், அவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் தங்க வைத்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காகச் சென்றான். காட்டில் மனிதர்களின் வாசம் வருவதை உணர்ந்த அரக்கன் இடும்பன் தன் தங்கை இடும்பியை அழைத்து, அந்த மனிதர்களை எனக்கு உணவாக கொண்டு வா எனக் கூறி அனுப்பி வைத்தான். அரக்கியான இடும்பி, பெரும் சத்தத்துடன் பீமன் முன் நின்றாள். பீமனை கண்ட இடும்பிக்கு அவன் மேல் காதல் உண்டாயிற்று. பீமனை பார்த்து, நீ யார்? எதற்காக இந்த வனத்திற்கு வந்தாய்? எனக் கேட்டாள். பீமன் நடந்தவற்றை எல்லாம் கூறினான்.
அதன் பிறகு பீமன் இடும்பியை பார்த்து, நீ யார்? எதற்காக இங்கு வந்தாய்? எனக் கேட்டான். இடும்பி, என் பெயர் இடும்பி, என் சகோதரர் பெயர் இடும்பன். மனிதர் வாசனைகளை உணர்ந்த என் சகோதரர் உங்களை உணவாக கொண்டு வரும்படி கூறினான். ஆனால் உன்னை கண்டவுடன் எனக்கு உன் மேல் காதல் உண்டாயிற்று. நீ என்னை திருமணம் செய்துக்கொள்? நீங்கள் அனைவரும் இங்கிருந்து தப்பிக்க உதவி செய்கிறேன் என்றாள். தன் தங்கை வர தாமதமானதால் இடும்பன் அந்த இடத்திற்கு வந்தான். அங்கு தன் தங்கை காதல் வசனம் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு அளவற்ற கோபம் கொண்டான். தன் தங்கையை கோபத்துடன் பார்த்து, உன்னை இந்த மனிதர்களை பிடித்து வா என அனுப்பி வைத்தாள். நீ இவனுடன் காதல் வசனம் பேசிக் கொண்டு இருக்கிறாயா?
பிறகு இடும்பன் பீமனை பார்த்து, அற்ப மனிதனே! நான் இப்பொழுதே உன்னை உணவாக உட்கொள்கிறேன் என பீமனை நெருக்கினான். இருவருக்கும் சண்டை உண்டானது. இவர்களின் சண்டை நீண்ட நேரம் தொடர்ந்தது. பீமனின் தாக்குதலை தாங்க முடியாமல் இடும்பன் அந்த இடத்திலேயே மாண்டு விழுந்தான். பீமனின் ஆற்றலைக் கண்டு இடும்பிக்கு பீமன் மேல் இருந்த காதல் இன்னும் அதிகமானது. பீமனிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி மிகவும் வற்புறுத்தினாள். பீமன், இடும்பியிடம், எனது சகோதர்கள் திருமணம் செய்யாமல் என்னால் உன்னை எப்படி திருமணம் செய்ய முடியும். அது மட்டுமின்றி அரக்கியாகிய உன்னை நான் எவ்வாறு திருமணம் செய்துக் கொள்வது. அவ்வாறு உன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் என் தாயின் அனுமதி வேண்டும் எனக் கூறினான்.
பீமன் இவ்வாறு கூறிய போதும் இடும்பி மிகவும் வற்புறுத்தினாள். பிறகு பீமன் அவளை தன் தாயிடன் அழைத்துச் சென்று நடந்த விவரத்தைக் கூறினான். இடும்பி, குந்தியிடம், பீமன் மேல் தனக்கு ஏற்பட்ட காதலை கூறினாள். இடும்பியின் உணர்வை மதித்து குந்தியும் அவனது சகோதரர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு பீமனுக்கும், இடும்பிக்கு திருமணம் நடந்தது. அதன் பின் பாண்டவர்கள் சில காலம் வனத்திலேயே தங்கினர். இடும்பியும் ஒரு மகனை பெற்று எடுத்தாள். அவன் பெயர் கடோத்கஜன். இவன் தன் தந்தை பீமனை காட்டிலும் வலிமையானவன், வீரத்திலும் சிறந்தவன்.
பீமன் இடும்பியிடம் நாங்கள் வனத்தில் இருந்து செல்ல வேண்டியுள்ளதால் உங்களை விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது என்றான். இடும்பியும் அதை புரிந்துக் கொண்டு சம்மதம் தெரிவித்தாள். அப்பொழுது பீமனின் மகன், தந்தையே! நீங்கள் எப்பொழுது என்னை நினைத்தாலும் நான் உங்கள் முன் வந்து நிற்பேன். உங்களுக்கு பணிவிடை செய்வதற்காக காத்துக் கொண்டிருப்பேன் என்றான். அதன் பிறகு இடும்பியும், கடோத்கஜனும் பீமனிடம் இருந்து விடைப்பெற்றுச் சென்றனர்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக