சில வருடங்களுக்கு முன்பு, 'உணர்ச்சிகள்" எல்லாம் ஒன்றாக விடுமுறையைக் கழிக்க ஒரு தீவுக்குச் சுற்றுலா பயணம் சென்றன. எல்லோரும் ஆனந்தமாகக் கொண்டாடினார்கள். ஒரு நாள் திடீரென்று புயல் எச்சரிக்கை வந்ததனால், தீவை விட்டு எல்லோரையும் கிளம்பச் சொன்னார்கள்.
இதனால் பயமடைந்த உணர்ச்சிகள், படகுகளைத் தேடி சென்றன. எல்லா உணர்ச்சிகளும் அவசரப்பட்டனர். ஆனால், 'அன்பு" மட்டும் நிதானமாக தன் வேலைகளைச் செய்து விட்டுப் புறப்பட நினைத்தது.
'அன்பு" செல்ல முற்பட்டபோது, அங்கு ஒரு படகும் இருக்கவில்லை. இருந்தாலும் 'அன்பு" நம்பிக்கையுடன் சுற்றுப்புறச் சூழ்நிலையைக் கவனித்தது. 'செழிப்பு" ஒரு அழகான படகில் அமர்ந்திருந்தது. தன்னைப் படகில் ஏற்றிக் கொள்ளும்படி 'அன்பு" கேட்டுக் கொண்டது.
அதற்கு செழிப்பு தன் படகு முழுவதும் தங்கமும், விலையுயர்ந்த பொருட்களும் இருந்ததாகச் சொல்லி இடம் கொடுக்க மறுத்தது. அடுத்ததாக 'தற்பெருமையை" தன் படகில் ஏற்றிக் கொள்ளுமாறு அன்பு கெஞ்சியது.
அதற்கு, 'உன் பாதங்கள் சேறும் சகதியுமாக இருப்பதால், என் படகு அழுக்காகிவிடும்; மேலும், இடமும் இல்லை" என பதில் கூறியது. பிறகு 'சோகத்தை" கண்டு அன்பு வேண்டியதற்கு, தான் ஏற்கனவே துக்கமாக இருப்பதால், இடம் கொடுக்க மறுத்தது.
'சந்தோஷமும்" ஏதோ காரணம் கூறி இடம் தரவில்லை. திடீரென்று எங்கிருந்தோ ஒரு குரல் அன்பைத் தன்னோடு வருமாறு அழைத்தது. தன்னைக் காப்பாற்ற வந்தவர் யார் என அன்பிற்குத் தெரியவில்லை. இருந்தாலும் படகில் ஏறிச் சென்றது.
எல்லோரும் நல்ல விதமாகக் கரை சேர்ந்ததும், அன்பு கீழே இறங்கியதும் எதிர்பாராத விதமாக 'அறிவின்" மீது மோதியது. அன்பு அறிவிடம், எல்லோரும் மறுத்தபோது, தன்னைக் காப்பாற்றியது யார் என விசாரித்தது. அதற்கு அறிவு, 'காலம் மட்டுமே உன் மகிமையை அறியும். உன்னால் மட்டும் தான் அமைதியையும், ஆனந்தத்தையும் வாரி வழங்க முடியும்" என புன்சிரிப்புடன் கூறியது.
தத்துவம் :
நாம் செழிப்பாக இருக்கும் பொழுது, அன்பை மதிப்பதில்லை. அதேபோல் அகம்பாவத்திலும் அன்பை உணர்வதில்லை. சந்தோஷமாக இருக்கும் பொழுதும் சரி, துக்கத்தில் வேதனைப்படும் பொழுதும் சரி அன்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதில்லை. காலப் போக்கில் தான் அன்பின் ஆழ்ந்த உணர்வைத் தெரிந்து கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக