அரசம்பட்டி என்னும் ஊரில் மணி என்ற
வியாபாரி ஒருவர் இருந்தார். அவருக்கு நந்தினி என்ற மனைவியும், இரண்டு
பெண்குழந்தைகளும் இருந்தனர். மூத்த மகள் ரேஷ்மா 5 ஆம் வகுப்பும், இரண்டாவது மகள்
கனிஷ்மா 3 ஆம் வகுப்பும் படித்து கொண்டிருந்தார்கள். மணி உழைத்து பொருள் ஈட்ட
வேண்டும் என்ற நற்பண்பு கொண்டவர். இருப்பினும் மிகவும் கஞ்சன். தன் குழந்தைகளுக்கு
கேட்டதை கூட வாங்கித் தராமல் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்றே இருப்பார்.
அதனால், தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம்
எடுத்துச் சென்று ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தார். பணத்தை மரத்தடியில்
புதைத்து வைத்துவிட்டு பணம் பத்திரமாக இருக்கிறதா என்று தினமும் அந்த இடத்திற்கு
சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவார்.
தினமும் மரத்தடியில் இருக்கும் பணத்தை எடுத்து
பார்ப்பாரே தவிர, அதிலிருந்து ஒரு ரூபாயைக் கூட எடுத்துச் செலவு செய்யக் கூடாது
என்று மனதிற்குள் நினைத்தபடி வீட்டிற்கு திரும்பி விடுவார்.
இப்படியே பல மாதங்கள் கடந்தன. இவர் அடிக்கடி
அங்கு சென்று வருவதைக் கவனித்துக் கொண்டிருந்த திருடன் ஒரு நாள் அவரை
பின்தொடர்ந்து சென்று, அவர் பணத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தைத் தெரிந்து
கொண்டான்.
அந்த வியாபாரி பணத்தை எடுத்து பார்த்து விட்டு
சென்ற பிறகு, அந்தத் திருடன் அவர் புதைத்து வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்
கொண்டு சென்று விட்டான். மறுநாள் வியாபாரி அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது,
பணம் காணாமல் போயிருந்ததை நினைத்து அழுது புலம்பினார்.
வியாபாரி புலம்புவதைப் பார்த்த பக்கத்து
வீட்டுக்காரர், நண்பா! இதற்காக வருந்தாதே, நீ புதைத்து வைத்த பணத்தை நீ எடுத்துச்
செலவு செய்யப் போவது இல்லை. அதனால் பணம் அங்கே இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும்
சரி, நீ பணம் வைத்திருந்த இடத்திலேயே அந்தப் பணம் இருப்பதாகவே நினைத்துக் கொள்.
வீணாக வருத்தப்படாதே என்றார்.
தத்துவம் :
ஒரு
பொருள் இருந்தும், அதைப் பயன்படுத்தாவிட்டால், அது இருந்தாலும் ஒன்றுதான்,
இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக