நீங்களொரு மோட்டோரோலா, சாம்சங், சோனி அல்லது எல்ஜி நிறுவனத்தின் போன்களை வைத்திருந்தால் நீங்கள் இதை நிச்சயம் படிக்க வேண்டும்; ஒரு ஆண்ட்ராய்டு பயனர் என்றால், படிப்பது நல்லது!
விட்ச் (Which?) எனும் ஒரு ஆராய்ச்சி
நிறுவனத்தின் படி, ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு
போன்கள் ஹேக்
செய்யப்படும் அபாயத்தில் உள்ளன.
விட்ச்? ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, 1 பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள் இனிமேல் எந்தவிதமான பாதுகாப்பு அப்டேட்களையும் (Security update) பெறாது என்பதால், அவைகள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளன. இது தீம்பொருள் தாக்குதல்கள் (மால்வேர்) மற்றும் தகவல் திருட்டு போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கும்.
உலகெங்கிலும் உள்ள 40% ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதுகாப்பு அப்டேட்களை பெறவில்லை என்பதையும் இந்த ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது, மோட்டோரோலா, சாம்சங், சோனி மற்றும் எல்ஜி போன்ற பிராண்டுகளிலிருந்து ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்துள்ளனர், மேலும் அவற்றை எளிதில் ஹேக் செய்ய முடியும் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இருந்து ஹேக்கர்களால் குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட தகவல்களை எளிதில் திருடலாம் மற்றும் இந்த ஸ்மார்ட்போன்களின் மீதான முழுமையான கட்டுப்பாட்டையும் பெறலாம்.
பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “சமீபத்தில் பாதுகாப்பு ஆதரவுதனை இழந்த போன்களுக்கு உடனடியாக எந்த சிக்கல்களும் இருக்காது, ஆனால் நாட்கள் செல்லச்செல்ல - பாதுகாப்பு அப்டேட்கள் எதுவும் இல்லாமல் - அவைகள் ஹேக் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிவேகமாக வளரும். அதாவது உங்களிடம் ஒரு பழைய போன் இருந்தால் உங்களுக்கு அதிக ஆபத்து என்று அர்த்தம்.”
அதாவது 2012 அல்லது அதற்கு முன்பு அறிமுகமான ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தும் எவரும் ஆபத்தில் உள்ளனர் என்று இந்த ஆய்வின் வழியாக தெரியவந்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான விட்ச்? தங்களின் இந்த "கண்டுபிடிப்பை" பற்றி அறிவிக்க கூகுளைத் தொடர்பு கொண்டது, ஆனால் கூகுள் இதுவரை பதிலளிக்கவில்லையாம்.
விட்ச்? நிறுவனத்தை சேர்ந்த கம்ப்யூட்டிங் எடிட்டர் ஆன கேட் பெவன், “மில்லியன் கணக்கான பயனர்கள் ஹேக்கர்களுக்கு பலியானால் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். கூகுள் மற்றும் போன் உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு அப்டேட்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - அவை எவ்வளவு காலம் நீடிக்கும், அது நிறுத்தப்படும் போது வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவான தகவல்களையும் அவர்கள் கொடுக்க வேண்டும்." என்கிறார்.
மேலும் இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், பயனர்கள் தாங்கள் எதை பதிவிறக்கம் செய்கிறார்கள் அல்லது எதை கிளிக் செய்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. உடன் வைரஸ் தடுப்பு மற்றும் தகவல்களை அவ்வப்போது காப்புப் பிரதி எடுக்கவும் பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக