திருவேடகம் (திருஏடகம்)
இறைவன் பெயர்
ஏடகநாதேஸ்வரர்
இறைவி பெயர்
ஏலவார்குழலி, மாதேவியம்பிகை
தேவாரப் பாடல்கள்*l
சம்பந்தர்
வன்னியும் மத்தமும் (3-32)
எப்படிப் போவது
மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் வழியில் திருவேடகம் அமைந்துள்ளது. நகரப் பேருந்து வசதிகள் மதுரையில் இருந்து சோழவந்தானுக்கு உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் சோழவந்தான் 5 Km தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு ஏடகநாதேஸ்வரர் திருக்கோவில்
திருவேடகம் அஞ்சல்
வாடிப்பட்டி வட்டம்
மதுரை மாவட்டம்
PIN – 625234.
தொடர்புக்கு:
04543 - 259311
தல வரலாறு
பாண்டிய நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது 4வது தலமாகும்.
ஏடு + அகம் = ஏடகம் என்றாயிற்று.
திருஞானசம்பந்தர் ஆற்றிலிட்ட ஏடு எதிரேறி கரையடைந்த தலமாகும். "வாழ்க அந்தணர்" என்னும் பதிக ஏட்டை சம்பந்தர் வைகையில் இட, அது ஆற்று நீரை எதிர்த்துச் செல்ல, பின்பு "வன்னியும் மத்தமும்" என்னும் திருப்பதிகம் பாடியவுடன் அந்த ஏடு ஒதுங்கி நின்ற திருத்தலம்.
மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அணல் வாதம் புணல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் "வாழ்க அந்தணர் " என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.
மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவஸ்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது.
சிறப்புகள்
மூலவர் - சிவலிங்கத் திருமேனி; கருவறை வேலைப்பாடுகள் அமைந்து காணப்படுகின்றன.
நடராசர் சந்நிதியில் இத்தலத் தேவாரத் திருப்பதிகம் சலவைக் கல்லில் எழுதப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது.
தல தீர்த்தமான பிரம தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபடின் "சித்தப்பிரமை" நீங்குவது இத்தலத்தின் தனிப் பெருமையாகும்.
அம்மன் சந்நிதி கற்றூண் ஒன்றில் திருஞானசம்பந்தரின் சிற்பம் சின்முத்திரையுடனும், தலைமாலையுடனும் (கையில் தாளமின்றி) அழகாக காட்சித் தருகிறது.
பங்குனி உத்திரம் முதலிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஏடு எதிரேறிய விழா ஆவணி முதல் நாளில் நடைபெறுகிறது.
இத்தலம் "பாகனூர்க் கொற்றத்து திருவேடகம்" என்றும், இறைவன் பெயர் "திருவேடகம் உடைய நாயனார்" என்றும் இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக