Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 மே, 2020

மருந்து கண்டுபிடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் தானாக அழிந்துவிடும்: உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தகவல்







சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவிய பெருந்தொற்று நோயான கொரோனாவுக்கு உலகம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். சுமார் 48 லட்சம் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 2002-ம் ஆண்டு உருவான ‘சார்ஸ்’ நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல் 2012-ம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகி பரவிய உயிர் இழப்பை ஏற்படுத்திய ‘மெர்ஸ்’ நோய்க்கும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த நோய்க்கிருமிகளைப் போலவே தற்போது உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கி வரும் கொரோனாவுக்கும் முடிவு கட்ட மருந்து இல்லை. ஆனால் சார்ஸ், மெர்ஸ் நோய்க்கிருமிகளை விட கொரோனா மிகவும் ஆபத்தானது என்பதால் அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இங்கிலாந்து, சீனாவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அதை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மருந்து கண்டுபிடித்து அதை குரங்கின் உடலில் செலுத்தி பரிசோதனையை செய்ததில், அந்த மருந்து குரங்கின் நுரையீரலுக்குள் கொரோனா வைரசை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியது தெரியவந்தது.
மருத்துவ ரீதியாக 8 பேரின் உடல்களில் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி சோதனை நடைபெற்று வருவதாகவும், மேலும் 100 பேர் மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய நிலைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்தை கண்டுபிடித்து, அதை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை பெறுவதில் அமெரிக்காவும் தீவிரமாக இருக்கிறது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அது பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கண்டுபிடிக்கப்படும் மருந்து கொரோனா வைரசை ஒழிப்பதாக மட்டுமே இருக்கவேண்டும். அதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்கவேண்டும். புதிய மருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் இதுதான் முக்கிய பிரச்சினையாக உள்ளது. எனவே இதற்கான சோதனைகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.
இதனால் கொரோனாவுக்கான மருந்து இன்னும் சில மாதங்களில் கண்டுபிடிக்கப்படுமா? அல்லது சில ஆண்டுகள் ஆகுமா? என்பது பற்றி விஞ்ஞானிகளால்கூட கணிக்க முடியாத நிலை உள்ளது.
இதுபற்றி அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் தலைவர் அந்தோணி பாஸி கருத்து தெரிவிக்கையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றார்.
இதற்கிடையே, ஆறுதல் அளிக்கும் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பே அந்த நோய்க்கிருமி தானாக இயற்கையாகவே அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமான கரோல் சிகோரா தனது ‘டுவிட்டர்’ பதிவில் தெரிவித்து இருக்கிறார். பொதுவாக நாம் கணிப்பதை விட நமக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தாம் கருதுவதாகவும், எனவே கொரோனா தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தினாலே நோய்க்கிருமி படிப்படியாக தானாகவே அழிந்துவிடும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
கரோல் சிகோராவின் இந்த டுவிட்டர் பதிவு வெளியானதும், உடனடியாக அதுபற்றிய விமர்சனங்களும் எழுந்தன.
உடனே தனது கருத்து குறித்து அவர் விளக்கமும் அளித்தார். எதுவுமே கணிக்க முடியாத தற்போதைய சூழ்நிலையில், இப்படி ஒரு சாத்தியம் உள்ளது என்ற வகையில் தனது சொந்த கருத்தை வெளிப்படுத்தியதாகவும் கரோல் சிகோரா தெரிவித்து உள்ளார்.
எதிர்காலத்தில் நிச்சயமாக என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்றும், எனவே நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக