விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் பெண் கணக்காளர் பணம் கையாடல் செய்துள்ளதாக போலீசில் மேலாளர் புகார் அளித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் பணம் 45 லட்சம் ரூபாய் கையாடல் செய்துவிட்டதாக நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சென்னை வடபழனி காவல் துறை உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசத்திடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். கடந்த 6 வருடங்களாக அந்த பெண் விஷாலில் தயாரிப்பு நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையினை அவர் தனக்கு மற்றும் தன் உறவினர்களின் கணக்குகளில் பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளார். அந்த மோசடியை மறைக்க போலியான ஆவணங்களை தயாரித்து டிடிஎஸ் கட்டி விட்டது போல அலுவலகத்தில் காட்டி உள்ளார். அது மட்டுமன்றி தினசரி வரவு செலவு கணக்குகளை இன்னும் மோசடி செய்துள்ளார் அவர் என்று மேனேஜர் போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி கடந்த ஆறு வருடங்களாக சிறிய சிறிய அளவில் பணம் கையாடல் செய்யப்பட்டு தற்போது அந்த பெண் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார் என்றும், அவர் இன்னும் அதிக தொகை கையாடல் செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்பதால் அவர் மீது விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை இருக்க வேண்டும் என அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த புகாரை விருகம்பாக்கம் குற்றப்பிரிவுக்கு வடபழனி உதவி ஆணையர் மாற்றி அனுப்பி வைத்துள்ள நிலையில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது விஷால் நடித்து முடித்துள்ள சக்ரா படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். சைபர் கிரைம் மற்றும் கொள்ளையர்களால் ஒரு அசோகச் சக்கரம் களவு போன பிறகு அதனை ஹீரோ எப்படி மீட்கிறார் என்பது பற்றித் தான் சக்ரா படத்தின் கதை இருக்கும் என ட்ரெய்லர் பார்க்கும் போதே தெரிந்தது. நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்தில் போலீஸ் அதிகாரிகள் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
விஷாலின் மற்றொரு படமான துப்பறிவாளன் 2 பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. விஷால் மற்றும் மிஷ்கின் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் நிறுத்தப்பட்ட நிலையில் மிஷ்கின் அதில் இருந்து வெளியேறுவதாக இதற்கு முன்பே அறிவித்து விட்டார். அதனால் மீதி படத்தை தானே இயக்கப் போவதாக விஷால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக