Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 26 ஆகஸ்ட், 2020

தஞ்சாவூரை மிரட்டும் பேய் பங்களா!


‘‘ஒருநாள் நடுராத்திரி... வீட்டுல தூங்கிக்கிட்டு இருந்தேன். தெரு நாய்ங்க பயங்கரமா ஊளையிட்டுச்சுங்க. சத்தம் அதிகமாயிட்டே போச்சு. ஜன்னலைத் திறந்து எட்டிப் பார்த்தேன். வெள்ளையா ஒரு பெரிய உருவம் அந்த பங்களாவுக்குள்ள போச்சு. அதிர்ச்சியில உறைஞ் சுட்டேன். அலறியடிச்சுக்கிட்டு படுக்கையில விழுந்த நான், ரெண்டு நாளா எந்திரிக்கவே இல்லை. அதுக்கப்புறம் இடியே விழுந்தாலும் சரி, ராத்திரி நேரத்துல அந்த பங்களா பக்கம் எட்டிப் பார்க்குறதே இல்லை. நான் மட்டுமில்லை... இந்தத் தெருவுல யாருமே ராத்திரி நேரத்துல கதவைத் திறக்குறது இல்லை’’ - திகிலூட்டுவதாக விவரித்தார் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தெற்குவீதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.

எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஏரியா தெற்கு வீதி. இதன் மையப் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பாழடைந்த பங்களா இருக்கிறது. அதைப் பற்றித்தான் ஊருக்குள் கதை கதையாகப் பேசுகிறார்கள்.

சரி, உண்மைதான் என்ன? பங்களாவைப் பற்றி தெரிந்துகொள்ள போட்டோகிராபருடன் கிளம்பினோம். சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும்போது சாந்தமாகத் தெரிந்த பங்களாவின் தோற்றம், வளாகத்தின் வாயிலுக்குச் சென்றதும் அடிவயிற்றில் பயப்பந்தை உருட்டியது. பங்களாச் சுவரிலிருந்து கிளம்பியுள்ள ஆலமரம், காற்றில் தலைவிரித்தாடும் பெரிய வேப்ப மரம் திகிலை அதிகப்படுத்தின. பெரிய இரும்பு கேட், நீண்டகாலமாகத் திறக்கப்படாமல் இருந்தது. அதையொட்டியிருந்த சிறு பாதை வழியாக உள்ளே சென்று, பங்களா முன் நின்றோம். ஏகத்துக்கும் அப்பியிருந்த ஒட்டடை, நீண்டகாலம் அங்கு யாரும் புழங்கவில்லை என்பதைக் காட்டியது. அரவம் கேட்டு அங்குமிங்கும் பறந்த வௌவால்கள் பயத்தைக் கூட்டின.

தஞ்சாவூரை மிரட்டும் பேய் பங்களா!
பங்களா வளாகத்தில் சில மாடுகள் கட்டப்பட்டிருந்தன. அதற்கு ஆட்கள் வந்து தீவனம் வைத்துச் சென்றுள்ளனர். அந்த வளாகத்தைத் தனி நபர்கள் சிலர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தெரிந்தது. நாம் அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர், ‘‘தம்பி யார் நீங்க, ஏன் இங்கே நிக்குறீங்க? ரொம்ப நேரம் இங்கே நிக்காதீங்க. ஆபத்து... சீக்கிரம் கிளம்பிடுங்க’’ என்றார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், ‘‘பங்களா வுக்குள்ள 15 வருஷமா பெரிய பாம்பு ஒண்ணு இருக்கு. ராத்திரி நேரத்துல வெளியே வந்துட்டு உள்ளே போயிடும். ராத்திரி நேரத்துல அலறல் சத்தம் கேட்கும். அதனால இருட்டுன பிறகு நாங்க கதவு, ஜன்னலை மூடிடுவோம். இதுக்காகவே அஞ்சு நாய்கள் வளர்க்கிறோம்’’ என்றார்.

அந்தப் பகுதியில் வசிக்கும் பனசை அரங்கன் என்பவரிடம் கேட்டோம், ‘‘இந்த இடத்தின் மதிப்பு மட்டுமே 10 கோடி ரூபாய் இருக்கும். இதைத் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிச்சிருக்காங்க. அவங்கதான் தங்களோட சுயநலத்துக்காக `இங்கே பேய் இருக்கு, பெரிய பாம்பு இருக்கு’னு புரளியைக் கிளப்பியிருக்காங்க. பலர் புகார் கொடுத்தும், அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த இடத்தை மீட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வர எந்த முயற்சியும் செய்யலை’’ என்றார்.

அறநிலையத்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம், “கிட்டத்தட்ட 10,000 சதுர அடி பரப்பளவுள்ள அந்த வளாகம் ஒருகாலத்தில் பரபரப்பாக இயங்கியது. இரண்டு பங்களாக்களில் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்கள். 2002-ம் ஆண்டு, இங்கிருந்த பங்களா ஒன்றில் ராஜமாணிக்கம் என்ற இணை ஆணையர் தங்கியிருந்தார். மனைவியுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டதில், அவரின் மனைவி உயிரிழந்து விட்டார். பிறகு, அவர் பங்களாவை காலிசெய்துவிட்டுச் சென்றுவிட்டார். அதையடுத்தே, `ராசியில்லாத பங்களா’ என்று பேச்சு எழுந்தது. அதிகாரிகள் யாரும் இங்கு தங்க முன்வரவில்லை. அதனால், 18 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கிறது பங்களா. காலவோட்டத்தில் ‘பேய் பங்களா’ என்றும் முத்திரை குத்தப்பட்டுவிட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பெரும்புள்ளி ஒருவர் அந்த இடத்தை வளைத்துப்போடப் பார்க்கிறார்” என்றார்.

அறநிலையத்துறையின் தஞ்சாவூர் மண்டல இணை ஆணையர் தென்னரசுவிடம் பேசினோம். ‘‘ `பேய் பங்களா’ என்று யார் கிளப்பிவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த இடத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழைய கட்டடம் உறுதியாக இருந்தால் பயன்படுத்தப் படும். இல்லையென்றால், புதிய கட்டடம் கட்டப் படும்’’ என்றார்.

பரபரப்பா இருந்த ஒரு பங்களா, பேய் பங்களாவா மாறுகிறவரை எங்கே போயிருந்தீங்க ஆபீஸர்ஸ்!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக