நாம் மட்டும் சக ஊழியர்களை விடக் குறைவான ஊதியம் வாங்குகிறோமோ என்கிற எண்ணம் மனதில் தோன்றுவது மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் சம்பளம் என்பது வெறும் எண் மட்டும் கிடையாது; அதை வைத்தே உங்களது பணி மதிப்பிடப்படுகிறது, மேலும் உங்கள் நிறுவனம் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதையும் அந்தச் சம்பளமே எடுத்துக்காட்டுகிறது.

நீங்கள் புதிய வேலையில் சேர்கிறீர்களா அல்லது நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் ஒரே வேலையைச் செய்து வருகிறீர்களா என்பது முக்கியமல்ல; உங்களது உழைப்புக்குரிய சரியான ஊதியம் கிடைக்கிறதா என்பதை அறிவது மிக அவசியமாகும்.

இதே அனுபவமும் பணிச்சுப்பையும் கொண்ட உங்களுக்கும், உங்கள் சகாவுக்கும் ஒரே அளவு சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை அறிவதற்கான 5 சூப்பர் வழிகள் இதோ:

1. சம்பளம் குறித்த நேரடி ஆய்வு (Market Research):

உங்களுக்குச் சரியான சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதைச் சரியாகக் கண்டுபிடிக்க சிறந்த வழி, உங்கள் அளவுக்குக் கல்வியும் தகுதியும் உடையவர்களுக்குச் சந்தையில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதைச் சரி பார்ப்பதுதான்.

இதே தகுதி மற்றும் அனுபவம் கொண்டவர்களுக்கு மற்ற நிறுவனங்கள் என்ன தருகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.

வேலைவாய்ப்புத் தளங்களுக்குச் சென்று தேடினாலே, உங்களது தகுதிக்குத் தற்சமயம் சந்தையில் என்ன சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

2. நெட்வர்க்கிங் (Networking) மூலமாக அறிந்துகொள்ளுங்கள்:

உங்கள் சம்பளத்தை மதிப்பிடுவதற்கான மற்றொரு எளிய வழி, முறையான நெட்வர்க்கிங் மூலம் தொடர்புகளை உருவாக்குவது. இதன் மூலம் உங்கள் துறையில் உள்ள மற்றவர்களுடன் சம்பளம் குறித்து வெளிப்படையாக உரையாடித் தெரிந்து கொள்ள முடியும்.

3. பணியாளர் வசதிகள் மற்றும் சலுகைகளை (Perks) ஆராயுங்கள்:

பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தைத் தாண்டி பல சலுகைகளையும் வசதிகளையும் செய்து தருகின்றன.

நீங்கள் உடல்நலம், ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பு, உணவு வவுச்சர்கள், நெகிழ்வான வேலை நேரம் (Flexible timing) போன்ற சலுகைகளைப் பெறுகிறீர்கள் என்றால், அதையும் கணக்கில் கொண்டு உங்கள் சம்பளம் குறித்து யோசிக்கலாம்.

மாறாக, இதுபோன்ற எந்தச் சலுகையும் இல்லாத சாதாரண நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு, உங்களது சக பணியாளர்கள் உங்களை விட அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள் என்றால்—ஒன்று அவர்கள் உங்களை விடச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும், அல்லது அந்த நிறுவனம் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடும்!

4. பணியமர்த்துபவர்களைத் (Recruiters) தொடர்புகொள்ளுங்கள்:

ஆட்களைத் தேர்வு செய்து பணியில் அமர்த்துபவர்களுக்கு (Recruiters) அனைத்துப் பதவிகளுக்கும் சந்தையில் வழங்கப்படும் நடப்புச் சம்பளம் குறித்த அத்துப்படியும் தெரிந்திருக்கும்.

உங்களது தற்போதைய சம்பளத்தை அவர்களிடம் வெளிப்படுத்தாமல், பொதுவாக உங்கள் பதவிக்குச் சந்தையில் என்ன சம்பளம் வழங்கப்படுகிறது என்று கேட்கலாம்.

அவர்கள் கூறும் தொகையானது உங்களுக்கு வழங்கப்படுவதை விட அதிகமாக இருந்தால், நீங்கள் குறைந்த சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

5. மதிப்பீட்டுத் தளங்களை ஆராயவும் (Review Platforms):

'ஜாப்ஸ் பஸ்' போன்ற முதலாளி மதிப்பீட்டுத் தளங்கள் (Employer Review Platforms), பணியாளர்கள் தங்கள் வேலை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கின்றன. மேலும், அதில் கேள்விகளைக் கேட்பதற்கான சிறப்பம்சங்களும் உள்ளன.

இந்தத் தளங்களில் உள்ள உரைகள் மற்றும் விவாதங்களைப் பார்க்கலாம்.

இதன் மூலம், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சம்பளம் வழங்குவதில் உங்கள் நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.