Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

புது இரத்தம்

 Image result for புது இரத்தம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


'நீ எத்தனை நாள் வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்ந்தாய் என்பது தான் முக்கியம்" என்பது அடிக்கடி நாம் கேட்கும் வாசகம் தான்.

பூ, ஒருநாள் மட்டும் வாழ்ந்தாலும் தனது அழகாலும், வாசனையாலும் அண்டியவரை மகிழ்விக்கவே செய்யும். ஒற்றைப் பூவிற்கே இந்த சிறப்பு என்றால், பல வகையான மலர்களால் கோர்க்கப்பட்ட பூ மாலைக்கு எத்தனை அழகு, எத்தனை மணம். அதனால் தான் மனிதர்களில் சாதித்தவர்களுக்கும், சமூக சிற்பிகளுக்கும் மலர்மாலை அணிவித்து அவர்களைப் பெருமைப்படுத்துகிறார்கள்.

பள்ளிகூடத்தில் மாணவர்கள் சீருடையில் சிறகடித்துப் படபடவென்று வண்ண வண்ண பட்டாம் பூச்சிகளாய் பறப்பதை பார்ப்பவர்கள் மனதில், சாதி மத பேதத்தை மறக்கடித்து விடுகிறது.

காலத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் என்று மாணவர்களிடம் கேட்டால், அவர்களின் பதில் நிச்சயமாக இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என்பதுதான். இது மொழியை புரிந்து பயன்படுத்துவதற்குத்தான் என்பது உண்மை. ஆனால் வரலாற்றுத் துறை தலைவர்களிடம் கேட்டால் அவர்களின் பதில் ஆதிக்காலம், சாதிக்காலம், சாதி வெறிக்காலம் என்பார்கள்.

சாதியால் சாதித்தவர்கள் இல்லை. சாதித்தவர்களுக்கு சாதியில்லை. வறுமையால் வாடி நாதியற்றவனாக வாழ்பவனுக்கு சாதி செய்த சாதனை என்ன?...

மலையடிக்குறிச்சி, இந்தக் கிராமம் மலையடிவாரத்தில் இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்பதற்கு பெரிய ஆராய்ச்சி செய்ய தேவையில்லை. மலைகளில் இருக்கிற ஏற்ற இறக்கத்தைப் போல அந்தக் கிராமத்திலும் சாதி ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கிறது.

மலையடிக்குறிச்சி பசுஞ்சோலையாக காட்சியளிக்கும். காட்டில் உள்ள மரங்களையெல்லாம் அங்கு பார்க்கலாம். ரோட்டில் இருபுறமும் செழுமையான உயர்ந்த மரங்கள். குழந்தைகளை இயற்கையை படமாக வரையச் சொன்னால் பொதுவாக இந்தக் கிராமத்தைப் போலத்தான் வரைவார்கள். மலை, நதி, மரம், பறவைகள், தென்னை மரங்கள், பெயர் சொல்லத் தெரியாத மரங்கள், அதில் பறவைகள் அருகில் குடிசை வீடுகள், அழகான சாலை, சாலையோரம் ஒரு டீக்கடை, டீக்கடையின் முன்பாக இரண்டு பெஞ்சுகள்...

கடைசியாக சொன்ன டீக்கடைதான் அந்தக் கிராமத்தின் விவாத மேடை. பிரச்சனை எதுவானாலும், அது அந்தக் கிராமத்தில் எங்கு நடந்தாலும் அதன் தொடக்கமும், முடிவும் இந்த டீக்கடையாகத்தான் இருக்கும்.

மலையடிக்குறியிச்சியில் இரண்டு மூன்று சாதிகள் இருந்தாலும் உயர்ந்த சாதிக்காரர்கள் கடை வைத்தால் தான் அதில் வியாபாரம் நடக்கும்.

பெரியசாமி டீக்கடை, சாலையோரத்தில் பெரிய குடிசை, உள்ளே நான்கைந்து பேர் அமரலாம். வெளியில் இரண்டு பெஞ்சுகள் கிடக்கும். காலை வேளையில் கடை அமைதியான சூழலில் அமர்களமாய் இருக்கும். நாட்டு நடப்பில் இருந்து ஊர் நடப்பு வரைக்கும் செய்திகள் பரவும். இங்கு எல்லோருமே செய்தி வாசிப்பவர்கள்தான். சிலர் செய்தி சொல்கிற விதமே சுவையாக இருக்கும். அப்படிப்பட்டவர் செய்தி சொல்லவோ, செய்தி பற்றிய கருத்து சொல்லவோ முற்பட்டால் ஆமாம் போடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதில் அந்த சாதிக்காரர்கள் ஆமாஞ்சாமி கூட போட முடியாது. வந்தோமா தனி கிளாசில் கடைக்காரர் தூர ஊத்துகிற மாதிரி ஊத்துகிற டீயை ஓரமாக குத்தவச்சி உட்கார்ந்து குடித்தோமோ, தூரப்போனமா என்று இருக்க வேண்டும். அங்கு பெரிய சாதிக்காரர்களோடு வேறு எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளக்கூடாது.

டீக்கடைக்காரர் பெரியசாமிக்கு ஒரு மகள் உண்டு. அவளுக்கு ஒன்பது வயது இருக்கும். நான்காம் வகுப்பு படிக்கிறாள். பள்ளிக்கூடம் விடுமுறை என்றால் டீக்கடை தான் அவளுக்கு பொழுதுபோக்கு. அப்பாவுக்கு அவ்வப்போது பாத்திரங்களைக் கழுவிக் கொடுத்தும் உதவி செய்வாள். கொஞ்ச நேரத்திற்கொரு முறை துரைச்சி! ஏமா.. துரைச்சி..!! எங்க நிக்க? என்ன செய்ற? என்று கேட்டுக்கொண்டே இருப்பார், பெரியசாமி.

இங்க தான இருந்து விளையாடுறேன். எப்பப்பாரு துரைச்சி... துரைச்சின்னுக்கிட்டு, என்று உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் துரைச்சி தலையை மட்டும் உயர்த்தி அப்பாவைப் பார்த்து செல்லமாக கோபப்படுவாள். அந்த கோபத்தை பார்த்ததும் பெரியசாமிக்கு உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும், ஆனந்தமும் தான் அடிக்கடி துரைச்சியைத் தேட வைக்கிறது போலும்.

பள்ளிக்கூடத்தில், ஆசிரியர் என்ன சொல்லிக் கொடுத்தாலும் அதை அப்படியே வந்து தந்தை பெரியசாமியிடம் சொல்வாள். துரைச்சி படிப்பில் பெரிய புலி இல்லாவிட்டாலும் ஆமை இல்லை. டீக்கடைக்கு வருகிறவர்களை முறை சொல்லி பேசுவாள். தெரியாதவர்கள் என்றால் மாமா என்று சொல்வாள்.

மதிய நேரம் கடையில் ஆட்கள் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். எல்லோரும் காட்டுக்கு வேலை சோலியாக போய்விடுவார்கள். பெரும்பாலும் அந்த நேரத்தில்தான் குப்புசாமி டீக்குடிக்க கடைக்கு வருவான். ஐயா..! டீ கொடுங்க சாமி! என்று தனியாக கவிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிக் கிளாசைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பான். பெரியசாமி ஒரு டீயைப் போட்டு நாய்க்கு கஞ்சி ஊற்றுவதைப் போல குப்புசாமி கையில் இருக்கும் கிளாசில் டீயை ஊற்றுவார். டீயைப் பெற்றுக் கொண்ட குப்புசாமி கடையின் ஓரத்தில் குத்தவச்சி உட்கார்ந்து கொண்டு பவ்யமாக குடித்துவிட்டு, கிளாசைக் கழுவி எடுத்த இடத்தில் கவிழ்த்தி வைத்து விடுவான்.

இவன் மட்டுமல்ல... இவன் சாதிக்காரங்க யாராக இருந்தாலும் எல்லோரும் அப்படித்தான். டீயை குடித்த குப்புசாமி ஓரமாக இருந்து இரண்டு பீடியைப் பற்ற வைத்து விட்டுத்தான் போவான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. துரைச்சி டீக்கடையில் பொழுதுப்போக்கிக் கொண்டிருந்தாள். குப்புசாமி வழக்கம் போல கடைக்கு வந்தான். டீ கொடுங்க சாமி, என்று கேட்டு தனிக் கிளாசில் டீயை வாங்கிக்கொண்டு தனியே சென்று அமர்ந்து ஊதி ஊதி ஊறிந்தான்.

ஏன் மாமா? இங்கே, கீழே உட்கார்ந்து டீ குடிக்கிறீங்க. பெஞ்சுதான் இருக்கிறதே! அதிலே போய் உட்கார்ந்து குடிங்க என்றாள் துரைச்சி, குப்புசாமியைப் பார்த்து.

அவ்வளவுதான் குப்புசாமிக்கு குப்பென்று வியர்த்தது. ராட்டினத்தில் தழைகீழாக சுற்றும்போது இரத்தம் தலைக்கும், காலுக்கும் வேகமாக தாறுமாறாக ஓடி கிரங்க வைப்பது போல, குப்புசாமிக்கு ஒரு கிரக்கம் வந்தது, துரைச்சியின் மாமா என்ற வார்த்தை. அப்படியெல்லாம் என்னை சொல்லக்கூடாது தாயி.. என்று கையெடுத்து கும்பிடுவதற்கு முன்பே, ஏய்! துரைச்சி.. அறிவில்ல உனக்கு, யாரைப் பார்த்து மாமான்னு சொல்ற. இப்படித்தான் உனக்குப் பள்ளிக்கூடத்தில வாத்தியாரு பாடம் சொல்லிக் குடுத்தாரோ என்று கத்திய பெரியசாமி துரைச்சியை கோபமாய் பார்த்தார்.

ஏன் மாமான்னு சொல்லக்கூடாது? அப்படீன்னா அண்ணான்னு சொல்லனுமா! என்று விபரம் கேட்டாள், துரைச்சி.

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அவனுக கீழ் சாதி, நாம மேல் சாதி. நாம அவனுகள நீ, வா, போ-ன்னுதான் பேசனும். புரிஞ்சுதா... என்று பிஞ்சு நெஞ்சில் நஞ்சைத் தூவினான், பெரியசாமி.

இல்லியே, 'சாதிகள் இல்லையடிப் பாப்பா... குலந் தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் பாவம்" என்றல்லவா, எங்கள் ஆசிரியர் சொன்னாரு, என்றாள் வலது கை சுட்டு விரலைக் கன்னத்தில் தட்டிக்கொண்டு தலையை மேல் நோக்கிப் பார்த்தவாறு.

உங்க வாத்தியார தீய வைக்க. நாட்டு முறை தெரியாதவன்லாம் வாத்தியாரு. ஏலே, இன்னும் நீ இங்கதான் நிக்கிறியா? என்று இன்னும் நீ இங்கதான் நிக்கிறியா! என்று குப்புசாமியை தனது அழுக்குக் காலால் மிதித்து தள்ளினான் பெரியசாமி.

பெரியசாமி மிதிக்க காலைத் தூக்கும் போதே மிதியில் இருந்து தப்பித்துக் கொள்ள வகை இருந்தும் குப்புசாமி அந்த மிதியை மனமுவந்து வாங்கிக் கொண்டு, அங்கிருந்து தனது அழுக்குத் துண்டை கக்கத்தில் வைத்துக் கொண்டு, கரண்டைக் கால் வரைக்கே கட்டியிருந்த வேட்டியில் ஒட்டிக் கொண்டிருந்த தூசி, புழதியைக் கூட தட்டி விடாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

அன்றிரவு குப்புசாமிக்கு தூக்கமே வரவில்லை. பெரியசாமி தன்னை மிதித்தது அவனது உடம்பில் சிறிது கூட வலியை ஏற்படுத்தவில்லை. மனதும் அதற்காக சிறிதும் வருத்தப்படவில்லை. ஏனென்றால் இது காலங்காலமாக பழகிப் போனது. ஆனால் குழந்தை துரைச்சி, தன்னை மாமா என்றதும் தனக்காக தன் தகப்பனிடம் வாதிட்டதும் திரும்பத் திரும்ப அவன் நினைவில், கடல் அலைபோல் வந்து வந்து திரும்பியது. துரைச்சி குப்புசாமிக்கு குழந்தையாகத் தெரியவில்லை, தெய்வமாக தெரிந்தாள்.

சில நாட்கள் கழித்து, ஒருநாள் பெரியசாமி கடையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார். குப்புசாமி வழக்கம் போல் டீ குடித்துக் கொண்டிருந்தார். பெரியசாமி கழிவு நீரை கொட்டுவதற்கு கடைக்கு எதிரே சாலையின் மறுபுறம் உள்ள மரங்களுக்கிடையே ஊற்றுவது வழக்கம். இன்றும் அப்படித்தான் கழிவு நீர் வாளியை தூக்கியபோது மகள் துரைச்சி, அப்பா! என்னிடம் தாருங்கள், நான் ஊற்றிவிட்டு வருகிறேன் என்றாள். ஆனால், பெரியசாமியோ வேண்டாம்மா, உன்னால் தூக்க முடியாது! நீ சின்னப் புள்ள, என்று கூறியவாறு கழிவு நீர் வாளியை தூக்கிக் கொண்டு சாலையின் மறுபுறம் சென்றார். கழிவு நீரை ஊற்றிவிட்டு திரும்பி சாலையைக் கடக்கும்போது எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற மினி லாரி, பெரியசாமியின் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.

அம்மா! என்ற சப்தமும், மினி லாரி மோதிய சப்தமும் கேட்டு அதிர்ந்த துரைச்சியும், குப்புசாமியும் அருகில் ஓடினார்கள். இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அப்பாவைப் பார்த்து கதறி அழுதாள் துரைச்சி. ஐயா... ஐயா... என்றபடி பதறிய குப்புசாமி தொட்டுத் தூக்க பயந்தான். தீண்டத்தகாதவன் தீண்டியதாக குற்றம் வந்துவிடுமோ! என்ற பயம் அவனை பதற வைத்தது.

அந்த நேரம், துரைச்சியின் பிஞ்சுக்கை குப்புசாமியின் கையைப் பிடித்தது. மாமா! எங்க அப்பாவை காப்பாத்துங்க... எங்க அப்பாவை காப்பாத்துங்க என்ற ஒலி குப்புசாமிக்கு புது வெள்ளம் போல் புத்தெழுச்சியோடு செயல்பட வைத்தது.

இது மலையடிவாரக் கிராமம் என்பதால் அதிக போக்குவரத்து கிடையாது. சற்றும் யோசிக்காமல் மறுகணமே தனது கையால் பெரியசாமியைத் தூக்கினான். பாவம் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்த பெரியசாமியின் தலையிலும், காலிலும் அடிபட்டிருந்ததால் ரத்தம் அதிகமாக வெளியேறிக் கொண்டிருந்தது. தனது துணியால் ரத்தம் வெளியேறிய இடத்தில் கட்டுப் போட்டுக்கொண்டு பெரியசாமியை தனது உழைத்து உழைத்து உரமேரிய தோளில் தூக்கி போட்டுக்கொண்டு ஓட்டமாக ஓடினான், மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு. அதுவரையில் அந்த ரோட்டில் ஒரே ஒரு காரைத் தவிர வேறு வாகனம் ஏதும் இவர்களைக் கடந்து போகவில்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன், மலையடிக்குறிச்சி எந்த அளவிற்கு ஒதுக்குப்புறமான கிராமம் என்று.

அப்பா…அப்பா எங்க அப்பாவ காப்பாத்துங்க!... எங்க அப்பாவ காப்பாத்துங்க! என்று அழுதுக்கொண்டே இருந்தாள் துரைச்சி.

ஆத்தா! அப்பாவுக்கு ஒன்றும் ஆகாதுத்தா, இந்த டாக்டரம்மா எப்படியும் காப்பாத்திடுவாங்க என்று குழந்தை தெய்வத்தைக் கும்பிட்டுக் கொண்டே குப்புசாமி ஆறுதல் மொழிந்தான்.

பெரியசாமிக்கு முதலுதவி செய்த பெண் டாக்டர், ஐயா! உடனடியாக டவுன் பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போனாத்தான் எதுவும் சொல்ல முடியும். ஏன்னா நிறைய இரத்தம் போய்விட்டது. இங்கு சிகிச்சையளிக்க போதுமான வசதி கிடையாது என்று கூறினார்.

டாக்டர் ஏற்பாடு செய்து கொடுத்த இலவச ஆம்புலன்சில் டவுன் பெரிய ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

ஆம்புலன்சில் இருந்து இறங்கி ஆஸ்பத்திரிக்குள் சென்றார். அப்போது குப்புசாமியின் தூரத்து உறவினர், மருத்துவமனையின் துப்புறவு பணியாளராகப் பணிபுரியும் காமாட்சி கண்ணில் குப்புசாமி தென்பட்டான். காமாட்சியை அடையாளங்கண்டு கொண்ட குப்புசாமி அவளின் உதவியுடன் சிறந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான்.

துரைச்சி அழுகையை கொஞ்சம் நிறுத்தி இருந்தாலும் விம்மல் இருந்தது. கண்ணில் நீர் வழிவதை அவ்வப்போது துடைத்துக் கொண்டாள். அப்போது தான் கேட்டாள் காமாட்சி, யார் இந்தக் குழந்தை என்று? விபரம் சொன்னான் குப்புசாமி.

விபரம் அறிந்த காமாட்சி இருவருக்கும் அங்கிருந்த கேண்டீனில் காபியும், பண்ணும் வாங்கிக் கொடுத்து, சாப்பிடுங்க ஆத்தா… அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது. பெரிய டாக்டர் இருக்காரு. அவரு எப்படியும் காப்பாத்திருவாரு என்று ஆறுதல் கூறி பரிவோடு பார்த்துக் கொண்டார்.

இப்ப வந்த ஆக்சிடெண்ட் கேசோடு கூட வந்தவங்க யாரு? என்று கேட்டுக்கொண்டே வராண்டாவில் வேகமாக வந்தார், அந்த வெள்ளை யூனிபார்ம் அணிந்திருந்த நர்ஸ்.

நான் தாங்கத் தாயி என்று கையைக் கட்டிக்கொண்டு, தாயி! அய்யா எப்படி இருக்காரு? அவரப் பாக்கலாங்களா என்று கேட்டார்.

ஏங்க, எவ்வளவு ரத்தம் வெளியே போயிருக்கு தெரியுமா? உடனே அவருக்கு இரத்தம் ஏத்தனும். அதுவும் ஒ நெகடிவ். இது கிடைக்கிறதே ரெம்ப அபூர்வம் என்று நர்ஸ் கூறியதும் பதறத்தான் முடிந்தது குப்புசாமிக்கு... வேறு என்ன செய்ய முடியும். ஆனால் குப்புசாமிக்கும் ஒ நெகடிவ் தான் என்பது குப்புசாமிக்கே தெரியாது.

துரைச்சி, குப்புசாமியின் காலைப் பிடித்தாள்... துடித்துப் போன குப்புசாமி, 'ஆத்தா என்ன காரியம் பண்ற" என்றவாறு துரைச்சியைப் பார்த்தார்.

கண்ணில் பொங்கிய நீர் ஒரு சொட்டு கீழே விழுந்தது. கூப்பிய கையோடு, 'மாமா நீங்க ரத்தம் கொடுங்க மாமா, நீங்க ரத்தம் கொடுங்க மாமா" என்று குழந்தை அழுதாள்.

அழாதீங்காத்தா... எங்க இரத்தம் உங்க இரத்தத்தோடு ஒட்டாதுத்தா. உங்களுக்கு விவரம் தெரியாது என்று குளறினான் குப்புசாமி.

நர்ஸ் அவசரமாக கேட்டாங்க குப்புசாமியிடம், நீங்க சாராயம் ஏதும் குடிச்சிறுக்கீங்களா, அப்போது இல்ல தாயி எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் கிடையாது.

அப்போ வாங்க உங்க ரத்தத்தை டெஸ்ட் பண்ணுவோம். ஒரே குரூப்பா இருந்தால் உடனே காப்பாத்திடலாம் என்று கூறியவாறு லேப் அறையை நோக்கி வேகமாக நடந்தார்கள். கோழிக்கு பின்னால் கோழிக் குஞ்சைப் போல துரைச்சியும் குடு குடு என்று ஓடியது. பார்ப்பவர்கள் கண்களில் ஈரம் இருப்பதை உறுதி செய்தது.

டெஸ்ட் முடிந்தது. ஓ நெகடிவ் என்று ரிசல்ட் வந்தது. உடனடியாக குப்புசாமி ஐ.சி.யு. வார்ட்க்கு அழைத்து செல்லப்பட்டார். சில நிமிடங்களில் குப்புசாமியின் ரத்தம் பெரியசாமியின் உடம்புக்குள் பயணிக்க ஆரம்பித்தது. அதிக ரத்தம் வெளியேறியதால் பெரியசாமியின் மீதம் இருந்த ரத்தம் களையிழந்து, வேகம் இழந்து அடங்கி போக இருந்த நேரத்தில், நீரில்லாமல் வறண்ட பயிர் மீது பெருமழை பெய்தது போல், குப்புசாமியின் சூடான ரத்தத்துடன் இணைந்து வீர நடை போட்டது. இரண்டு பேரின் இரத்தம் சேர சேர பெரியசாமியின் கண்கள், சூரிய உதயம் போல் மெதுவாகத் திறப்பதும், உதயத்தை மேகங்கள் மறைப்பது போல் சிறிது கண்களை மூடியும், பின்பு மேகம் விலகியதும் சூரியன் பிரகாசிப்பது போல் பெரியசாமியின் கண்கள் மலர ஆரம்பித்தது.

அருகில் நின்ற துரைச்சியை ஒரு கையால் அருகில் இழுத்து வைத்துக் கொண்டார்.

என்னடா நடந்தது குப்புசாமி... என்று மெதுவாக கேட்டார், பெரியசாமி.

அது குப்புசாமி இல்லப்பா. நமக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய குலசாமி என்றார் துரைச்சி.

சைகையால் குப்புசாமியை அருகில் அழைத்து அவனது கரங்களைப் பற்றி கொண்டார். அவரது பார்வையில் தெரிந்தது குப்புசாமியல்ல குலசாமி.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக