கார் டிரைவர் கார்த்திக் |
சென்னையில்
செயல்படும் பிரபல உணவகத்தின் உரிமையாளரிடம் வேலைக்குச் சேர்ந்த 12 மணி நேரத்தில்
காரைத் திருடிய வழக்கில் டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை
வடபழனி காவல் நிலையத்துக்கு வந்த தொழிலதிபர் வாசுதேவன் ரூ.8 லட்சம் மதிப்புள்ள
காரை, டிரைவர் கடத்திவிட்டார் என்று கூறினார். உடனே உதவி கமிஷனர் ஆரோக்கிய
பிரகாசம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை
நடத்தினர். வாசுதேவன் கொடுத்த தகவலின்படி டிரைவரை போலீஸார் தேடிவந்தனர்.
இந்தநிலையில்
செல்போன் சிக்னல் மூலம் டிரைவர் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் டிரைவரைப் பிடித்தனர். பின்னர் காரையும் பறிமுதல்
செய்து வடபழனி காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். டிரைவரிடம் விசாரித்தபோது
திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து
போலீஸார் கூறுகையில், ``சென்னை ராயப்பேட்டை, அவ்வைசண்முகம் சாலையில் உள்ள
அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் வாசுதேவன். 63 வயதாகும் இவர், சென்னை
முழுவதும் ஹோட்டல் பிசினஸ் செய்துவருகிறார். `கார் டிரைவர் தேவை' என விளம்பரம்
கொடுத்துள்ளார். அதைப்பார்த்த ஒருவர், வாசுதேவனின் வீட்டுக்கு 11-ம் தேதி காலையில்
சென்றுள்ளார். அங்கு வாசுதேவனைச் சந்தித்த அந்த நபர், தன்னுடைய பெயர் அன்னராஜ்
என்றும் கார் ஓட்டத் தெரியும் என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய வாசுதேவன்,
அன்னராஜிடமிருந்து டிரைவிங் லைசென்ஸை வாங்கிக்கொண்டு அவரை வேலைக்குச்
சேர்த்துள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் வடபழனிக்கு காரில்
சென்றுள்ளார். காரை டிரைவர் அன்னராஜ் ஓட்டியுள்ளார். வடபழனியில் உள்ள மாலுக்குள்
சென்ற வாசுதேவன், பொருளை வாங்கிவிட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது காரோடு
அன்னராஜ் மாயமாகியிருந்துள்ளார். உடனே அன்னராஜின் செல்போனுக்கு வாசுதேவன் தொடர்பு
கொண்டபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்தது.
இதனால்,
வடபழனி காவல் நிலையத்தில் 10.30 மணியளவில் வாசுதேவன், புகார் கொடுத்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்தி டிரைவரைப் பிடித்தோம். விசாரணையில் அவரின் பெயர்
கார்த்திக் என்றும் நெல்லை மாவட்டம், வானூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திக்கைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்துள்ளோம்" என்றனர்.
இதுகுறித்து
நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர் ``தொழிலதிபரான வாசுதேவனுக்கு சென்னை
முழுவதும் ஹோட்டல் கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளைகளுக்கும் சென்று கணக்குப்பார்த்து
பணத்தை வசூல் செய்த வாசுதேவன், அதைப் பையில் வைத்துள்ளார். லட்சக்கணக்கான ரூபாய்
இருந்த அந்தப் பையை காரில் வைப்பதை டிரைவர் கார்த்திக் பார்த்துள்ளார். இதனால்
பணத்தோடு எஸ்கேப் ஆகிவிடலாம் எனக் கார்த்திக் திட்டமிட்டுள்ளார்.
இந்தச்
சமயத்தில்தான் வாசுதேவன், அந்தப் பையையும் தன்னுடைய ஐபோனையும் காரிலேயே
வைத்துவிட்டு பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திய கார்த்திக், அங்கிருந்து காரில் கல்பாக்கத்துக்குச் சென்றுள்ளார்.
காரிலிருந்த பையைத் திறந்துபார்த்தபோது அதில் வெறும் ரூ.200 மட்டுமே இருந்துள்ளது.
பணத்தை பையில் வைத்த வாசுதேவன், கடைக்குச் செல்லும்போது பணத்தை மட்டும் தன்னுடைய
பாக்கெட்டில் எடுத்து வைத்துள்ளார்.
அதை
கார்த்திக் கவனிக்கவில்லை. அதே நேரத்தில் வாசுதேவன், தன்னுடைய ஐபோனை சைலன்ட்
மோடில் காரிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். காரில் ஐபோன் இருக்கும் தகவலை வாசுதேவன்
போலீஸாரிடம் கூறியதும் அந்த செல்போன் சிக்னல் மூலம் கார்த்திக்கைப்
பிடித்துவிட்டோம். வேலைக்குச் சேர்ந்து 12 மணி நேரத்தில் காரைத் திருடிய
கார்த்திக்கை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் கைது செயதுவிட்டோம்" என்றார்.
செல்போன் சிக்னல் மூலம் டிரைவர் இருக்கும்
இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் டிரைவரைப்
பிடித்தனர். பின்னர் காரையும் பறிமுதல் செய்து வடபழனி காவல் நிலையத்துக்குக்
கொண்டு வந்தனர்.
காரைக்
கடத்திய கார்த்திக் நன்றாக மது அருந்தியுள்ளார். காரை விற்று விட்டு எஸ்கேப் ஆக
திட்டமிட்டிருந்த கார்த்திக், ஐபோன் சிக்னலால் சிக்கிக்கொண்டார். காவல்
நிலையத்தில் போதையில் தெளிந்தபிறகு கார்த்திக், தன்னை மன்னித்துவிடும்படி
போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார். கார்த்திக்கிடம் விசாரித்தபோது தன்னுடைய அப்பா, அம்மா
இருவரும் விபத்தில் இறந்துவிட்டதாகவும் சகோதரிக்குத் திருமணமாகிவிட்டதாகவும்
கேரளாவில் உள்ள பாதிரியார் ஒருவரின் தயவில் வளர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
கார்த்திக்
கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் அவர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வடபழனி
காவல் நிலையத்துக்கு தெரியவந்துள்ளது. கார் டிரைவர் போல வேலைக்குச் சேரும்
கார்த்திக், பணம், காரோடு எஸ்கேப் ஆகிவிடுவார் என்று சிலர் தகவல்
தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக