பாலசந்தர் |
`என்
நிறுவனத்துக்கு வேலைக்கு வந்த பெண், என்னுடன் நெருங்கிப் பழகினார். பின்னர் அவர்
அலுவல ஊழியர்களிடம் என் மனைவி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்' என சென்னை
தொழிலதிபர் பாலசந்தர் கூறினார்.
சென்னை
பள்ளிக்கரணை, ஐஐடி காலனியைச் சேர்ந்தவர் பாலசந்தர் (39). இவர், சென்னை போலீஸ்
கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, இளம்பெண் ஒருவர் மீது புகார் கொடுத்தார். அந்தப்
புகார் பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாலசந்தர்
கொடுத்த புகாரில், `எனக்கு ஹேமலதா என்பவருடன் திருமணம் நடந்து 2 குழந்தைகள்
உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு ஹேமலதா இறந்துவிட்டார். என் குழந்தைகள் மாமனார்
வீட்டில் வளர்ந்து வருகின்றனர். நான் வடபழனி, மும்பை, துபாய் ஆகிய இடங்களில்
தனியார் நிறுவனங்களை நடத்திவருகிறேன்.
கடந்த
ஜூன் மாதம் துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தேன். அப்போது என்னை
அழைத்துச் செல்ல வடபழனி அலுவலகத்தில் வேலைபார்த்த பெண் ஒருவர் வந்தார்.
அப்போதுதான் அவர் எனக்கு முதல்முறையாக அறிமுகமானார். பின்னர் அந்தப் பெண்,
பள்ளிக்கரணையில் தங்கியிருப்பதாகவும், சகோதரர்கள் பெங்களூரில் குடியிருப்பதாகவும்
தெரிவித்தார். தனக்கு 38 வயதாகியும் இன்னமும் திருமணமாகவில்லை என்றும் கூறினார்.
மேலும்
அவர், அப்பா, அம்மா இறந்துவிட்டதாகவும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதாகவும்
தெரிவித்தார். அவர் கூறிய தகவல்களை உண்மையென்று முழுமையாக நம்பினேன். வெளிநாடு
செல்ல உள்ளதால் பயிற்சிக்காக என் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாகக் கூறினார்.
அதன்பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகினோம். பின்னர் அவர் தன்னை எம்.டி.
என்றும் என் மனைவி என்றும் வேலை செய்யும் ஊழியர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும்
கூறினார்.
இதையடுத்து
அந்தப் பெண் குறித்து என் அம்மாவிடம் கூறினேன். பின்னர் என் 2 குழந்தைகளுக்காக
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அம்மாவிடம் தெரிவித்தேன். அதற்கு என்
அம்மா சம்மதித்ததோடு 5 சவரன் தங்கச் செயினை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தார். அதை
அந்தப் பெண்ணிடம் நான் கொடுத்தேன்.
இந்தநிலையில்,
தன் வளர்ப்பு மகள் திருமணத்துக்காக 7,00,000 ரூபாய் ஒருவரிடம் கடன் வாங்கியதாகவும்
அதற்கு வட்டி செலுத்த பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் அவருக்கு
கொடுத்து வந்த 60,000 ரூபாய் சம்பளத்தோடு கூடுதலாக 40,000 ரூபாய் எனக் கடந்த 6
மாதங்களாகக் கொடுத்தேன். மேலும் அவர் என் வருங்கால மனைவி என்பதால் என்னுடைய
கிரெடிட் கார்டையும் அந்தப் பெண் பயன்படுத்திவந்தார்.
மேலும்,
அந்தப் பெண் தன்னுடைய பாஸ்போர்ட் பிளாக் லிஸ்ட்டில் இருப்பதாகக் கூறினார். அதை
விடுவிக்கவும் சில லட்சங்களை செலவழித்தேன். அந்தப் பெண்ணுடன் சில நிகழ்ச்சிகளில்
நான் கலந்துகொண்டேன். அப்போதுதான் அவருக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் மது
அருந்தும் பழக்கமும் இருப்பது எனக்குத் தெரியவந்தது. அதை வருங்கால மனைவி என்ற
உரிமையில் கண்டித்தேன். ஆனால், அவர் அந்தப் பழக்கத்தை விடவில்லை.
இந்தச்
சமயத்தில் அந்தப் பெண்ணுக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பழக்கம்
ஏற்பட்டுள்ளது. அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது அவர் புகார் கொடுத்திருந்தார்.
இதுகுறித்து விளக்கம் கேட்டபோது அவர், என்னிடம் பேசுவதைத் தவிர்த்தார்.
சம்பந்தப்பட்ட எஸ்.ஐ-யிடம் நான் விசாரித்தபோதுதான் அந்தப் பெண்ணின் சொந்த ஊர்
ஈரோடு மாவட்டம் என்றும் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பஞ்சாயத்து
தலைவியாக இருந்ததாகவும் ஏற்கெனவே திருமணமாகி மகள், மகன் இருக்கும் தகவலும்
தெரியவந்தது.
முதல்
கணவரைப் பிரிந்து அவர் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. பள்ளிக்கரணை காவல்
நிலையத்தில் அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால் அவரிடமிருந்த என்னுடைய லேப்டாப்
மற்றும் கிரெடிட் கார்டு, நான் கொடுத்த பணம் ஆகியவற்றை திரும்பக் கேட்டேன். அதற்கு
அவர், நானும் அவரும் வடபழனி கோயிலில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காவல்
நிலையத்தில் காட்டி, புகார் கொடுப்பதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால்
என்னை நம்ப வைத்து ஏமாற்றிய அந்தப் பெண் மற்றும் அவருக்கு உதவுபவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து
பாலசந்தரிடம் கேட்டதற்கு, ``நான் கடந்த 4 ஆண்டுகளாக நிறுவனம் நடத்திவருகிறேன்.
என்னுடைய வடபழனி அலுவலகத்துக்கு அட்மின் மற்றும் வளர்ச்சி அதிகாரியாக அந்தப் பெண்
வேலைக்குச் சேர்ந்தார். என்னை ஏமாற்றி பணம் பறிக்கவே அந்தப் பெண் என்னிடம்
நெருக்கமாகப் பழகியுள்ளார். அவரின் சுயரூபம் தெரிந்ததும் விலகிவிட்டேன். தற்போது
அவர் எனக்கு பலவகையில் மிரட்டல் விடுத்துவருகிறார்.
பள்ளிக்கரணை
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அந்தப் பெண்ணின் பெயரைக் கேட்டாலே நடவடிக்கை
எடுக்கத் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் உதவி கமிஷனர், துணை கமிஷனர், இணை கமிஷனர்
ஆகியோரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால்தான் கமிஷனர்
அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும்
பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி அனுப்பியுள்ளனர்"
என்றார் வேதனையுடன்
பாலசந்தர்
குற்றம் சுமத்தும் அந்தப் பெண்ணிடம் விளக்கம் கேட்க அவரிடம் பேசினோம். பிறகு
பேசுவதாகப் பதிலளித்தார். பின்னர் அவரிடம் பேசுவதற்குப் பலதடவை முயற்சி செய்தும்
பதிலளிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக