ஒரு காட்டில், காக்கை ஒன்று மன நிறைவோடு, மகிழ்ச்சியாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு, ஒரு அன்னப் பறவையைப் பார்த்ததும் அதன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நான் கருப்பாக இருக்கிறேன். ஆனால் அன்னப்பறவையோ வெண்மையான நிறம்! எவ்வளவு அழகு! உலகத்தில் அதிக சந்தோஷத்துடன் வாழ்வது இந்த பறவையாக தான் இருக்கும் என்று எண்ணியது.
அப்போது அன்னப்பறவை காக்கையின் அருகில் வந்ததும், தன் எண்ணங்களை அன்னப்பறவையுடன் பகிர்ந்து கொண்டது. அதற்கு அன்னப்பறவை காக்கையிடம், இரு வண்ணங்கள் கொண்ட ஒரு கிளியைப் பார்ப்பதற்கு முன், நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். கடவுளின் படைப்புகளில் கிளி தான் இன்பமாக இருக்கும் என்று கூறியது.
உடனே காக்கை கிளியை பார்க்கச் சென்றது. அங்கு சென்ற காக்கை கிளியிடம் நீ தான் அழகு! நீதான் மகிழ்ச்சியாக இருக்கின்ற பறவை என்று கூறியது. அதற்கு கிளி, மிருகக்காட்சி சாலையில் மயிலைப் பார்த்த பிறகு என் அபிப்ராயம் மாறிவிட்டது. அங்கு பல வண்ணங்கள் நிறைந்த அழகான மயில் தான் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று கூறியது.
அடுத்த நாள், காக்கை மிருகக்காட்சி சாலைக்கு சென்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் மயிலைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, காக்கை மயிலிடம் சென்று பேச்சு கொடுத்தது. உன்னைப் பார்க்க தினமும் பல மக்கள் வருகின்றார்கள். ஆனால் என்னைப் பார்த்தால் எல்லோரும் துரத்தி விடுகிறார்கள்! என்று கூறியது.
அதற்கு மயில், நான் மிக அழகாக இருக்கிறேன் என்று நினைத்துப் பெருமைப்பட்டேன். ஆனால் என்னை மிருகக்காட்சி சாலையில் வைத்திருக்கிறார்கள். நிம்மதியாக இருக்க முடியவில்லை. காக்கைகளை மட்டும் கூண்டில் அடைப்பதில்லை. காக்கையாக இருந்தால் நிம்மதியாக வாழலாமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! என்று பதிலளித்தது.
இதிலிருந்து, அன்னப் பறவை சந்தோஷமாக இருக்கிறது என்பது காக்கையின் அபிப்ராயம்! கிளி தான் சந்தோஷமாக இருக்கிறது என்பது அன்னப்பறவையின் அபிப்ராயம்! மயில் தான் சந்தோஷமாக இருக்கிறது என்பது கிளியின் அபிப்ராயம்! கடைசியில், காக்கை தான் சந்தோஷமாக இருக்கிறது என்பது மயிலின் அபிப்ராயமாக உள்ளது.
தத்துவம் :
நாம் மற்றவர்களுடன் நம்மை ஒப்பீடு செய்தால் மன நிம்மதியை இழப்போம். கடவுள் நமக்குக் கொடுத்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டு இன்பமாக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக