கட்டை விரலைச் சுற்றி வரும் ரேகை வாழ்க்கை ரேகை என்றும், சக்தி ரேகை என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவருடைய உடல் வலிமை, மனவலிமை, படைப்புத்திறன் ஆகியவற்றை இந்த ரேகை காட்டுகிறது.
வாழ்க்கை ரேகை என்பது சித்திரக்காரன் ஒருவன் லாவகமாய் வரைந்த அழுத்தமான வளைகோடைப் போல் இருந்தது என்றால் செம்மையான வாழ்க்கையும், அதில் படிப்படியான முன்னேற்றமும், அளவான மகிழ்ச்சியும் கிடைக்கும். இந்த ரேகையில் அவ்வப்போது ஏற்படும் குறுக்கீடுகள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களாகும்.
குரு மேட்டின் அடியில் தொடங்கி மணிக்கட்டில் இந்த ரேகை முடிவடைகிறது. தொடக்கம் முதல் முடிவு வரை நூறு வயது என்று வாழ்க்கையைக் கணக்கிட்டால் சரிபாதி இருபத்தைந்து ஆகும்.
அதிலிருந்து இருபத்தைந்து வயது வரை வாழ்க்கை எப்படி அமையும், அதன் பிறகு எப்படி அமையும் என்று இந்த ரேகையை கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இந்த ரேகையின் நடுவில் சிறு இடைவெளி தோன்றினால் அந்த வயதில் உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகும்.
வாழ்க்கை ரேகையிலிருந்து மேலே கிளம்பிச் செல்கின்ற சிறு சிறு ரேகைகள் அந்த நபருக்கு அந்தந்த வயதுக்காலத்தில் கிடைக்கக்கூடிய முன்னேறும் சந்தர்ப்பங்களையும், திட்டங்களையும் குறிக்கின்றன.
வாழ்க்கை ரேகையின் நடுவில் கரும்புள்ளிகள் தோன்றுமானால் அந்த வயதில் ஏற்படும் துக்கங்களை இது குறிக்கிறது. இவற்றை ஒரு கண்டம் என்று கூடச் சொல்லலாம். இந்த புள்ளியைச் சுற்றி ஒரு சதுரம் அமைந்திருந்தால் அது கண்டத்திலிருந்து தப்புவதைக் குறிக்கிறது.
மேல் செவ்வாய் மேட்டிலிருந்து ஒரு மெல்லிய ரேகை மேல் நோக்கிக் குருமேட்டை நோக்கிச் சென்றால், இவர்கள் வாழ்க்கையில் பல எதிர்ப்புகளை வென்று தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
வாழ்க்கை ரேகைக்கு அருகிலேயே சுக்கிர மேட்டுப் பக்கமாய் அந்த ரேகைக்கு இணையாக ஒரு ரேகை அமையுமானால், வாழ்க்கையின் தொடக்க காலத்திலிருந்தே வேறு ஒருவருடைய உதவி இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் இன்னொருவருக்குத் தத்துப்பிள்ளையாகவும் இருக்க வாய்ப்புண்டு.
வாழ்க்கை ரேகையின் முடிவில் இரண்டு கிளைகள் பிரிந்து முடிவது வாழ்வின் முடிவில் திருப்தியையும், மன அமைதியையும் குறிக்கிறது.
வாழ்க்கை ரேகையிலிருந்து ஒரு ரேகை புறப்பட்டுச் சந்திர மேட்டை நோக்கி வளைந்தால் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.
வாழ்க்கை ரேகையில் சிறு தீவுகள், முக்கோணங்கள் எதுவும் இருக்கக்கூடாது. ஏனெனில், இவையெல்லாமே அந்த நபரின் துரதிர்ஷ்டத்தைத் தான் குறிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக