ரமேஷ் என்பவர், தன் எழுத்துத் திறனை வெளிப்படுத்த கடற்கரைக்குச் செல்வது அவரது வழக்கமாக இருந்தது. கடற்கரையில் சில மணி நேரம் நடந்த பிறகு, கரையில் எழுதுவது அவரது பழக்கம்.
அதுபோல ஒரு நாள், கடலோரமாக உலாவிக் கொண்டிருக்கும் போது, தண்ணீருக்குள் ஒரு மனித உருவம் நடனமாடிக் கொண்டிருப்பது போல பார்த்தார். புன்சிரிப்புடன், வேகமாக நடக்க ஆரம்பித்தார்.
அருகில் சென்ற போது தான், அந்த உருவம் நடனமாடுபவர் அல்ல கடலோரத்திலிருந்து எதையோ எடுத்து, கடலுக்குள் தூக்கி எறிந்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் என்று உணர்ந்தார்.
அப்போது, அவர் அருகில் சென்று, காலை வணக்கம்! நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? என்று ரமேஷ் கேட்டார்.
அதற்கு அந்த மனிதன், சிறிது தயக்கத்துடன், உடுமீன்களை கடலுக்குள் தூக்கி எறிந்து கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தார்.
ஆச்சரியத்துடன், ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? என்று வினவினார்.
உடனே அவர், சூரியன் உதித்து, அலைகளெல்லாம் மறைந்து கொண்டிருக்கும் சமயம், இந்த உடுமீன்களை கடலுக்குள் போடாவிட்டால், அவை இறந்து விடும்! என்று பதிலளித்தார்.
அதற்கு ரமேஷ், பல மைல்கள் தூரம் இருக்கும் இந்த கடலில், இதை செய்வதால் எந்த விதமான மாற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடியும்? என்று வினவினார்.
இந்த கேள்வியை கேட்டவுடன், இன்னொரு உடுமீனை கடலுக்குள் தூக்கி எறிந்து விட்டு, கடலில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும் இந்த உடுமீனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் அல்லவா? என்று மிக அழகாக பதிலளித்தார்.
தத்துவம் :
குறைந்தபட்சம், ஒரு மனிதனின் வாழ்க்கையிலாவது மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அன்பான செயல், ஆறுதலான சில வார்த்தைகள் என்று நம் எண்ணங்களை திசைத் திருப்பி செயல்பட்டால், மற்றவர்களின் வாழ்க்கையில் புத்துணர்ச்சியையும், இன்பத்தையும் ஏற்படுத்தலாம். நல்ல எண்ணங்களை மேம்படுத்திக் கொண்டு, பயனுள்ள வாழ்க்கையை வாழ்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக