இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் காஞ்சிபுரம். முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில், பல கோவில்கள் உள்ளன. ஆயிரம் கோவில்களின் நகரமான காஞ்சியில், வரதராஜபெருமாள் கோவில் முக்கியமான ஒன்று.
மூலவர் : வரதராஜ பெருமாள் (தேவராஜர்).
அம்மன்ஃதாயார் : பெருந்தேவி தாயார்
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
புராண பெயர் : அந்தகிரி, திருக்கச்சி
விமானம் : புண்ணியகோட்டி விமானம்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
தல வரலாறு :
இங்கு உள்ள அத்தி வரதர் என்னும் பெருமாளை, நாம் 40 வருடத்திற்கு ஒரு முறை தான் தரிசிக்க முடியும். ஏனெனில் அவர் இருப்பதோ, நம் கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில். கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களின் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறார் அத்தி வரத பெருமாள். இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவதில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் திருமேனி (மரத்தினால் செய்யப்பட்டது), மிகப்பெரிய அத்தி மரத்தில் வடித்து, பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரம்மா, தன்மனம் பரிசுத்தமாவதற்காக காஞ்சியில் யாகம் செய்தார். அச்சமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விட்டுவிட்டு மற்ற இரு மனைவியராகிய சாவித்ரி மற்றும் காயத்ரி ஆகியோருடன் இணைந்து யாகம் செய்யத் தொடங்கினர். அந்த யாகத்தை அழிப்பதற்காக சரஸ்வதி, வேகவதி ஆறாய் மாறினாள். அந்த சமயம் பிரம்மாவின் வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு, பிறந்த ஆற்றின் குறுக்கே சயனித்து கொண்டார். பிரம்மாவின் யாகம் முடிந்தவுடன் யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார். பின்பு பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலையை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார். வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர் வரதராஜர் என்று பெயர் பெற்றார். வரதராஜ பெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்று பெயர்.
தலச்சிறப்பு :
பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை அனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் அத்தி வரதர், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார். வசந்த மண்டபத்தில் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைப்பார்கள். நின்ற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார். வைணவ மதம் வளர்க்கப்பட்ட தலம் என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.
இத்திருக்கோவிலினுள் இருக்கும் சந்நிதிகள் :
அழகிய சிங்கர் சந்நிதி, சக்கரதாழ்வார் சந்நிதி, தன்வந்திரி சந்நிதி, வலம்புரி விநாயகர் சந்நிதி, திருவனந்தாழ்வார் சந்நிதி, கருமாணிக்க வரதர் சந்நிதி, மலையாள நாச்சியார் சந்நிதி ஆகியச் சந்நிதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
திருவிழா :
பிரம்மோற்சவம் - வைகாசி 10 நாட்கள் - பௌர்ணமி விசாக நட்சத்திரத்தன்று நடைபெறும், நவராத்திரி - புரட்டாசி 10 நாட்கள் திருவிழா, வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்கள் நடைபெறும்.
நடைதிறப்பு :
காலை 7.30 மணி முதல் 12.30 வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக