சுவேதன் தன்னுடைய வாழ்நாளில் உள்ள எஞ்சிய காலங்களை சிவபெருமானின் திருவடிகளை எண்ணியவாறே இருக்க வேண்டும் என எண்ணினார். எனவே, மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனத்தை கண்டார். அங்கு மக்களின் நடமாட்டத்தை காட்டிலும் கொடிய மிருகங்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதை உணர்ந்தார்.
பின்பு இந்த வனமே தனக்கான வனம் என முடிவு செய்து அந்த வனத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். பின்னர் அந்த லிங்கத்தை வழிபட்டு பூஜித்து வருவதற்கே தன்னுடைய முழு காலத்தையும் செலவிட்டு வந்தார்.
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து அருகில் உள்ள நதிக்குச் சென்று தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டும், எம்பெருமானை அலங்கரிப்பதற்காக பலவிதமான மலர்களை பறித்து கொண்டும் வந்தார்.
பின் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக நீரை எடுத்து வந்து, அந்த நீரால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து அம்மலர்களால் அலங்காரம் செய்து சிவபெருமானை மனதார வணங்கி வந்தார்.
பின்பு சிவலிங்கத்தின் முன்பு அமர்ந்து ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டே தியான நிலையில் இருந்தார். நாட்கள் செல்ல செல்ல சுவேதன் உட்கொள்ளும் கனிகள் மற்றும் கிழங்குகள் போன்றவை குறையத் தொடங்கின.
வனத்தில் இருந்த பல கொடிய மிருகங்கள் சுவேதன் அருகில் வந்தாலும் அவர் கொண்டிருந்த தியான நிலைக்கு எவ்வித இடையூறும் செய்யாமல், அவரை துன்புறுத்தாமல் சாதாரணமாக அவருடைய அருகில் வந்து விளையாடிச் சென்றன.
காலங்கள் யாவும் வேகமாக உருண்டோடின. சுவேதன் தன்னுடைய இறுதி காலத்தை அடையும் நிலைக்கு வந்தார். எனவே, சுவேதனின் உயிரை பறித்துச்செல்ல தர்ம ராஜாவான எமன் தன்னுடைய வாகனமான எருமையின் மீது அமர்ந்து தனது கரங்களில் பாசக்கயிற்றினை ஏந்தியவாறு சுவேதன் இருக்கும் வனத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
தர்ம ராஜாவான எமனை கண்டதும் காட்டில் இருந்த உயிரினங்கள் யாவும் எவ்விதமான சத்தமும் இன்றி அமைதியுடன் இருந்தது. எனவே, வனத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஒருவிதமான அமைதி உண்டானது. பார்க்கவே பயம் கொள்ளும் விதத்தில் சிவந்த நிறமுடைய கண்களை கொண்ட எமதர்மராஜன், சுவேதன் முன்பு வந்து நின்றார்.
அவ்வேளையில் சிவபெருமானை நினைத்து தியானத்தில் இருந்து சுவேதன் கண் விழித்து பார்த்தார். அவரின் எதிரில் உயிரை பறித்துக்கொண்டு செல்வதற்காக வந்த எமபுரியின் அரசனான எமதர்மராஜன் இருந்தார். சிவபக்தனான சுவேதன் கண்களுக்கு மட்டும் புலப்பட்ட எமதர்மராஜனின் உருவத்தை கண்டதும் அவரைக் கண்டு பயம் கொள்ளாமல் புன்முறுவலோடு சிரித்தார் சுவேதன்.
தன்னைக் கண்டாலே இந்த அண்ட சராச்சரத்தில் உள்ள அனைவரும் பயம் கொள்வார்கள். ஆனால், இந்த மனிதரோ தன்னைக் கண்டதும் பயம் கொள்ளாமல் சிரிக்கின்றான் என்று எமனுக்கு எண்ணிலடங்கா வண்ணம் கோபம் உண்டாயிற்று.
அட, மானிடப் பிறவியே!! நான் யாரென்று தெரியாமல் என்னைக் கண்டதும் சிரிக்கிறாயா? நான் யாரென்று தெரிந்தால் உன்னுடைய இந்த சிரிப்பு இப்பொழுதே அகன்று ஒருவிதமான பயம் உண்டாகும் என்று கூறி, நான் தான் உனது உயிரை பறிக்க வந்த எமதர்மராஜன் என்று கோபமாக கூறினார்.
எமதர்மராஜாவின் கூற்றுகளை கேட்டதும் அமைதியாக சிரித்து வந்த சுவேதன் உரக்கச் சிரித்தார். பின்பு எமதர்மராஜனை நோக்கி, நான் சிவபெருமானை தவிர வேறு எவரிடத்திலும் பயம் கொள்ளமாட்டேன் என்றும், அது எமதர்மராஜாவாக இருந்தாலும் எனக்கு பயம் என்பது இல்லை என்றும், சிவபெருமானின் அருள் என்னிடம் இருக்கும் வரை உன்னால் என்னை என்ன செய்ய முடியும்? எனக் கேட்டார்.
சுவேதனின் பேச்சைக் கேட்டதும் பற்களை கடித்துக் கொண்டு மிகுந்த கோபத்தோடும், ஆவேசத்தோடும் கர்ஜித்த எமதர்மராஜன், மரணத்தின் விளிம்பில் இருக்கும் சாதாரண மானிடப் பிறவியான உனக்கு இவ்வளவு அகங்காரமா? இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார் என கர்ஜித்தப்படி கரங்களில் இருந்த பாசக்கயிற்றை சுவேதன் மேல் வீசினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக