தாங்கள் அனுப்பிய புலியை பிச்சாண்டர் கொன்றதை அறிந்த முனிவர்கள் இம்முறை ஆக்ரோஷம் அல்லாத மென்மைத்தன்மை உடைய மானை உருவாக்கி அதில் அசுர குணத்தை நிறுத்தி பிச்சாண்டரை நோக்கி ஏவினார்கள்.
தன்னை நோக்கி வரும் இளகிய உருவம் கொண்ட ஆனால், அசுர குணத்தோடு வந்த மானை எம்பெருமான் மழுவாக(ஆயுதமாக) தரித்துக் கொண்டார். பின்பு தாருகா முனிவர்கள் கடும் விஷம் கொண்ட பாம்பினை ஏவினார்கள். அதை தம் அணிகலன்களாக அணிவித்துக் கொண்டார் சிவபெருமான்.
மீண்டும் முனிவர்கள், பல சக்திகளை உள்ளடக்கிய காண்போரை பயம் கொள்ளக்கூடிய அகோர வடிவம் கொண்ட பூதம் மற்றும் பேய்களை பிச்சாண்டரை கொன்று வர அனுப்பினார்கள். ஆனால், அவைகள் அனைத்தும் எம்பெருமானை கண்ட மாத்திரத்தில் அவற்றிடமிருந்த தீய தன்மைகள் யாவும் விலகி சிவபெருமானின் படைகளில் ஒன்றாக மாறின.
பல தீய செயல்களை செய்விக்கக்கூடிய பல மந்திரங்களை எம்பெருமானை அழித்து வர அனுப்பினார்கள் தாருகா வனத்து முனிவர்கள். அவை யாவற்றையும் சிலம்பாக மாற்றி தமது காலில் அணிந்து கொண்டார் சிவபெருமான்.
இவ்விதம் தாங்கள் அனுப்பியவற்றை அழித்த அந்த பிச்சாண்டரின் பலத்தை முற்றிலும் அழிக்கும் விதத்தில் யாகத்தில் இருந்து மிகப்பெரிய தீ சுவாலைகளுடன் கூடிய அனலையும், அதனைத் தொடர்ந்து தாங்கள் கற்றுணர்ந்த வேதங்கள் மற்றும் ஞானம் யாவற்றையும் முழுவதுமாக பயன்படுத்தி முயலகன் என்ற அரக்கனை உருவாக்கி அவனை பிச்சாண்டரை கொல்ல ஏவினார்கள் தாருகா வனத்து முனிவர்கள்.
தன்னை நோக்கி வந்த தீ சுவாலைகளை கையில் ஏந்திய வண்ணம் அங்கு வந்த முயலகனை தனது காலடியில் கிடத்தினார் சிவபெருமான். முயலகனை அவருடைய பாதத்தில் கிடத்தியபோது தாருகா வனத்து முனிவர்களின் மனதில் தாங்கள் தான் உயர்ந்தவன் என்ற கர்வம் நீங்கியது. ஏனெனில் தங்களை மிஞ்சிய சக்தி கொண்டவர் இறைவன் என்பதை அவர்கள் உணர்ந்தனர். பின்பு தாங்கள் செய்த செயலை மன்னித்து எங்களை காக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.
அவ்வேளையில் அருகில் இருந்த நந்திதேவர் மத்தளம் உடுக்கையை கொண்டு இன்னிசை எழுப்ப, மோகினி உருவம் தரித்த திருமால் அங்கு புல்லாங்குழல் வாசிக்க, எம்பெருமான் அங்கே ஆனந்த தாண்டவம் ஆடினார். அதைக்கண்ட தாருகா வனத்து முனிவர்களும், காணக்கிடைக்காத இந்த தாண்டவத்தை கண்ட திருமாலும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். எம்பெருமானும் அவர்களின் பிழையை மன்னித்து ஆசி கூறினார்.
பின்பு தாருகா வனத்து முனிவர்கள் அனைவரும் தமது தவறினை உணர்ந்து நிகழ்ந்த யாவற்றையும் தங்களது துணைவியிடம் பகிர்ந்து சிவபெருமானை மனம் உருகி வழிபட்டு வந்தனர்.
முனிவர்கள் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பக்தியோடு அனுதினமும் மலர்கள் தூவி பஞ்சாட்சர மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் வழிபாட்டினாலும், தவத்தினாலும் மகிழ்ந்த எம்பெருமான் அவர்கள் முன் தோன்றினார். முனிவர்களே!! உங்களது தவத்தால் மனம் மகிழ்ந்தோம், வேண்டும் வரத்தினை கேட்பீர்களாக என்று கூறினார்.
முனிவர்கள் அனைவரும் எம்பெருமானை வணங்கி அவரிடம் என்றும் தங்களின் திருநாமத்தையே உச்சரித்து செருக்கில்லாமல் இருக்க வேண்டும் என்றும், தாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்றும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று அவர்கள் வணங்கி வந்த லிங்கத்திலேயே நாகேசர் என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாவித்தார்.
சொல்லுவதற்கு அரிய பல நற்பண்புகளை உடைய சுவேதன் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார். சாஸ்திரங்கள் கூறும் தர்ம நெறிப்படி, எவருக்கும் தீங்கு இழைக்காமல் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். சுவேதன் சிறு வயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பற்று கொண்டு சிவபக்தனாகவும், எங்கும் எதிலும் பரம்பொருளான சிவபெருமான் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தார். அவர் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியால் நாட்டில் உள்ள அனைத்து பெரியோர்களும் அவரிடம் மிகவும் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து கொண்டார்கள்.
சுவேதன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எம்பெருமானை பற்றிய கீர்த்திகளையும், பாடல்களையும் பாடி வந்தார். ஆதி என்று இருக்கும் போது அந்தம் என்பது இருப்பது போல சுவேதன் தன்னுடைய வாழ்நாளின் இறுதிக்கட்ட நிலையில் இருப்பதை உணர்ந்தார். தன்னுடைய வாழ்நாளில் இறுதி நாட்களை கண்ட சுவேதன் சிவபெருமானின் மீது கொண்ட பற்றும், அவருக்கான பூஜையும் எப்பொழுதும் செய்வதைக்காட்டிலும் மிகுதியாக செய்யத் தொடங்கினார்.
தன் இறப்பின் பின் தன்னுடன் வராத உலக பந்தங்களையும், அழிந்து போகக்கூடிய செல்வங்களிலும் அவருக்கு மனம் செல்லவில்லை. மேலும், அதனை எல்லாம் வெறுத்து ஒதுக்கி தன் இறப்பின் பின் தன்னுடன் வரும் பக்தியை மட்டுமே மனதில் நிலையாக கொண்டு தன்னுடைய வாழ்நாளில் உள்ள எஞ்சிய காலங்களை சிவபெருமானின் திருவடிகளை எண்ணியவாறே இருக்க வேண்டும் என எண்ணினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக