இந்த வனத்திற்கு கடவுளான நம்மிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் நம்முடைய வனத்திற்கு வந்து யாசகம் கேட்பது போல் நாடகமாடி, இந்த உலகத்திலேயே கற்பில் சிறந்த தம் பத்தினியை மோக வசத்தால் கவர்ந்திழுத்த அந்த பிச்சாண்டனை இந்த வனத்தின் கடவுளாகிய நாம் தண்டித்தே ஆக வேண்டும். அவன் எங்கே இருப்பினும் அவனை கண்டறிந்து நம்முடைய யாக பலத்தால் அவனை தண்டிக்க வேண்டும் எனக்கூறி ஒரு பெரிய யாகச்சாலையை முனிவர்கள் நிறுவினர்.
அவ்வேளையில் சிவபெருமான் திருமாலை எண்ணவே திருமால் அங்கு உதயமானார். தன்னுடைய திருவிளையாடலில் திருமாலையும் இணைத்து அவரை அழகிய பெண் உருவம் அதாவது மோகினி உருவம்(திருமாலின் அவதாரம்) தரித்து தாருகா வனத்தின் கடவுளாக தங்களை எண்ணி கர்வத்தில் இருக்கும் முனிவர்களை மயக்கி அவர்கள் நிலையை அறியச் செய்வீராக என்று கூறினார். எம்பெருமானின் கூற்றுப்படியே திருமாலும் தாருகா வனத்திற்கு மோகினி உருவம் தரித்துச் சென்றார்.
முனிவர்களிடம் எதையும் உரைக்காமல் அவரவர் பத்தினிகள் தங்களின் இல்லங்களை நோக்கி சென்றனர். முனிவர்கள் அனைவரும் யாகச்சாலையை நிறுவி தத்தமது நிலைகளில் இருந்து மந்திரங்கள் யாவற்றையும் சொல்ல தொடங்கினார்கள்.
அவ்வேளையில் இதுவரை அவர்கள் காணாத அழகிய உருவமும், காண்போரை மதி இழக்கச் செய்யும் தோற்றமும் கொண்ட தேவலோகத்தில் இருந்த சுந்தரிகளை போன்ற எழில் தோற்றம் கொண்ட பெண்ணொருத்தி செவிகளை கவரும் பாடல்களை பாடியப்படி அவர்கள் வேள்வி தொடங்கிய நேரத்தில் அங்கு சென்றார்.
அந்த கன்னிகையின் அழகிலும், அவள் பாடிய அதாவது இதுவரை தங்களுடைய செவியானது உணராத இந்த வகையிலான இன்னிசையை கேட்ட முனிவர்கள் யாவரும் அவளை காண வேண்டும் என்ற எண்ணத்தால் தங்களின் எண்ணங்களை மறந்து அவள் பின்னே ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டே சென்றனர்.
nடிளி;முனி பத்தினிகளோ தங்களுக்கு என்னவாயிற்று இதுவரை தாம் காப்பாற்றி வந்த கற்பு நெறிமுறைகள் எங்கே? அந்த பிச்சாண்டனை கண்டதும் தங்கள் நிலையானது இவ்விதம் மாறிவிட்டதே என எண்ணும் தருவாயில் தனது கணவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டே ஒரு பெண்ணை பின் தொடர்ந்து செல்வதை அறிந்தனர்.
தனது கணவர்களை அழைத்து அவர்களை அந்த மோகினியின் பிடியில் இருந்து காக்க எண்ணி அவர்கள் சொல்லும் திசையை நோக்கி செல்லத் தொடங்கியவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஏனென்றால் மோகினியானவள் இவர்களை நோக்கி முனிவர்களை அழைத்து வந்துக் கொண்டிருந்தார். நடப்பவை யாதும் புரியாமல் இருக்க தனது கணவர்களை நெருங்க முற்படுகையில் மோகினியானவள் மறைந்து சென்றார். மோகினி மறைந்ததும் தங்களது சுயநினைவிற்கு வந்த முனிவர்கள் தங்களது மனைவியின் முன்பே அலங்கோல வடிவத்தில் ஒரு சுந்தரியை பின்தொடர்ந்து தன் நிலையை அறியாது செய்ததை எண்ணி என்ன செய்வது? என்று புரியாமல் இருந்தனர்.
இந்த வனத்திற்கு கடவுளாக திகழும் தாங்களே தன்னிலையில் இருந்து நழுவும் வகை தோற்றம் கொண்டு எங்கள் முன்னே எங்கள் பத்தினிகளை மோகம் செய்து பின் தொடரச் செய்தும், பின்பு தவ முனிவர்களான எங்களையும் பெண் மோகம் கொள்ளச் செய்த அந்த பிச்சாண்டனை வதம் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணமும், கோபமும் எண்ணிலடங்கா வண்ணம் தோன்றின.
பின்பு அவர்கள் அதே ஆக்ரோஷத்தோடும், சினத்தோடும் யாகச்சாலைக்கு வந்தனர். தாருகா வனத்து முனிவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு மாபெரும் வேள்வி ஒன்றினை நடத்தி தன்னிடம் உள்ள மந்திர வார்த்தைகள் அனைத்தையும் பயன்படுத்தி அவனைக் கொல்வதற்கென்றே ஒரு மாபெரும் புலியை உருவாக்கி அதை எம்பெருமானான பிச்சாண்டேஸ்வரரை நோக்கி ஏவினார்கள்.
எதையும் உணராமல், யார் அந்த வனத்திற்கு வந்திருக்கின்றார் என்பதையும் அறியாத முனிவர்களின் அறியாமையையும், தான் தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் இவர்கள் புரியும் செயல்களை கண்டு சினம் கொள்ளாத கருணைக் கடலான எம்பெருமான் குரோதத்தின் விளைவால் எவருக்கும் கட்டுப்படாத மிகுந்த ஆக்ரோஷமாக வந்த புலியை வதம் செய்து அதன் தோலை உடுத்திக் கொண்டார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக