புதன், 12 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 87


  முனி பத்தினிகள் அனைவரின் மனநிலையையும் அறிந்த சிவபெருமான் சில பாடல்களை பாடிய பின்பு பாடுவதை நிறுத்திவிட்டார். நான் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக்கூறி சிறிது தூரம் சென்றார். ஆனால், அவருடைய பாடலில் சுய நினைவை இழந்த முனி பத்தினிகள் அவரை பாடல்களை பாடுமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தி பின் தொடர்ந்து சென்றனர்.

சிவபெருமானோ அவர்கள் அனைவரையும் தன்னை பின் தொடரச் செய்து அவர்களது கணவர்கள் தவம் புரியும் இடத்திற்கு சுய நினைவில் இல்லாத அவர்களது பத்தினிகளை அழைத்துச் சென்றார். ஒரு தருணத்தில் எம்பெருமானின் பாடல்களில் தன் முழு மதியையும் இழந்து மயங்கிய முனி பத்தினிகள் அனைவரும் எம்பெருமானை பின் தொடர்ந்து சென்று தங்கள் நிலையினை உணராது அவரை தழுவ அனைத்து பெண்களும் முயன்றனர்.

அவர்களது அனைவரின் முயற்சிக்கும் அகப்படாத சிவபெருமான் அவர்கள் அனைவரையும் அந்நிலையிலேயே அழைத்துச் சென்றார். தவச் சாலையின் அருகில் ஒரே கூச்சலும், சத்தமுமாக இருந்தது.

அதனால், முனிவர்கள் தவ நிலையை விட்டு கலைந்து கண் விழித்து பார்த்தனர். அப்போது முனிவர்களுக்கு கடுங்கோபம் உண்டாயிற்று.

தன்னுடைய துணைவியர்கள் யாரோ ஒரு யாசகம் கேட்க வந்த பிச்சைக்காரனின் பாடலில் மயங்கி அவர்களின் சுய நினைவினை இழந்து அலங்கோலத்தில் அவனை பின் தொடர்ந்து வருவதா? என்று தங்களது மனைவிகளை தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சியில் எவ்விதமான பயனும் இல்லை. முனிவர்களுடைய பத்தினிகள் அனைவரும் தன் பதியானவரை மறந்து அவர் பின்னே சென்று கொண்டே இருந்தனர். இதைப் பார்த்ததும் அவர்களின் கோபம் எண்ணில் அடங்கா வண்ணம் உயர்ந்தது.

முனிவர்களில் ஒரு முனிவர், அந்த காமுகன் நமது பத்தினியர் அனைவரையும் அவர்களின் மனதை கலைத்து தன் வயப்படுத்திக் கொண்டான். இவனை இவ்வாறு விட்டால் அநர்த்தம் ஆகி விடும் என்று கூறி சிவபெருமானான பிட்சாடன மூர்த்தியை வழிமறித்து அவரை பலவாறு நித்தித்துக் கொண்டிருந்தார்.

இவர்களது பேச்சுகளை செவி கொடுத்து கேட்காத எம்பெருமான் அவரது பாதையை நோக்கி பயணிக்க தொடங்கினார். அவரை பின் தொடர்ந்து சென்ற முனிவர்களின் பத்தினிகள் தன்னுடைய கணவர்கள் பிடித்து நிறுத்தியும், அங்கு நிற்காமல் அவர்களை உதறி தள்ளிவிட்டு சிவபெருமானை பின் தொடர்ந்தே சென்றனர்.

தனது பத்தினிகளின் இந்த நிலைக்கு காரணமாக இருக்கும் பிட்சாண்ட கோலத்தில் வந்திருந்த சிவபெருமானை அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை பலவாறாக சபித்தனர். ஆனால், அவர்களது இந்த சாபம் எம்பெருமானை ஒன்றும் செய்யாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ஏனெனில், தேவர்களின் அரசனான இந்திரன், ஒரு அந்தணர்கள் இட்ட சாபத்தால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டான். நகுஷன் அந்தணன் இட்ட சாபத்தால் பாம்பாக மாறினான். ஏன் திருமாலே அந்தணன் இட்ட சாபத்தால் பாதிக்கப்பட்ட போது இந்தத் திகம்பரன் தாங்கள் இட்ட சாபத்தால் எவ்விதமான பாதிப்பும், சலனமும் இன்றி இருப்பதைக் கண்ட முனிவர்கள் தங்கள் முன்னே பிட்சாண்ட வேடத்தில் இருப்பவன் சாதாரணமாக புலப்படவில்லை என எண்ணி திகைத்து நின்றனர்.

அப்பொழுது, எம்பெருமான் அவ்விடத்தை விட்டு திடீரென மறைந்து கைலாய மலைக்குச் சென்றார். அவர் அவ்விடத்தை விட்டு சென்றதும் முனி பத்தினிகள் அனைவரும் தங்களது சுய நினைவிற்கு வந்தனர். எதிரில் தங்களின் கணவர்கள் மிகுந்த சினத்துடனும், அலங்கோலமாக தாங்கள் இருப்பதையும் அறிந்து சீர் செய்து கொண்டு தங்களது கணவர்களிடம் நடந்தவை யாதென கேட்க முற்படுகையில் அவர்களின் சினத்தினை கண்டு நெருங்காமல், என்ன செய்வது என்று புரியாமல் மனதில் ஒருவிதமான பதற்றத்துடன் நின்றனர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்