பல்வேறு
அதிசயங்கள் நிறைந்த சிவ ஆலயங்களைப் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட அதிசயமும்,
சிறப்பம்சமும் வாய்ந்த ஆலயமாக புதுக்கோட்டையில் வேப்பம்பட்டி அமைந்துள்ள நெய்
நந்தீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. இந்த நந்தியின் கதை மற்றும் அதன் நெய் அபிஷேக
அதிசயம் குறித்து விரிவாக பார்ப்போம்...
நெய் நந்தீஸ்வரர் கோயில் விபரம்
கோயில் விபரம்
மூலவர்:சொக்கலிங்கேஸ்வரர் சுவாமி
அம்மன் - மீனாட்சி அம்மன்
தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.
இந்த கோயில் புதுக்கோட்டை மாவட்டம்
வேந்தன் பட்டியில் அமைந்துள்ளது.
நெய் நந்தீஸ்வரர்:
தஞ்சாவூரில் மிகப்பெரிதாக நந்தி
அமைந்து பக்தர்களை கவர்ந்தது போல, இங்குள்ள நெய் நந்தியும் அனைவரையும் கவர்ந்து
வருகிறார்.
கோயில் அமைந்துள்ள வேப்பம்பட்டியில்
ஒரு சிவ பக்தர் சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். ஆனால் நந்தீஸ்வரரை
பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார்.
நந்தியின் புனிதம் கருதி அதை தீர்த்த
குளத்திற்குள் வைத்து விட்டார். ஒருநாள் அவருக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டது.
அப்போது மானசீகமாக சிவனை வேண்டிக்கொண்டார். தொடர்ந்து அவரின் கனவில் மாடுகள்
விரட்டுவது போல காட்சிகள் கண்டு திடுக்கிட்டார்.
உடனே நந்தியை பிரதிஷ்டை செய்வதாகவும்,
அதற்கு நெய் அபிஷேகம் செய்வதாகவும் வேண்டிக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்த சில
நாட்களிலேயே அந்த பக்தரின் உடல் பிணி தீர்ந்தது. அவர் நெய் அபிஷேகம் செய்து
வழிபட்டது போல பலரும் நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
தல சிறப்பு
இங்குள்ள நந்தி, நெய் நந்தீஸ்வரர்
என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். பொதுவாக நம் வீட்டில் அல்லது வெளியில் சிறிதளவு
நெய் கொட்டினாலும் எறும்பு, ஈக்கள் குவிந்துவிடும். ஆனால் இந்த நந்தீஸ்வரருக்கு
நெய் அபிஷேகம் செய்யப்படும் நெய் மீது ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை.
இதற்கு நந்தியின் கொம்புகளுக்கு இடையே
ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாக அமைந்த அமைப்பாக உள்ளது. இந்த சக்கரம் ஆதார
சக்தியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக தான் நந்தி மீது அபிஷேகம் செய்யப்படும் நெய்
மீது ஈயும், எறும்பும் மொய்ப்பதில்லை.
இந்த பகுதியில் சுமார் 90 வருடங்களாக
ஒரு வேப்ப மரம் உள்ளது. இந்த வேப்ப மரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக
தோன்றியுள்ளார். இதன் காரணமாக இதற்கு வேப்பமரத்து நந்தி என பெயரிட்டு வழிபட்டு
வருகின்றனர்.
நெய் கிணறு
ஒரு முறை நந்திக்கு அபிஷேகம்
செய்யப்பட்ட நெய் எடுத்து தீபம் ஏற்றினர். ஆனால் சில நிமிடங்களில் அந்த நெய்
ரத்தம் போல சிவப்பாக மாறியது. இதன் காரணத்தால் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும்
நெய் வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை. அதனை கோயில் வளாகத்திற்குள் இருக்கும்
கிணற்றில் கொட்டி விடுகின்றனர். இதன் காரனமாக அந்த கிணறு தற்போது நெய் நிறைந்த
நிலையில் காட்சி தருகின்றது.
நெய் பல லிட்டர் கணக்கில் இருந்தும்
ஒரு ஈ, எறும்பு வராதது கலியுகத்தில் நாம் காணும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
ரிஷப ராசிக்கு உகந்த கோயில்
பொதுவாக ரிஷப ராசியை குறிக்க காளை
உருவம் பயன்படுத்தப்படுகிறது. நந்திக்கு ரிஷபம் என்ற பெயருண்டு. இதன் காரணமாக ரிஷப
ராசியினர் அவர்களின் ஜாதகத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ, கிரகப் பெயர்ச்சியால்
ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, அவர்கள் பரிகாரம் செய்ய சிறந்த தலமாக இந்த நெய்
நந்தீஸ்வரர் கோயில் பரிந்துரைக்கப்படுகிறது.
கால் நடைப் பண்ணை வைத்துள்ளவர்கள்,
பால், தயிர், வெண்ணெய் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக இந்த
கோயிலில் வந்து வழிபட்டு செல்கின்றனர். கால்நடைகளுக்கு ஏதேனும் உடல் நல பிரச்னை
ஏற்பட்டாலும் அவைகள் குணமாக இங்குவந்து நந்திக்கு நெய் அபிஷேகம் செய்து, அந்த நெய்
தீர்த்தமாகப் பெற்று சென்று அவற்றுக்கு புகட்டுகின்றனர்.
திருவிழாக்கள்
அதுமட்டுமல்லாமல் இந்த கோயிலில்
வணங்கி முதலில் பசுக்களை வாங்குவோர், அந்த பசு மாடு சுரக்கும் முதல் பால் மற்றும்
முதலில் உருவாகிய நெய் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
பலரும் ஜல்லிக்கட்டில் தங்களின்
காளைகள் வெற்றி பெற வேண்டும் என வேண்டி கொள்ளும் வழக்கமும் உள்ளது
இந்த கோயிலில் மகா சிவராத்திரி,
ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம்,
நவராத்திரி, கார்த்திகை, சோம வாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட
தினங்களில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக