இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள் தான். ஆனால் இணக்கமான அண்டை நாடுகள் கிடையாது என்பதை தனியாகச் சொல்ல வேண்டுமா..?
1960-களில், இந்தியா சீனாவுக்கு இடையில் நடந்த போர்களே, இரு நாடுகளுக்கு இடையில் இருக்கும் உறவு முறைக்கு ரத்த சாட்சி.
இந்த பழைய பிரச்சனைகள் எல்லாம் போக, இந்தியாவின் காஷ்மீர் பகுதியின் அக்ஷய் சின் பிரச்சனை, டோக்லம் எல்லை பிரச்சனைகள் என இந்தியா சீனாவுக்கு இடையில் புதிய பிரச்சனைகளும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. அதில் சமீபத்தைய பிரச்சனை முதலீடுகள்.
முதலீடுகள்
சீனா போன்ற அண்டை நாடுகள், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என, கடந்த வாரம், இந்தியா சொன்ன விவகாரம், மீண்டும் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை வேறு லெவலுக்கு கொண்டு வந்திருக்கின்றன. இந்த நேரத்தில் சீனா ஒரு மாஸ்டர் பிளாணை சத்தம் இல்லாமல் செயல்படுத்தி வருகிறது.
நடு நாயகம் இந்தியா
இந்த சீனாவின் பிரம்மாண்ட திட்டத்தில் நடு நாயகமாக இருக்கும் நாடு தான் இந்தியா. இந்த திட்டத்தில் எகிப்து, அரேபிய நாடுகள், பெர்ஷிய பகுதிகள் என பல நாடுகளையும் உள்ளடக்கி இருக்கிறது சில்க் ரோட் திட்டம். இதை Belt & Road Initiative என்றும் சொல்வார்கள். இந்த திட்டத்தை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சில்க் ரோட் திட்டம் ஒரு பக்கம் இருக்க, இந்திய கம்பெனிகளை வளைக்கத் தொடங்கி இருக்கிறது சீனா.
இந்திய யுனிகார்ன் கம்பெனிகள்
இந்தியாவின் டாப் 30 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் (1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட கம்பெனிகள்) 18 கம்பெனிகளுக்கு, ஃபண்டிங் சீனாவில் இருந்து தான் வருகிறதாம். இப்படி இந்திய கம்பெனிகளை மறைமுகமாக சீனா வளைத்துப் போட்டு, சத்தம் காட்டாமல் வேலை பார்த்து வருகிறது. அவ்வளவு ஏன் சீனா, கொரோனாவைக் கூட விட்டு வைக்கவில்லை. இதையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, தன்னை வலுப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
உதவிகள்
தெற்கு ஆசிய நாடுகளிலும், கொரோனா வைரஸ் தாறுமாறாக பரவிக் கொண்டு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த தெற்கு ஆசிய நாடுகளுக்கு உதவுவதாகச் சொல்லி, சீனா தன் கரங்களை நீட்டத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு கரம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது.
உதவிகள் பட்டியல்
ஏற்கனவே கொவிட்-19 சோதனை கிட்கள், மாஸ்குகள், பாதுகாப்பு சாதனங்கள் என இந்தியாவின் அண்டை நாடுகளாக இருக்கும் நேபாளம், இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலத் தீவுகள் என வளைத்து வளைத்து உதவி செய்து வருகிறது சீனா. இவை எல்லாம் இந்தியாவின் அண்டை நாடுகள் என்பதை வேறு சொல்ல வேண்டுமா என்ன?
இந்தியா
இந்தியாவுக்கும் இந்த டெக்னிக் எல்லாம் தெரியாதா என்ன..? இந்தியாவும் தன் அண்டை நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை எல்லாம் அனுப்பி வைத்தது. மருத்துவ குழுக்களை அனுப்பியது. அவ்வளவு ஏன் மற்ற அண்டை நாட்டு மருத்துவர்களுக்கு பெரும் தொற்று நோய் பற்றி பாடம் எல்லாம் நடத்தினார்கள். ஆனால் சீனா இதை எல்லாம் விட இன்னொரு விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறது. கடன்...!
சீனாவின் கடன் வலை
சீனா, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு பலமாக கடன் கொடுத்து, அண்டை நாடுகளையே வளைத்துப் போட்டுக் கொண்டு இருக்கிறது. உதாரணமாக, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க, இலங்கைக்கு 500 மில்லியன் டாலருக்கு சலுகை கடன் வழங்கி இருக்கிறது. இப்படி வங்க தேசம், நேபாளம் போன்ற நாடுகளுக்கு கடன் வழங்கி இருக்கிறதாம்.
கடனுக்கு விலை கொடுக்கும் இலங்கை
இலங்கையில் இருக்கும் Hambantota துறை முகத்தை ஒரு சீன நிறுவனம் தான் கட்டிக் கொடுத்தது. அதற்கு நிறைய கடன் வாங்கி இருக்கிறது இலங்கை. இப்போது 99 ஆண்டுகளுக்கு Hambantota துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விட இருக்கிறதாம். இப்படித் தான் நாடுகளை கடனில் தள்ளி தன்னை வலுப்படுத்திக் கொண்டு இருக்கிறது சீனா.
கடனில் மூழ்கும் மாலத் தீவுகள்
இதே போல, இந்தியப் பெருங்கடலில் ஒரு குட்டி தேசமான மாலத் தீவுக்கு சுமார் 3 பில்லியன் டாலர் கடன் கொடுத்து இருக்கிறது சீனா. கடந்த சில வருடங்களில் மாலத் தீவுகள் அரசு, சீனாவின் அரசு நிறுவனங்களுக்கு சில கட்டுமானத் திட்டங்களைக் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தரப்பு
நம் இந்தியா, எப்போதுமே சீனா போல பணத்தை அள்ளி இறைக்க முடியாது என டெல்லி அதிகாரிகள் வட்டத்திலேயே சொல்லி இருப்பதாக டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதே போல, சீனா இப்படி இந்தியாவின் அண்டை நாடுகளை கடன் வலையில் வீழ்த்திவிட்டால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கலாகவே இருக்கும் எனவும் அந்த செய்தியில் சொல்லப்பட்டு இருக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக