பேஸ்புக்கில் தவறான பதிவுகளை லைக், கமெண்ட், ஷேர் செய்பவர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் கொரோனா குறித்த தகவல் மற்றும் விழிப்புணர்வுகள் உள்ளிட்டவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உள்ளன. அதே நேரத்தில் தொடர் வதந்திகளும் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற பொய்யான தகவல் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், கொரோனா குறித்த பொய்யான தகவல்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனாவை குறித்து பரவும் வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கொரோனா தொடர்பான தவறான பதிவுகளை லைக், கமெண்ட், ஷேர் செய்பவர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்ப பேஸ்புக் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், பேஸ்புக் முற்றிலும் தவறான ஆபத்துகளை ஏற்படுத்தும் கொரோனா தொடர்பான பல்லாயிரக்கணக்கான பதிவுகளை நீக்கியுள்ளதாகவும், சந்தேகத்திற்குரிய மில்லியன் கணக்கான பதிவுகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுபோன்று தவறான தகவலை பரப்பினால் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக