கொரோனா பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் மத்திய பிரதேச காவல்துறையை சேர்ந்த பலர் சோர்வடைந்து விடுமுறைக்காக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் எழுதிய விடுமுறை விண்ணப்ப கடிதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மத்தியபிரதேசத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் ஒருவர் ஆறு நாள் விடுமுறைக்கு விண்ணப்பித்து எழுதிய கடிதத்தில் ஒரு காரணமாக தனது தாயையும் மற்றொரு காரணமாக தனது எருமை மாட்டை குறித்தும் எழுதியுள்ளார்.
"அந்த எருமை மாட்டின் பாலை குடித்து தான் காவல்துறை தகுதி தேர்வில் நான் தேர்ச்சி பெற்றேன் தற்போது நன்றிக்கடன் செலுத்த வேண்டியது உள்ளது" என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த கான்ஸ்டபிளின் கடிதம் காவல்துறை அலுவலகம் முழுவதும் பரவிய நிலையில் தற்போது மேலும் வைரல் அடைந்து வருகிறது.
கான்ஸ்டபிள் கடிதத்தில், "ஐயா நான் உங்கள் தலைமையில் செயல்படும் வாகன பிரிவில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த இரண்டு மாதங்களாக எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. அதுமட்டுமல்லாமல் எனது வீட்டில் ஒரு எருமை மாடும் இருக்கிறது. அது எனக்கு மிகவும் செல்லம். தற்போது தான் அந்த எருமை மாடு கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதை பார்த்துக் கொள்வதற்கு வீட்டில் யாரும் இல்லை" என்று எழுதியதோடு தொடர்ந்து, "ஏற்கனவே குறிப்பிட்டவாறு அந்த எருமைமாடு எனது வாழ்வில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. அதன் பாலை குடித்து தான் நான் காவல் துறை தேர்வுக்கான ஓட்டங்களில் பங்கெடுத்தேன். நான் காவல் துறையில் சேர்வதற்கு காரணமே அவள்தான். எனது கஷ்ட நஷ்டங்களில் அவள் என்னுடன் இருந்தாள். எனவே அவளுக்கு தேவை ஏற்படும் போது அவளை பார்த்துக் கொள்வது எனது கடமை. எனது தாய் மற்றும் எனது எருமை மாட்டை கவனித்துக் கொள்வதற்கு 6 நாள் விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கான்ஸ்டபிள் பணிபுரியும் பிரிவின் தலைமை காவலரான ஆர்எஸ் மீனா டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில், "எந்த ஒரு விடுமுறை கடிதத்தையும் நான் முக்கியமானதாகவே கருதுகிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் என்னிடம் ஒருவர் விடுமுறை கேட்கும் போது அதை நான் மறுப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக