கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்தாலும் பால் விநியோகத்திற்கு எப்போதும் அரசுகள் தடை விதிப்பது இல்லை.
கடந்த மூன்று மாதங்களாக அரசு நிர்வாகத்தின் பிரதான பிரிவுகளாக உள்ள காவல்துறை, மருத்துவ துறை, வருவாய்துறை பணியாளர்கள் கடுமையாக களப்பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் காவல்துறை பணிகளை வெகுவாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் இத்துறையில் இருக்கும் சிலர் அத்துமீறி பொதுமக்களை அதிகார ஆணவத்துடன் துன்புறுத்துவது, அவமானப்படுத்துவது, தமிழகம் முழுவதும் தொடர்ந்து வருகிறது.
இதற்கு தினந்தோறும் அதிகாலை நேரங்களில் பால் விநியோகம் செய்யும் முகவர்கள் பலியாகி வருகின்றனர். அதனால் காவல்துறையினர் வீடுகளுக்கு நாளை முதல் பால் விநியோகம் செய்ய மாட்டோம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், “அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்கு தடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ள நிலையில் பால் விநியோகத்தில் ஈடுபட்டு பால் முகவர்களை பால் விநியோகம் செய்ய விடாமல் வாகனங்களை பறிமுதல் செய்வது, வாகனங்களை தடுத்து நிறுத்துவது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என பல இடையூறுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், ஆணையாளர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் இருக்கிறது. எனவே நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவல்துறையினரால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை கடை நிலை காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை எவரது வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்யப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக