Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஜூன், 2020

நேர்மையான பிச்சைக்காரன்

 ஒரு நாட்டின் மன்னன் ஒருவன், ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஆசைப்பட்டான். 

அதை சோதிப்பதற்க்காக ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். 

பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியையும், மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு பிச்சைக்காரனுக்கும் கொடு என்று சொன்னான்.

நீண்ட அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போன்ற ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் உள்ள ரொட்டியை அளித்தான். 

பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான். சாமியார் போன்ற நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்து இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று நினைத்து தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. 

எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக்கொண்டு உன்னுடையதை எனக்குக்கொடு என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக்கொண்டனர். 

உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான் மன்னன்.

அன்று மாலையே மன்னனிடம் வேலையாட்கள் அவ்விருவரைப் பற்றிய தகவலை கூறினர். சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியை எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக்கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுப்பதற்கு கிளம்பி விட்டதாகவும், தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் அவனும் அவன் மனைவியும் கண்டனர். வைரக்கற்களை நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினான். 

ஆனால், அந்தப் பிச்சைக்காரன், இந்த ரொட்டியை அளித்த சாமியாரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ரொட்டிக்குள் வைரக் கற்கள் இருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். 

ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால் இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம் என்று கூறியதாகவும் வேலையாட்கள் கூறினர்.

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், கடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல் நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னன், பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக்கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக