வெள்ளி, 26 ஜூன், 2020

இராவணனின் மந்திர சூழ்ச்சி!...


இராமர், கும்பகர்ணனை கடலில் வீசியதைப் பார்த்து வானரங்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதைப் பார்த்த அரக்கர்கள் அங்கிருந்து இலங்கை நகரை நோக்கி ஓடினர். இலங்கை நகரில் இராவணன் மந்திர ஆலோசனை மண்டபத்திற்கு வந்தான். அங்கு அவன் இனி சீதையை நான் எவ்வாறு அடைவது? சீதையை கவர்ந்து வந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் நான் அவளை அடைந்த பாடில்லை. 

இனி என்ன செய்தால் நான் அவளை எளிதாக அடைய முடியும் என ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது மாய வேலையில் வல்லவனான மகோதரன் அங்கு வந்தான். அவன் இராவணனை வணங்கி நின்றான். பிறகு அவன் இராவணனிடம், அரசே! தங்கள் முகம் ஏன் இவ்வளவு வாடி இருக்கின்றது? தாங்கள் எதையோ நினைத்து சிந்தனையில் மூழ்கி இருக்கிறீர்கள் போல் தெரிகிறதே? தங்களின் முக வாட்டத்திற்கான காரணம் என்ன? என்று கேட்டான்.

இராவணன், மகோதரனே! நீ மந்திரத்திலும், தந்திரத்திலும் மிகச் சிறந்தவன். நான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன். அழகில் ஒப்பற்றவளாய் இருக்கும் சீதையை அடைந்தால் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். என்ன செய்தால் அவளை எளிதாக அடைய முடியும். 

மந்திரத்திலும், தந்திரத்திலும் வல்லவனாக இருக்கும் உன்னிடம் ஏதேனும் யோசனை இருந்தால் என்னிடம் கூறு என்றான். மகோதரன், அரசே! பெண்களுக்கு தாய் வீட்டின் மீது பாசம் அதிகம். தாய் தந்தையரின் மேல் அதிக பாசம் வைத்திருப்பார்கள். ஒரு சமயம், தட்ச பிரஜாபதியின் மகளாக, தாட்சாயணியாக அவதாரம் கொண்டு ஈசனை மணந்தாள். 

பின்னர் தட்சன் தான் நடத்திய யாகத்தில் ஈசனை அழைக்காததால் ஈசன் அங்கு செல்லாமல் இருந்தாலும் இறைவனின் ஆணையை மீறி தாட்சாயணி தட்சனின் யாகத்திற்கு சென்றாள். இது போல் பெண்களுக்கு தாய் வீட்டிற்கு செல்வதில் அதிக பிரியமுண்டு.

பெண்கள், தாய் தந்தையின் மேல் அதிக கவனம் செலுத்துவார்கள். இதை மையமாக கொண்டு, மாய வேலையில் வல்லவனாக இருக்கும் மருத்தனை, மிதிலாபுரியை ஆளும் சீதையின் தந்தை ஜனகனாக உருமாறி வரச் செய்து, உன்னை அடையாறு சீதையை வற்புறுத்தி கூறச் சொல்லலாம்.

தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அல்லது தந்தைக்கு தன்னால் எந்த இடரும் வரக்கூடாது என எண்ணி சீதை மனம் மாறுவாள். தங்களையும் நேசிப்பாள். இதைக் கேட்ட இராவணன், மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். 

மகோதரா! என்னே! உன் அறிவு திறமை என பாராட்டினான். இந்த மந்திர சூழ்ச்சியில் எப்படியேனும் நான் சீதையை அடைவேன் என்றான். மகோதரா, நான் அசோக வனத்திற்கு சென்று சீதையுடன் உரையாடிக் கொண்டு இருக்கிறேன். 

அப்பொழுது நீ மருத்தனை ஜனகனாக மாறச் சொல்லி, அவனுடன் அங்கு வா என கூறிவிட்டு அவனை தழுவிக் கொண்டான். அசோக வனத்தில் சீதை, இராவணனின் பெருந்துயரத்திற்கு நடுவில் வேதனையுடன் இராமனை நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது இராவணன் பெண்கள் புடைசூழ, சீதையின் முன் வந்து நின்றான். சீதையின் முன் கைகூப்பி வணங்கி, பெண்ணே! அழகின் வடிவமே! உன்னால் நான் தினம் தினம் வருந்திக் கொண்டு இருக்கிறேன். உன் மீது கொண்ட ஆசையால் நான் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். 

நீ எப்போது என் மீது இரக்கம் காட்ட போகின்றாய். பெண்களுக்கு எப்போதும் இளகிய மனம் உண்டு. நீ என் மேல் ஏன் இரக்கம் காட்ட மறுக்கின்றாய்? உனக்கு என் மேல் என்ன கோபம்? நீ என்னை ஏற்றுக் கொண்டால், உன்னை அரசியாக்கி நான் உனக்கு சேவை புரிந்து என் வாழ்நாளை கழிப்பேன். 

அரண்மனையில் உள்ள பெண்கள் அனைவரும் உனக்கு சேவை புரிவார்கள். நீ மகாராணி போல் இங்கு வாழலாம். நீ இப்போதாவது என் மீது கருணை காட்டு என தரையில் விழுந்து வணங்கினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்