Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 050

பூசலார் நாயனார்...!

தொண்டை நாட்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்தில் பிறந்தவர் பூசலார் என்னும் பெருந்தகையார். சிறு வயது முதலே நஞ்சையும், அமுதமாக உண்ட... கரிய கழுத்தையுடையவனான... திருநீலக்கண்டனின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். மேலும் ஆகம வேத, சாஸ்திர நெறிகளையும் கற்று தேர்ந்திருந்தார்.

இவர் சிறுவயதில் இருந்து வளர வளர சிவபெருமானுக்கு செய்யும் பணிகளில் முதன்மையானது சிவனடியார்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பதே எனவும், மேலும் அதுவே தமது பிறவிப்பயன் எனவும் கருதினார். மேலும் பொருள்தேடி வரும் அடியார்களுக்கு தன்னலம் கருதாது அவர்களுக்கு வேண்டியவற்றை அளித்து வந்தார்.

இந்நிலையில் சிவபெருமானுக்கு தமது ஊரில் திருக்கோவில் அமைத்து அதில் பணிசெய்ய வேண்டும் என்று விரும்பினார். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு அதற்கான பொருள் தம்மிடத்தில் இல்லாமையால் அதற்குரிய பொருளை வருந்தித் தேடினார். இறுதியில் எவ்வளவு முயற்சி செய்தும் அதற்கான பொருளை அவரால் பெற முடியவில்லை.

இதனால் மிகவும் மனம் வருந்திய பூசலார் செய்வதறியாது சித்தம் கலங்கி ஏங்கினார். ஏன் அனைவரும் காணும் வகையில் வெளியில் புற்றிடங்கொண்ட பெருமானுக்கு தம்மால் கோவில் எழுப்ப இயலவில்லை? எம் அகத்தின் உள்ளே அண்ணலாருக்கு என் மனதிற்கு ஏற்ப எவ்வளவு பெரிய கோவில் வேண்டுமானாலும் கட்டலாம் அல்லவா? என்று தமக்குள் எண்ணி அதை செய்யவும் தீர்மானித்தார்.

அதற்கான பணிகளையும் தினந்தோறும் மேற்கொள்ள துவங்கினார். அதாவது, தமது மனதின்கண் திருக்கோவில் எழுப்புவதற்கு தேவையான நிதியை சிறிது சிறிதாக சேர்த்தார். அதன் பின்னர் அந்த நிதியைக் கொண்டு கருங்கல், மரம், சுண்ணாம்பு முதலிய கருவி, கரணங்களை எல்லாம் மனதில் சேர்த்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அப்பணிகளை செய்வதற்காக தச்சர் முதலிய பணியாளர்களையும் மனதில் எண்ணிக் கொண்டார்.

ஒரு நல்ல நாள் பார்த்து... தனி இடத்தில் அமர்ந்து... ஐம்புலங்களையும் அடக்கி... ஆகம முறைப்படி மனதின் உள்ளே கோவில் கட்டத் தொடங்கினார். இரவு, பகலாக கோவில் அமைப்பதையே சிந்தையாகக் கொண்டு கோவிலை அகத்தே வைத்து அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய ஒரு திருத்தலம் அமைப்பதற்கு தகுந்த அளவுப்படி விமானமும், சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் நட்டார்.

சுதை வேலைகள் யாவும் முடிந்து அக்கோவிலினுள்ளே கிணறு, திருக்குளம், மதில் முதலான எல்லாம் வகுத்தமைத்தார். வெளியில் கோவில் எழுப்புவதற்கு எத்தனை நாளாகுமோ அத்தனை நாளானது மனதின் உள்ளே கோவில் எழுப்புவதற்கும் ஆனது. இவ்விதமாக தாம் வகுத்த பணிகள் யாவற்றையும் முழுவதுமாக முடித்த பின்னர் கர்ப்பக்கிரகத்தில் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்ல நாளும், வேளையும் நிச்சயித்தார்.

இவ்விதமாக மனதின் உள்ளே இவருடைய திருப்பணி நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, ஆண்டு வந்த பல்லவ தேசத்து மன்னனான காடவர்கோனாகிய வேந்தன் எம்பெருமானிற்காக கற்கோவில் ஒன்றை கட்டி முடித்தார். அக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு என்று வகுத்து தான் அமைத்த கற்கோவிலில் சிவபெருமானை எழுந்தருளுவிப்பதற்கு பூசலார் மனதில் வகுத்த அந்த நாளையே குறித்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார் மன்னர்.

பூசலாரது அன்பின் திறத்தை உலகோர் அறிந்து கொள்ளும் பொருட்டு திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். நாட்கள் கடந்து கும்பாபிஷேகத்திற்கான நாளும் நெருங்க துவங்கியது. கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவு எம்பெருமான் காடவர்கோனாகிய மன்னனின் கனவில் எழுந்தருளினார். திருநின்றவூரில் குடியிருக்கும் நம்முடைய அன்பனாகிய பூசலார் தமது உள்ளத்தில் நீண்ட நாள் நினைத்து கட்டி முடித்துள்ள கோவிலுக்கு நாளை கும்பாபிஷேகம். அந்த ஆலயத்திற்குள் நாளை நாம் எழுந்தருள சித்தம் கொண்டுள்ளோம். ஆதலால் நீ இங்கு செய்யத்துணிந்த கும்பாபிஷேகத்தை வேறு ஒரு நாளில் வைத்துக்கொள்வாயாக என்று மொழிந்து மறைந்தருளினார்.

பல்லவர்கோன் துயிலில் இருந்து விழித்து எழுந்தார். எம்பெருமான் தன் கனவில் தோன்றியதையும், அதில் அவர் உரைத்ததையும் எண்ணி வியப்பு கொண்டார். மேலும் இறைவன் விருப்பம் கொண்டு செல்ல துவங்கும் வகையில் அமைத்த பெரிய திருக்கோவிலை அமைத்த பெருந்தகையாரை நேரில் சென்று காண விரும்பி பொழுது விடிவதற்குள் அமைச்சருடனும், பரிவாரங்களுடனும் திருநின்றவூரை அடைந்தார்.

திருநின்றவூரை அடைந்த அரசன் அவ்வூரில் இருந்தவர்களை நோக்கி பூசலார் அமைத்துள்ள திருக்கோவில் எங்குள்ளது? என்று கேட்டார். அதைக்கேட்ட நின்றவூர் மக்கள் பூசலார் இவ்வூரில் எந்தவிதமான கோவிலையும் கட்டவில்லை என்று கூறினார்கள். அவர்களின் கூற்றுகளில் நம்பிக்கை இல்லாத வேந்தன் ஊர் முழுவதும் ஏதேனும் புதியதாக கோவிலை கட்டியுள்ளார்களா? என தேடினார். எவ்விடத்தில் தேடியும் எந்தவொரு கோவிலும் இல்லை. இறுதியில் மன்னன் அவ்வூரிலுள்ள அனைத்து அந்தணர்களையும் வரவழைத்து பூசலாரைப் பற்றி வினவ, அவர்களின் மூலம் பூசலார் இருக்குமிடத்தை தெரிந்து கொண்டார் மன்னர்.

பூசலார் இருக்கும் இடத்தை அறிந்ததும் அவர் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டார் மன்னர். பூசலாரை நேரில் கண்டதும் அவரை வணங்கி தேவரே...!! எம்பெருமான் என் சொப்பனத்தில் எழுந்தருளி தாங்கள் எம்பெருமானுக்காக திருக்கோவில் கட்டி அமைத்துள்ளதாகவும், அக்கோவிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்றும், தாங்கள் எழுப்பிய திருக்கோவிலில் எழுந்தருள விருப்பம் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

ஆகையால் யாம் காஞ்சியில் கட்டி முடித்து வைத்துள்ள திருக்கோவில் கும்பாபிஷேகத்தை வேறு நாள் பார்த்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு அருளினார். அதைக் கேட்டதும் தாங்கள் கட்டி முடித்துள்ள திருக்கோவிலை தரிசித்து வழிபட பெருமகிழ்ச்சி கொண்டு வந்திருப்பதாகவும் தாங்கள் அமைத்துள்ள அத்திருக்கோவில் எங்குள்ளது என்றும் கனிவோடு வினவினார் மன்னன். பூசலார், அரசனின் உரையைகேட்டு வியப்பில் மூழ்கினார். அவர் கொண்ட மகிழ்ச்சி அளவில்லாமல் இருந்தது.

மகிழ்ச்சி கொண்ட நிலையில் மன்னரான காடவர் கோமானே...!! அடியேனையும், ஒரு பொருளாகக் கொண்டு இறைவன் இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினார் போலும். மேலும் அவருடைய அருளை எண்ணி என்ன செய்வேன்? என்று மொழிந்தார். பின்பு நிகழ்ந்தவற்றை உரைத்தார். எம்பெருமானுக்கு ஆலயம் அமைக்க அரும்பாடு பட்டேன் என்றும், பெருமளவு பொருள் இல்லா நிலையில் எம்பெருமானுக்கு கோவில் கட்ட முடியவில்லை என்றும் கூறினார். வேறு வழியின்றி எனது மனதில் கோவில் கட்டினேன். இன்று அவரை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டையும் செய்து கும்பாபிஷேகம் புரிகிறேன் என்றார்.

அடியார் மொழிந்ததை கேட்டு மன்னன் வியப்படைந்தார். இறைவழிபாட்டின் இன்றியமையாத சக்தியை உணர்ந்தார். அரசன் அதிசயித்து பூசலாரை நிலமுற்றத் தாழ்ந்து வணங்கி தனது நகருக்கு சென்றார். பூசலார் சிவபெருமானை உள்ளத்தில் நினைத்து பூஜையை தொடங்கினார். அன்று முதல் தினந்தோறும் முக்காலமும் ஆகம நெறிவழுவாமல் நித்திய நைமித்தியங்களைச் செய்து உள்ளக் கோவில் முக்கண்ணப் பெருமானை வழிபட்டு வந்த நாயனார், பிறவாப் பேரின்பமாகிய பெருமாளின் திருவடி நிழலை அடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக