Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 செப்டம்பர், 2020

வடதிருமுல்லைவாயில் - சென்னை

 Thirumullaivoyal Masilamaniswara  Temple,திருமுல்லைவாயில்,மாசிலாமணீஸ்வரர்,நிர்மலமணீஸ்வரர்,ஈசனை தேடி எனது  பயணங்கள் ... ...:::குமரேசன்

இறைவர் திருப்பெயர் : நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : லதாமத்யாம்பாள், கொடையிடைநாயகி, கொடியிடையம்மை.
தல மரம் : முல்லை.
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - திருவுமெய்ப் பொருளுஞ்.

தல வரலாறு:

இது தொண்டை நாட்டுத் தலம்; (வட) திருமுல்லைவாயில் ஆகும்; சோழநாட்டில் - தஞ்சை மாவட்டத்தில் (தென்) திருமுல்லைவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வாளால் வெட்டப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை அவனது எதிரி குறும்பர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக்கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைகை கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான்.

அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழிருந்து இரத்தம் வருவதை கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். இறைவன் அவன்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் குறும்பர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வென்று தனக்கு உதவி செய்த இறைவனின் கருணையைப் போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். குறும்பர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அதுவே இந்த மாசிலாமணி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது மூலவர் கருவறை முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை இன்றும் காணலாம்.

தெற்கில் உள்ள ராஜகோபுரம் இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகும். தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி நம்மை வரவேற்கிறார். தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.

அதைகடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் மற்றும் இறைவி இரண்டும் கிழக்கு நோக்கி இருப்பதும், இறைவி கொடியிடை நாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலப்புறம் இருப்பதும் இக்கோவிலின் ஒரு சிறப்பம்சமாகும்.

தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நால்வர் திருஉருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. இத்தலத்து இறைவி கொடியிடை அம்மனை பெளர்ணமி நாளில் மாலை வேளையில் வழிபடுவது மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.

இத்தலத்தில் முருகபெருமான் ஒரு திருமுகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும், தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

மூலவர் அற்புதமான சுயம்பு மூர்த்தி; உயரமான லிங்கம். மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருக்கும், ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது; ஆவுடையாருக்கு மட்டும் தான். வருடத்திற்கொருமுறை - சித்திரை சதயத்தில் சந்தனக் காப்பு களைய்பபட்டு மீண்டும் சார்த்தப்படுகிறது. அது அடுத்த சித்திரை சதயம் வரை அப்படியே சுவாமி மீது இருக்கும். சுவாமிக்கு, வெந்நீர் அபிஷேகம். அபிஷேக காலங்களில் மேன்மேலும் சந்தனம் சார்த்தப்படும்; ஆனால் களையப்படுவதில்லை.

இதனால் சுவாமிமீது எப்போதும் சந்தனக் காப்பு இருந்து கொண்டே இருக்கும். இத்தலத்தில்தான் சிறப்புமிக்க வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய 'பச்சையம்மன் கோயிலும்' உள்ளன. இக்கோயில் தொடர்பாகச் சொல்லப்படும் செவிவழிச் செய்தியொன்று வருமாறு :- சென்னைப் பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை; சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை; இத்தலத்து கொடியிடை அம்மை - ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டவை என்றும்; வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.


சிறப்புக்கள் :

நந்தி கிழக்கு நோக்கியுள்ளது. (தல வரலாறு காரணமாக) .

தொண்டைமான் கட்டிய திருக்கோயில்; சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது.

எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருக்கும்.

போன்: 

 +91-44- 2637 6151

அமைவிடம் மாநிலம் :

சென்னை - ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது. பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயிலை அடைந்து 1-கி. மீ. சென்று கோயிலை அடையலாம். மெட்ரோ ட்ரெயின் மார்க்கமும் உள்ளது.

வாளால் வெட்டப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.

மூலவர் அற்புதமான சுயம்பு மூர்த்தி; உயரமான லிங்கம். மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!