நமக்கு முந்தைய தலைமுறை சட்டைப்பையில் ஒரு சின்ன நோட்புக்கும், ஒரு
பேனாவும் சொருகி வைத்துக் கொண்டு அலைந்தது. அந்த புத்தகம் தான் அவர்களுடைய ஒட்டு
மொத்த கணக்கு வழக்குகளுக்குமான ஆதாரம். அதில் தான் விலாசங்களும், தொலை பேசி
எண்களும், கடன் பாக்கிகளும் எழுதப்பட்டிருக்கும்.
இன்றைக்கு அது டிஜிடல் மயமாகிவிட்டது. நமது கையில் இருக்கும்
ஸ்மார்ட்போன்கள் தான் நமது நடமாடும் தகவல் பெட்டகம். தொலை பேசி எண்களானாலும் சரி,
தகவல்களானாலும் சரி, வங்கிக் கணக்கு விஷயங்களானாலும் சரி எல்லாமே அந்த கையடக்க
பெட்டிக்குள் டிஜிடல் வடிவத்தில் இளைப்பாறுகின்றன.
டிஜிடல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா ? எனும் கேள்வி இன்றைக்கு
மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை
நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள். அது தருகின்ற வசதிக்காக, சில சவால்களை
எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.
உதாரணமாக நீண்ட நெடிய கியூவில் சில மணி நேரங்கள் காத்திருப்பதை விட
ஒரு சின்ன ஆபத்து வரலாம் எனும் எச்சரிக்கை உணர்வுடன் ஆன்லைனில் பில் கட்டுவதையே
மக்கள் இன்று விரும்புகின்றனர். தியேட்டரில் கவுண்டர் முன்னால் அதிகாலையிலேயே
நின்று மண்டை உடைய, இரத்தம் சொட்டச் சொட்ட முதல் காட்சி டிக்கெட் வாங்கியதெல்லாம்
வரலாறுகளாகிவிட்டன. இன்று ஏதோ ஒரு ஆப் தான் நமக்கு டிக்கெட்களை வசதியாய் வாங்கித்
தருகிறது.
வணிகம் எப்போதும் மக்களுடைய வசதிக்கு ஏற்ப கடைகளை விரித்துக் கொண்டே
இருக்கும். இன்றைக்கு மக்களின் டிஜிடல் பயன்பாட்டை முன்னிறுத்தி தான் ஏகப்பட்ட
புதிய பிஸினஸ் முறைகள் கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன. டிஜிடலைத் தொடாத எந்த
தொழிலும் இனிமேல் வெற்றி பெற முடியாது என்பது எழுதப்படாத விதி. அது உணவகம்,
மருத்துவம் போன்ற அடிப்படை விஷயங்களானாலும் கூட.
டிஜிடல் வாலெட்கள் இன்றைக்கு வசீகர அம்சமாக மாறியிருப்பதற்கும்,
புதிது புதிதாய் முளைத்தெழும்புவதற்கும் அது தான் காரணம். உதாரணமாக பேடிஎம்,
மொபிவிக், பேயு, கூகிள் பே, ஆப்பிள் பே, ஓலா மணி இத்யாதி இத்யாதி என ஏகப்பட்ட
வாலெட் சேவைகள் இன்றைக்கு களத்தில் குதித்திருக்கின்றன. அவற்றில் சில, மிக
வெற்றிகரமாக காலூன்றியும் இருக்கின்றன.
பயனர்களுக்கு எதைப் பயன்படுத்தலாம் ? எது நல்லது ? எது ஆபத்தில்லாதது
எனும் கேள்விகள் எழுவது சகஜம். குறிப்பாக சில நிறுவனங்கள் ஏகப்பட்ட தள்ளுபடிகளை
அள்ளி வீசுகின்றன, ஏகப்பட்ட ‘கேஷ் பேக்’ ஆஃபர்களை கொட்டித் தருகின்றன. ‘ஆயிரம்
ரூபாய்க்குப் பொருள் வாங்கினேன். பொருளும் நல்லாயிருக்கு முன்னூறு ரூபா கேஷ்பேக்கா
வந்துடுச்சு’ என மக்கள் பேசுவதை அடிக்கடி கேட்கமுடிகிறது.
இவ்ளோ கம்மியான விலைக்கு பொருளை விற்றால் எப்படி நிறுவனத்துக்குக்
கட்டுப்படியாகிறது எனும் கேள்வி கூட சில வேளைகளில் நமக்கு எழுவதுண்டு. ஒரு
விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். லாபம் எனும் விஷயம் இல்லாமல் எந்த நிறுவனமும்
அதன் சுண்டு விரலைக் கூட பயனர்களை நோக்கி நீட்டுவதில்லை. பெரும்பாலான டிஜிடல்
வாலெட் நிறுவனங்களும் அப்படித் தான்.
இவை பயனர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஒரு பாலம் போல
இருக்கின்றன. பயனர்களின் தேவையை, விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி தங்கள் மூலமாக
பரிவர்த்தனை செய்கின்றன. இந்த நிறுவனங்களில் லாபம் பல வகைகளில் வருகின்றன. ஒன்று,
விற்பனையாளர்களிடமிருந்து ஒரு தொகையை கமிஷனாகப் பெறுகின்றன. சில சேவைகளுக்கு
பயனர்களிடமிருந்தே கட்டணத்தைப் பெறுகின்றன.
இன்னொன்று தங்கள் மூலமாக நடைபெறுகின்ற பரிவர்த்தனைகளான பல கோடி
ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட காலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து பல
இடங்களில் முதலீடு செய்கின்றன.
உதாரணமாக, உங்களுக்கு 300 ரூபாய் பணம் திரும்ப வருகிறதெனில் அது
உங்கள் பாக்கெட்டில் பணமாக வருவதில்லை. அது பேடிஎம் மணியாகவோ, ஓலா மணியாகவோ ஏதோ
ஒரு டிஜிடல் வடிவத்தில் தான் இருக்கும். உண்மையில் அந்த பணம் நீங்கள் பயன்படுத்தும்
வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஒரு கோடி பேருக்கு 300 ரூபாய்
கிடைத்தால் அந்த முன்னூறு கோடிரூபாயும் உண்மையில் அவர்களிடம் தான் இருக்கும்.
இந்த பணத்தை வைத்திருக்கின்ற வங்கியும் நிறுவனத்துக்கு வட்டி
கொடுக்கும், அந்த பணத்தை முதலீடு செய்யும்போதும் கணிசமான லாபம் கிடைக்கும், அந்த
பரிவர்த்தனைகளுக்கும் நல்ல கட்டணம் கிடைக்கும், இவையெல்லாம் போக விளம்பரங்களை
தளங்களில் வெளியிடுவதன் மூலமும் பணம் கிடைக்கும்.
இந்த நிறுவனங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் ஆபத்து உண்டா ? என்றால்
சில ஆபத்துகள் உண்டு என்பதே பதில். உதாரணமாக, இவை உங்களுக்கும் உங்களுடைய
வங்கிக்கும் இடையேயான பாலமாக இருக்கின்றன. உங்களுடைய முக்கியமான தகவல்கள் இந்த
இடைநிறுவனத்திற்குக் கிடைக்கிறது. அவற்றை அவை தவறாகப் பயன்படுத்துவதில்லை, காரணம்
நீங்கள் அவர்களுடைய கஸ்டமர். ஆனால் அவர்களிடமிருந்து அவை திருடப்படலாம்,
ஹேக்கர்களால் கடத்திச் செல்லப்படலாம் எனும் ஆபத்து உண்டு.
எனினும், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இத்தகைய நிறுவனங்களின்
பாதுகாப்பையும் என்கிரிப்ஷன் டெக்னாலஜி மூலமாக உறுதி செய்கின்றன. இதன்மூலம்
தகவல்கள் திருடப்படுவது குறையும். ஆயிரம் தான் இருந்தாலும், டிஜிடல்
பயன்பாட்டுக்கே உரிய ஆபத்துகள் இவற்றிலும் உண்டு
டிஜிடலை முழுமையாய் ஒதுக்கி விடவே முடியாது எனும் காலகட்டத்தில் நாம்
வாழ்கிறோம். விரும்பியோ, விரும்பாமலோ அந்த சூழல் உருவாகியிருக்கிறது.
இத்தகைய சூழலில் பாதுகாப்பாய் இருக்க இந்த அடிப்படை விஷயங்களை மனதில்
கொள்ளுங்கள்.
1. கஷ்டம் பார்க்காமல் மிகவும் கடினமான பாஸ்வேர்ட் பயன்படுத்துங்கள்.
அதை அடிக்கடி மாற்றுங்கள்.
2. உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே
இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
3. பொது வைஃபைகளில் அதை இணைக்காதீர்கள். வீட்டை விட்டு வெளியே
வந்தால் வைஃபையை அணைத்தே வையுங்கள்.
4. புதிதாக வருகின்ற பாதுகாப்பு அப்டேட்களை உதாசீனம் செய்யாதீர்கள்.
5. எந்த ஆப்பைப் பயன்படுத்தினாலும் அதை பயன்படுத்தியபின் அதை விட்டு
முழுமையாக வெளியே வாருங்கள்.
6. அடிக்கடி உங்களுடைய கணக்கு வழக்குகளைப் பார்த்து ஏதேனும்
சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என கவனியுங்கள்.
7. பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம்
செய்யாதீர்கள்.
8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
9. சந்தேகத்துக்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.
10. உங்கள் பாஸ்வேர்ட், பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்ட் போன்ற
அனைத்தையும் பாதுகாப்பாகவே வைத்திருங்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக