Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 25 பிப்ரவரி, 2019

ஐபோன் வரலாறு !



Image result for iPhone history
வரலாற்றில் பல விஷயங்கள் நம்மை வியக்க வைக்கும். சில விஷயங்கள் தான் வரலாற்றையே வியக்க வைக்கும். அப்படி தொழில்நுட்ப வரலாற்றை வியக்க வைத்த ஒரு விஷயம் தான் ஐபோன் ! மொபைப் புரட்சியை மிக எளிதாக ஐபோனுக்கு முன், ஐபோனுக்குப் பின் என இரண்டாகப் பிரித்து விடலாம். இன்றைய ஸ்மார்ட் போன்களில் காணப்படும் அம்சங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஐபோனின் பாதிப்பு என்பதை மறுக்க முடியாது.
“இதோ ஐபோன்” என ஸ்டீவ் ஜாப்ஸ் 2007ம் ஆண்டு அறிவித்த போது அந்த போன் இப்படி ஒரு டிஜிடல் சுனாமியை உருவாக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. 3.5 இன்ச் திரையுடன், ‘இது தொடக்கம் தான்’ எனும் பஞ்ச் லைனுடன் அது அறிமுகமானது. 

 இன்றைக்கு சுமார் 130 கோடிக்கு மேல் ஐபோன்களை விற்று உலகிலேயே மொபைல் நிறுவன சக்கரவர்த்தியாய் அமர்ந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய விஷயம் ஐபோன் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டாம். இன்றைய தேதியில், நிறுவனத்தின் வருமானத்தில் பாதிக்கு  மேல் ஐபோன் விற்பனையினால் தான் கிடைக்கிறது.

2007ம் ஆண்டு ஜனவரி 9ம் தியதி ஆப்பிள் ஐபோன் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது குறித்த தகவல்கள் மக்களை தூங்க விடாமல் செய்தன. ஜூன் 29ம் தியதி ஐபோன் கடைகளுக்கு வந்தபோது மக்கள் சினிமா டிக்கெட்டுக்கு காத்திருப்பது போல காத்திருந்து வாங்கினார்கள். அந்த வார இறுதியில் மட்டும் விற்ற ஐபோன்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ! சில மாதங்களிலேயே அது பத்து இலட்சமாக எகிறியது. 

அடுத்த ஆண்டு 3ஜி அறிமுகமானது ! ஐபோனின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு அது சட்டென கொண்டு சென்றது. காரணம் ‘ஆப் ஸ்டோர்’ அப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகெங்கும் உள்ள பல இலட்சம்  கணினி ஆப் டெவலப்பர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்த நிகழ்வு அது. அது தான் மொபைலாக இருந்த ஐபோனை ஒரு குட்டி கணினியாக மாற்றியது.  

அதன் பின் ஆண்டு தோறும் ஐபோன் ஒரு புதிய வடிவத்தை வெளியிடுவதும், மக்கள் கால்கடுக்கக் காத்திருந்து  வாங்குவதும் வாடிக்கையாகி விட்டது. 

ஆரம்பம் முதலே கேமராவில் பார்வையை செலுத்தி வருகின்ற ஐபோன் வெர்ஷன் 4 வந்த போது செல்ஃபி கேமராவையும், எச்.டி வீடியோ ரிக்கார்டிங்கையும் அறிமுகப்படுத்தியது. உலகெங்கும் செல்ஃபி ஜூரம் பற்றிக்கொள்ள பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு அது. கேமராவின் தரத்தைப் பொறுத்தவரை ஐபோன் தான் இப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. ஐடியூன்ஸ், சிரி, பெரிய திரை, 3டி டச் என புதுமைகளை புகுத்துவதிலும் ஐபோன் தான் முதலிடத்தில் இருக்கிறது ! 

ஐபோன் வெளியாகிய முதல் ஐந்தாறு வருடங்களுக்கு ஆப்பிளுக்கு போட்டியே இல்லை. அதன் பின்பு தான் சந்தையில் குறைந்த விலையில் ஐபோனுக்குப் போட்டியாய் போன்கள் களமிறங்கின. இருந்தாலும் இன்றும் ஐபோனின் வசீகரத்தைக் குறைக்க முடியவில்லை. 

கடந்த ஆண்டு பத்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியை ஆப்பிள், மூன்று ஐபோன்களை வெளியிட்டது ஐபோன் 8, 8 எஸ் மற்றும் ஐபோன் 10. அதில் ஐபோன் 10 முற்றிலும் புதிய வடிவத்தில், புதிய அம்சங்களுடன் அறிமுகமானது. ஐபோன் வரலாற்றின் அடுத்த மிகப்பெரிய மாறுதல் இது என கருதப்படுகிறது. இதன் விலை ஏறக்குறைய ஒரு இலட்சம் என்ற போதிலும், இதுவரை சுமார் மூன்று கோடி ஐபோன் 10 கள்  விற்பனையாகியிருக்கின்றன ! 

விலை அதிகமானாலும் பரவாயில்லை என உலகம் போட்டி போட்டுக்கொண்டு ஐபோனை வாங்க முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பாதுகாப்பு. இன்னொன்று தரம் ! அந்த இரண்டு விஷயங்களிலும் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாத நிலை தான் ஆப்பிளின் அசுர பலத்தின் காரணம்.  

தன்னை ஒரு ஐபோன் கம்பெனி என அடையாளப்படுத்துவதில் ஆப்பிள் திருப்தி அடைவதில்லை. அதனால் தான் தொடர்ச்சியாக பல புதிய அம்சங்களை அது கொண்டு வருகிறது. ஐபேட், ஆப்பிள் டிவி போன்றவை அந்த வரிசையில் வருகின்றன.  இப்போது ஆப்பிள் வாட்ச் மீது அது தனிக் கவனத்தை செலுத்துகிறது. ஆப்பிள் கேட்ஜெட்களில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட் மற்றும் ஆகுமென்டர் ரியாலிடி தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது.  

ஒரு புறம் இப்படி இருந்தாலும் மக்கள் ஐபோனுக்கு அடிமையாகி விடுகிறார்கள் எனும் எதிர்ப்பும் ஒரு புறம் எழுகிறது. அதை சரிசெய்ய ஆப்பிள் நிறுவனமே சில நாட்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இனிமேல் நாம் எவ்வளவு நேரம் ஐபோனைப் பயன்படுத்துகிறோம், எந்த ஆப் எவ்வளவு நேரத்தை எடுத்திருக்கிறது போன்ற தகவல்களையெல்லாம் திரையிலேயே அது காட்டப் போகிறது. நம்முடைய போன் பயன்பாட்டை, நாம் குறைக்க வேண்டுமென, போனே நம்மிடம் கூறுவது புதுமை தான் இல்லையா?
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!