Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

குரங்கு விடு தூது

பரமார்த்த குருவுக்கு உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காகத் தன்னுடைய புத்திகெட்ட சீடர்களுடன் ஆலோசனை கேட்டார். குருதேவா! திருட்டுத்தொழில் செய்லாம்? என்றான், மட்டி. மாட்டினால் அடிப்பார்களோ! என்றான் மடையன்.

 முட்டாளுக்கு ஒரு யோசனை ஒரு குரங்கைப் பிடித்து அதற்கு பொருள்களை திருடுவதற்க்கு கற்றுத் தரலாம்! என்றான். ஆகா! அருமையான திட்டம். ஆனால் எப்படிக் குரங்கைப் பிடிப்பது? என்று கேட்டார், பரமார்த்தர்.

 பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன? எனக் கேட்டான், மண்டு. பிள்ளையாரைப் பிடித்தால், அது தானாகவே குரங்காக மாறி விடும் என்றான், மூடன். இப்பொழுதே சென்று பிள்ளையாரைப் பிடிப்போம், என்று சொல்லி பரமார்த்தரும், சீடர்களும் சென்றனர்.

 அரச மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டதும் பிள்ளையார் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். சீடர்களே, பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார், பரமார்த்தர். சீடர்களும் சரி என்று பிள்ளையார் சிலையை எடுக்க ஆரம்பித்தனர். அப்போது, குரங்காட்டி ஒருவனிடம் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று அங்கே வந்தது. அதைக் கண்ட பரமார்த்தர், சீடர்களே! இதோ குரங்கு வந்து விட்டது! விடாதீர்கள், பிடியுங்கள்! என்று கத்தினார்.

 மட்டியும் மடையனும் அந்தக் குரங்கைப் பிடித்து விட்டனர். அதைக் கண்ட பரமார்த்தர், இது இராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயரே தான்! என்று சொல்லி அதன் கால்களில் விழுந்து வணங்கினார். சீடர்களும், ரங்கா, ரங்கா! என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

 மடத்துக்கு வந்ததும், குரு சுருட்டு பிடிக்கிறார். குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா! என்று அதை ஏவி விட்டான் முட்டாள். அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்து, ஒரு மணி நேரம் கழித்து அதன் இரண்டு கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன.

 வாணக்கடைக்குச் சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று நினைத்துக் கொண்டு வந்து விட்டது. அதைக் கண்ட மடையன், சொன்னபடி சுருட்டுகளை சுருட்டிக்கொண்டு வந்து விட்டதே! என்று மகிழ்ந்தான்.

 பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்த மகிழ்ச்சியில், சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்து திரிக்கு நெருப்பு வைத்தான், முட்டாள். ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் இருந்தனர்.

 அடுத்த நொடி, டமால், டுமீல் என்று ஒவ்வொருவர் வாயிலும் இருந்த பட்டாசு வெடித்தது. வாய் இழந்த சீடர்கள், ஐயோ, ஆஞ்சநேயா! என்று அலறினர்.

 நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், இனி மேலாவது எனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள் என்று எச்சரித்தார். குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் ஒரு பட்டுத்துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள் என்றனர் சீடர்கள். பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.

 அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு அரண்மனையில் அரசனின் பட்டுத் துணிகளும், வைரக் கிரீடத்தையும், குரங்கு திருடி வந்தது. அதைப் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர். குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்! என்றான் மண்டு.

 பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி மகுடத்தை அவர் தலையில் சூட்டிப்பார்த்து, முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள் என்று புகழ்ந்தான் மட்டி. மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.

 வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்! என்றார், பரமார்த்தர். தெருவில் வந்த நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும், சீடர்களையும் கைது செய்தனர். அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குருவே! மனிதர்களால்தான் நமக்குத்தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்து விட்டதே! என்று புலம்பினார்கள் சீடர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!